சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவர், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், ” `எம் ரூபி’ என்ற ஆன்லைன் இன்ஸ்டன்ட் லோன் ஆப் மூலமாகக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தேன். அந்த ஆப்பில் எனது ஆதார், பான் கார்டு மற்றும் புகைப்படம் போன்ற விவரங்களைப் பதிவேற்றம் செய்து, 5,000 ரூபாய் கடன் பெற்றேன். ஒரு வாரத்துக்குப் பின்னர் 1,500 ரூபாய் வட்டி பிடித்த பிறகு 3,500 ரூபாய் எனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் 5,000 ரூபாயைக் கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஆன்லைன் லோன் ஆப்

அந்தக் கடனை கட்ட இன்னொரு ஆப்பில் கடன் பெற்றேன். இப்படி 40 ஆன்லைன் ஆப்களில் கடன் பெற்றிருந்தேன். ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பிக் கட்டாததால் 100 ரூபாய்க்கு இரண்டு சதவிகித வட்டி கூட்டிச் செல்லப்பட்டது. அந்த நிறுவனத்திலிருந்து தொடர்ந்து பல அழைப்புகள் வந்தவண்ணம் இருத்தன. ஒருகட்டத்தில் தகாத வார்த்தைகளில் பேசியும், அவதூறாகப் பேசி மிரட்டியும் குறுஞ்செய்திகள் வருகின்றன. தொடர்ந்து என் நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, சைபர் க்ரைம் பிரிவு, சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்புப் பிரிவினர் விசாரணையைத் தொடங்கினர். இந்த விசாரணையில் புகார்தாரருக்கு வந்த அழைப்புகளைவைத்து விசாரணையை நடத்தினர். இதில், `ட்ரூ கின்டில் டெக்னாலஜி பிரைவேட் லிமிடட்’ என்ற பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மிரட்டிவந்தது தெரியவந்தது. இந்த நிறுவனத்தை பிரமோதா (27) மற்றும் பவான் (28) என்பவர்கள் நடத்திவருவதும், இந்த கால் சென்டர் நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவருவதும் தெரியவந்திருக்கிறது. இந்த இருவரும் சீனாவைச் சேர்ந்த கும்பலுடன் சேர்ந்து பணியாற்றிவந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சீனாவில் உருவாக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்ட ஆன்லைன் கடன் வழங்கும் செயலி மூலம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள். இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் 5,000 முதல் 50,000 ரூபாய் வரை கடன் வழங்கி, அதிக வட்டி செலுத்தச் சொல்லி மிரட்டி, 300 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வசூலித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கைதுசெய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி, சீனாவைச் சேர்ந்த ஜீ யோ யமாவோ, வூ யானுலம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். சென்னை அழைத்துவரப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து லேப்டாப், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

சீனாவைச் சேர்ந்த ஹாங்க் இதற்கு மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. சீனாவிலிருந்து தினமும் இந்தியாவிலுள்ள அவரின் குழுவுக்கு உத்தரவுகளைக் கொடுப்பார். அந்தக் குழுவினர் அவருக்குக் கீழே உள்ளவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பார்கள். அதன்படி கால் சென்டரில் பணிபுரிபவர்கள் வேலையை மேற்கொள்வார்களாம். ஒரு நாளைக்கு ஒரு ஊழியர் குறைந்தது பத்து பேருக்காவது கடன் வழங்கவேண்டுமாம். இல்லையென்றால் அந்த ஊழியர் வார இறுதியில் பணியிலிருந்து நீக்கப்படுவாராம். இந்தத் தொழில் மூலம் வரும் வருமானத்தை அவர்கள் பிரபல கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்துவந்ததும் தெரியவந்திருக்கிறது. இந்த மோசடிக் கும்பலுக்குப் பின்னால் இருப்பது யார் என்பது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

மோசடி

கடன் செயலி இன்ஸ்டால் செய்யும்போது வழங்கப்படும் தகவல்கள் மூலம், அந்தச் செயலியைப் பயன்படுத்துபவர்களின் மொபைல்களிலுள்ள தொலைபேசி எண்கள் போன்ற தகவல்களை எடுத்துவிடுகிறார்கள். மேலும் கடன் வழங்கும்போது கொடுக்கும் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வங்கி விவரங்களைக் கொண்டு வங்கிக் கணக்கை முடக்கிவிடுவதாக மிரட்டியும் பணம் வசூல் செய்துவந்திருக்கிறார்கள்.

புகார் அடிப்படையில் விரைந்து செயலாற்றி குற்றவாளிகளைக் கைதுசெய்த காவலர்களை சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்துப் பாராட்டி, பரிசளித்தார். இது குறித்து மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், “கூகுள் பிளே ஸ்டோரில் 50-க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் செயலிகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான செயலிகள் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுபவைதான். கைதுசெய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் சீனாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ‘My Csah, Aurora loan, Quick loan, D money, Rapid loan, Eazy cash, New rupee, Rupee loan’ போன்ற 25-க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் ஆப்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஆப்கள் மூலம் குறைந்த வட்டி என்று ஆசைவார்த்தை காட்டி, கடன் வழங்கி பின்னர் மிரட்டிப் பணம் வசூல் செய்து வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

கைது செய்யப்பட்ட சீனர்கள்

தொடர்ந்து பேசிய அவர், “கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், சீனாவைச் சேர்ந்த ஹாங்க் மூளையாகச் செயல்பட்டுவந்திருக்கிறார். கைதுசெய்யப்பட்ட இரண்டு சீனர்களின் பாஸ்போர்ட் காலாவதியாகியும் அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், செல்போன் ஆகியவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களை பத்து நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவிருக்கிறோம். சட்ட விரோதமாகக் கடன் வழங்கும் செயலிகளைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கும் பணிகளும் நடந்துவருகின்றன” என்று தெரிவித்தார்.

இன்னொரு சம்பவம்:

தெலங்கானா மாநிலத்தில் இதே போன்ற ஒரு புகார் காவல்துறையில் அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், `குபேவோ டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்’ என்ற கால் சென்டர் நிறுவனத்தில் இந்த மோசடி நடைபெற்றுவந்தது தெரியவந்தது. மேலும், இந்த நிறுவனம் 11 கடன் வழங்கும் செயலிகளை வடிவமைத்து, அதன் மூலம் கடன் வழங்கி, பின்னர் மிரட்டி வசூல் செய்துவந்திருக்கிறது. இது தொடர்பாக நான்கு பே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சீனாவைச் சேர்ந்தவர்.

தமிழ்நாடு காவல்துறை

தமிழகம், தெலங்கானாவில் கைதுசெய்யப்பட்ட கும்பலுக்கு இடையில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய தெலங்கானா குற்ற வழக்கு விசாரணை குறித்த தகவல்களையும் தமிழக போலீஸார் கேட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் அனைவரும் `குறைந்த வட்டி’ என்று ஆசைகாட்டி, மோசடி செய்யும் நிறுவனங்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படியும், தெரியாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.