“திராவிட அரசியலுக்கு மாற்றை இப்போது ஏற்படுத்த முடியாது என்று முடிவெடுத்த பிறகே பா.ஜ.க – டெல்லி மேலிடம் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு ஒப்புக்கொண்டிருக்கிறது” என்கிறார்கள் பா.ஜ.க தரப்பினர். இரண்டு மாதங்களாக நீடித்துவந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்குப் பின்னால் ரஜினி, தன் அரசியல் வருகைக்குக் கொடுத்த எண்ட் கார்டும் ஒரு காரணம் என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி –
அமித் ஷா – ஓ.பன்னீர்செல்வம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த நவம்பர் மாதம் சென்னை வந்திருந்தார். அப்போது அ.தி.மு.க தலைமை, இந்தச் சந்தர்ப்பத்திலேயே தங்கள் கூட்டணியை இறுதி செய்துவிடலாம் என்று முடிவெடுத்தது. அதன்படி அமித் ஷா கலந்துகொண்ட அரசு நிகழ்வில், “அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும்“ என்று அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். பன்னீரின் பேச்சை வழிமொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க வலியச் சென்று கூட்டணி அறிவிப்பை வெளியிட்டும், அவர்களுக்குப் பின்னால் பேசிய அமித் ஷா, கூட்டணி குறித்த எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இது அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க மாநிலத் தலைவர்கள் பலரும் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் குறித்து எதிர்மறையான கருத்துகளையே சொல்லிவந்தனர்.

“அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்திருப்பது அவர்கள் கட்சியின் முடிவு. நாங்கள் டெல்லி தலைமை சொல்லும் வரை முதல்வர் வேட்பாளர் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது” என்று வெளிப்படையாகச் சொல்லிவந்தனர். அதற்கு ரஜினி என்கிற தனி நபரை பா.ஜ. க முழுமையாக நம்பியதே காரணம். அதற்கேற்பவே டிசம்பர் 3-ம் தேதி தனது அரசியல் இயக்க அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. இதனால் புதுத் தெம்புடன் பா.ஜ.க தமிழகத்தில் பவனிவந்தது. குறிப்பாக, இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அணியைக் கட்டமைத்துவிடலாம் என்றும் திட்டமிட்டது. மேலும், அ.தி.மு.க-வுடன் கூட்டணி தொடர்கிறதா, இல்லையா என்பதைக்கூட அறிவிக்காமல் இருந்தது.

பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ ரவி

இந்தநிலையில், டிசம்பர் 29-ம் தேதி அன்று அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று தடாலடியாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதை அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன. ஆனால், பா.ஜ.க சார்ப்பு அமைப்புகளுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும், டெல்லி பா.ஜ.க தலைமை அமைதி காத்தது. அதன் பிறகு தங்கள் பக்கம் பா.ஜ.க வந்துவிடும் என்று அ.தி.மு.க தலைமை எதிர்பார்த்தது. ஆனால், அதற்குப் பிறகும், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை செய்த பிறகே அறிவிப்போம்” என்றார் பா.ஜ.க-வின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி ரவி. இதனால், “அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தொடர்வது சந்தேகம். அவர்கள் வேறு கணக்கில் இருக்கிறார்கள்” என்று அ.தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்தனர்.

பா.ஜ.க-வினர் தொடர்ந்து அமைதியாக இருந்தனர். அதற்குக் காரணம் ரஜினியுடன் பா.ஜ.க மேலிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தது. குறிப்பாக, ரஜினி மன்ற நிர்வாகிகளிடம் ரஜினியை அரசியலுக்குக் கொண்டு வாருங்கள் என்று அறிவுறுத்தினார்கள். அதற்குத் தோதாக, ரஜினி ரசிகர்கள் கடந்த 10-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். `வா தலைவா’ என்கிற கோஷத்தோடு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டத்துக்குப் பிறகு ரஜினி மனநிலையில் மாற்றம் ஏற்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். டெல்லி பா.ஜ.க தலைமையும் அமைதியாக இதை வேடிக்கை பார்த்தது. ஆனால், அதற்கு மறுதினமே “என்னை யாரும் கஷ்டப்படுத்த வேண்டாம். எனது அரசியல் முடிவை ஏற்கெனவே அறிவித்துவிட்டேன்” என்று அடுத்த அறிக்கை கொடுத்தார் ரஜினி. இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மாற்றம் என்கிற கனவோடு காத்திருந்த பா.ஜ.க-வுக்கும் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.

ரஜினி

அதன் பிறகு டெல்லி பா.ஜ.க தலைமை, `இனியும் அமைதி காக்க வேண்டாம். நம்மிடம் ஏற்கெனவே கூட்டணிக்குத் தூதுவிட்ட அ.தி.மு.க-வின் தலைமையை ஏற்றுக்கொள்ளலாம்’ என்று முடிவெடுத்தனர். இந்தத் தகவல் மாநிலப் பொறுப்பாளர் சி.டி.ரவிக்குச் சொல்லப்பட்டது. அவரும் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை”என்று அறிவித்துவிட்டார்.

Also Read: `தமிழகத்தில் ரஜினி… மேற்கு வங்கத்தில் கங்குலி’ – அரசியல் அழுத்தம் கொடுக்கிறதா பா.ஜ.க?

இது குறித்து பா.ஜ.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது “ரஜினியின் அரசியல் என்ட்ரி இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். எங்களுடன் அணி சேராவிட்டாலும் பராவாயில்லை. பா.ம.க., தினகரன் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து புதிய அணியைக் கட்டமையுங்கள் என்றே அவரிடம் வலியுறுத்தினோம். அவரது வருகைக்காகவே அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்தோம். ஆனால், அவருடைய ரசிகர்கள் இவ்வளவு கோரிக்கை வைத்த பிறகும், அவர் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. டெல்லியிலிருந்து ரஜினியைத் தொடர்புகொண்டு பேசினார்கள். ஆனால், அரசியல் தனக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று தெளிவாக விளக்கிவிட்டார் ரஜினி. அதற்குப் பிறகே மாற்றத்துக்கு இனி வாய்ப்பில்லை என்று முடிவெடுத்து அ.தி.மு.க-வை முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டோம்” என்கிறார்கள்.

ரஜினி ரசிகர்கள் போராட்டம்

தி.மு.க தரப்பு, அ.தி.மு.க – பா.ஜ.க இடையே கூட்டணி உருவானால் அவர்கள் வசமுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களுக்குக் குடைச்சலைக் கொடுப்பார்கள் என்று கணக்கு போடுகிறது. எனவே, மாநிலம் முழுதுமுள்ள தங்கள் வழக்கறிஞர்களைத் தீவிரக் காணிப்பில் இருக்கவும் உத்தரவிட்டிருக்கிறது அந்தக் கட்சித் தலைமை.

`மாற்றம் என்பதே மாறாதது’ – ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று இப்போது கிடையாது என்பது மட்டும் தெரிகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.