மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. டெல்லியில் 45 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. “இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்களா? நாங்கள் நிறுத்தி வைக்கவா?” என நேற்று மத்திய அரசிடம் கேட்டது உச்ச நீதிமன்றம். இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

Delhi farmer protest

Also Read: `மறு அறிவிப்பு வரும் வரை வேளாண் சட்டங்களுக்கு தடை!’ – அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

அத்துடன் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக எச்.எஸ். மன், பிரமோத் குமார் ஜோஷி, அலோக் குலாட்டி, அனில் கன்வட் ஆகிய வேளாண் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது நீதிமன்றம். அந்தக் குழு நீதிமன்ற அலுவல்களின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று சொல்லியிருக்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவைப் பிறப்பித்தாலும் தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது சம்யுக் கிஷான் சங்கம். இது தொடர்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், டெல்லி போராட்டக்களத்தில் கலந்துகொண்டவருமான ஈசனிடம் பேசினோம். “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறோம். ஆனால், இதை காரணமாக வைத்து மத்திய அரசு போராட்டத்தைக் கலைத்து விடும். மூன்று மாதங்கள் ஆறப்போட்டு, மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுப்பார்கள்.

ஈசன்

அப்போது ஒருவேளை குழுவின் அறிக்கை அடிப்படையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவிடவும் வாய்ப்புள்ளது. இடைக்காலத் தடை உத்தரவை வைத்து உடனடியாக போராட்டக்காரர்களைக் கலைத்து விடும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடும். பிரச்னையை ஆறப்போட்டு, பின்பு நீதிமன்றம் வாயிலாகவே சட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இருக்கலாம். உச்ச நீதிமன்றம் குழு அமைத்திருப்பதை மத்திய அரசு வரவேற்றுள்ளது இந்தச் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கினால்தான் விவசாயிகள் நிம்மதியடைய முடியும்” என்று சொல்லி முடித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.