ஜல்லிக்கட்டு அன்று சமூகத்திற்கோ, காளைக்கோ முதல் மரியாதை வழங்கப்படக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த அன்பரசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்கமிட்டிக்கு தலைமை வகிப்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வருகிறார். கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கெடுக்க ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும். எனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை ஏ.கே.கண்ணன் தலைமையில் நடத்துவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து, விழாக்குழுவை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியிருப்பதால் அவர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது என தெரிவித்தனர். அதற்கு மனுதாரர் தரப்பில், “அவ்வாறெனில் கடந்த ஆண்டுபோல காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதல் மரியாதை வழங்குவது மற்றும் ப்ளக்ஸ் பேனர்களை வைப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு கணக்கு வழக்குகளை பராமரிப்பதற்காக தனி வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும். இதனை உத்தரவாகப் பிறப்பிக்க வேண்டும்” என கோரினார்.

image

இதை ஏற்ற நீதிபதிகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பொறுத்தவரை கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பொருந்தும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்

இதேபோல பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் மனுவை தாக்கல் செய்ததால் மனுவை ஏற்க இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்:

1. ஜல்லிக்கட்டு நடைபெறும் அன்று எந்த சமூகத்திற்கோ அல்லது காளைக்கோ முதல் மரியாதை உள்ளிட்டவை வழங்கப்படக்கூடாது.

2. பரிசுப்பொருட்கள், தொகை உள்ளிட்டவை தொடர்பான கணக்குகள் முறையாக பராமரிக்க வேண்டும்.

3. ஜல்லிக்கட்டு நிகழ்வில் கட்சி மற்றும் சமூகம் தொடர்பான கொடி மற்றும் தலைவர்களின் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படக்கூடாது.

4. ஜல்லிக்கட்டு நிகழ்வு குறித்த அறிக்கையை முழுமையான வீடியோ பதிவுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.