இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். தனது ரசிகர்களின் நெஞ்சில் ‘தளபதி’யாக குடியிருப்பவர். வரும் தைப் பொங்கலுக்கு அவரது நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாஸ்டர்’ படம் குறித்த டாக்தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் வைரல் டாக்காகி உள்ளது. 

கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு பிறகு உச்ச நட்சத்திரத்தின் திரைப்படம் திரைக்கு வருவது இதுதான் முதல்முறை. இதை திரைத் துறையை சார்ந்தவர்கள் கொண்டாட்டமாகவே பார்த்தனர். 

பலரும் ‘மாஸ்டர் படத்தின் தயாரிப்புக் குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்தது. அதற்கு, மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து திரை அரங்குகளில் 100 சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அரசும் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்தது. இது கொரோனா தொற்று பரவ காரணமாகி விடும் என சமூக ஆர்வலர்கள் வாய்ஸ் கொடுத்தனர். தொடர்ந்து மத்திய அரசும் தமிழக அரசின் உத்தரவை உடனடியாக ரத்து செய்யும் படி உத்தரவிட்டது. இதையடுத்து திரை அரங்கில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனினும், மாஸ்டர் திட்டமிட்டபடி வெளியாகும் என்பதற்கு உறுதியாக புரொமோஷன் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன. 

தமிழ் சினிமா வியாபாரத்தின் இன்றைய நிலை கொஞ்சம் மோசம் என்றே சொல்ல வேண்டும். பெரும்பாலும் பெரிய பட்ஜெட் படங்களுக்கும், பெரிய ஸ்டார்கள் நடித்த படங்களுக்கும் தான் நல்ல ஓப்பனிங் கிடைக்கிறது. அது கூட சமயங்களில் கதைக்கான கன்டென்ட் ஸ்ட்ராங்காக இல்லாவிட்டால் அந்த ஓப்பனிங் கூட கை கூடாமல் போவதுண்டு. 

image

முன்பெல்லாம் குறைவான தியேட்டர்களில் ரிலீசாகும் ஒரு படம் குறைந்தது நூறு நாள் வரை தியேட்டரில் ஓடினால்தான் வெற்றிப்படமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அது சாத்தியம் இல்லாத காரணத்தினால் அதிகப்படியான தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டியுள்ளது. அதோடு நூறு நாளில் எடுக்க வேண்டிய கலெக்ஷனை சில நாட்களிலேயே எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இதற்கு காரணம். 

நூறு கோடி, இருநூறு கோடி என பெரிய பட்ஜட்டில் எடுக்கப்படும் படத்தை சேட்டிலைட், ஆடியோ, டிஜிட்டல், தியேட்டர்கள் ரைட்ஸ் என தனித்தனியாக பிரித்து வியாபாரம் செய்தால்தான் லாபகரமான வசூல் கிடைக்கும். இதில் தியேட்டர்கள் மூலமாகதான் வசூல் அதிகம் கிடைக்கும்” என்கிறார் திரைப்பட விநியோகஸ்தராக செயல்பட்டு வரும் நபர் ஒருவர்.

“கொரோனா காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் ஒரு படத்தை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும். அப்போதுதான் கலெக்ஷன் கிடைக்கும். அதே நேரத்தில் வழக்கத்தை விடவும் அதிகமாக அந்த படத்தை ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்து. அந்த ஆயிரம் தியேட்டர்களிலும் குறைந்தபட்ச 6 நாட்கள் ஹவுஸ் ஃபுல்லானால் தான் கலெக்ஷன் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார் கதாசிரியரும், இயக்குனருமான கேபிள் ஷங்கர்.  

‘மாஸ்டர்’ மட்டுமல்லாது இதற்கு முன்னர் வந்த நடிகர் விஜயின் பல படங்களுக்கும் பல்வேறு விதமாக தடங்கல்களையும், அழுத்தங்களையும் சந்தித்தன. அவற்றைப் பார்ப்போம்…

image

துப்பாக்கி – 2012: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் துப்பாக்கி. இதில் இஸ்லாமியர்களை புபடுத்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டன. அதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. தொடர்ந்து சில காட்சிகளும், வசனங்களும் கட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

image

தலைவா – 2013: ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான படம் ‘தலைவா. இந்த படத்திற்கு தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக- வின் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழகத்தை தவிர உலகம் முழுவதும் வெளியானது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து ஆகஸ்ட் 20 அன்று தலைவா தமிழகத்தில் வெளியானது. TIME TO LEAD மாதிரியான கேப்ஷன்களும் நீக்கப்பட்டன. 

image

கத்தி – 2014: மீண்டும் ஏ.ஆர். முருகதாஸுடன் விஜய் இணைந்த படம் கத்தி. தயாரிப்பாளர், கதை என பலவும் சர்ச்சையாகின. இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள் இந்த படத்தை தயாரித்ததால் எதிர்ப்புகள் கிளம்பின. அந்த சிக்கலை எல்லாம் சுமூகமாக கடந்து இந்த படம் தீபாவளி வெளியீடாக வெளியாகி இருந்தது. 2015இல் வெளியான புலி திரைப்பட ரிலீஸை ஒட்டி நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை ரைடும் நடந்தது. 

image

மெர்சல் – 2017: அட்லீ இயக்கத்தில் வெளிவந்தப் படம் மெர்சல். படத்தின் தலைப்பு, வெளியீடு, பாஜக-வின் எதிர்ப்பு, மருத்துவர்களின் எதிர்ப்பு என இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. குறிப்பாக படம் வெளியாவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் வரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எதிர்ப்புகளை தொடர்ந்து சில காட்சிகளும் நீக்கப்பட்டன. 

image

சர்கார் – 2018: மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம். படத்தை கதை திருடப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டு படம் வெளியாவது உறுதி இல்லாமல் இருந்தது. ஒருவழியாக படம் வெளியான பிறகு அரசு கொடுத்த இலவசங்கள் எதிர்ப்பு மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் பயன்படுத்தப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து அந்தக் காட்சிகள் மியூட் செய்யப்பட்டன. 

image

மாஸ்டர் – 2020 / 2021: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் உட்பட பெரிய நட்சத்திரம் கூட்டணி இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கடந்த 2020 சித்திரை திங்களுக்கு இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த முறை விஜய் படத்திற்கு கொரோனா தடை விதித்தது. அனைத்தும் சரியான பிறகு படத்தை வெளியிடலாம் என்ற முடிவுக்கு படக்குழு வந்தது. அரசும் மக்கள் கொரோனாவோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என சொல்லியது. திரை அரங்குகளும் திறக்கப்பட்டன. அதையடுத்து வரும் தை பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோதே விஜய் வருமான வரித்துறையினரால் நெய்வேலியிலிருந்து சென்னைக்கு கார் மூலம் அழைத்து வரப்பட்டார். அவரிடம் பல மணி நேரம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில்தான் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக FILM FEDERATION OF INDIA அமைப்பின் தலைவர் எஸ்.தாணு “திரை அரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். எது எப்படி இருந்தாலும் திட்டமிட்ட தேதியில் படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

வழக்கம்போல விஜய்க்கு இந்தப் படமும் தடைகளை உடைத்து வெளியாகும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அவரது ரசிகர்கள். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.