மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அதிருப்திகள் எழுந்துள்ளன. இது தொடர்பான சர்ச்சையையும் விளக்கத்தையும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர் மற்றும் புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்து வருகின்றன.

இதில் கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3-வது கட்ட க்ளினிக்கல் பரிசோதனை இன்னமும் நிறைவுபெறவில்லை. இந்நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்துவதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ‘அவசரகால’ அனுமதி வழங்கி உள்ளது. பரிசோதனை மற்றும் ஆய்வு முடிவுகள் திருப்தியாக இருப்பதால், இந்த மருந்துகளை அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. எனவே, இன்னும் சில தினங்களில் இந்த மருந்துகளைப் பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

இந்நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அதிருப்திகள் எழுந்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறுகையில், ‘’கோவாக்சின் தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நிறைவு செய்யவில்லை. எனவே, முன்கூட்டியே அனுமதி கொடுத்திருப்பது ஆபத்தானது. மூன்றாம் கட்ட பரிசோதனை முடியும் வரை கோவாக்சின் தடுப்பூசியை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சரை வலியுறுத்துகிறேன். அதுவரை, கோவிஷீல்டு தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம்” என்றார்.

‘ஆல் இந்தியா டிரக் ஆக்‌ஷன் நெட்வொர்க்’ (ஏ.ஐ.டி.ஏ.என்) என்ற சுகாதார கண்காணிப்பு அமைப்பு, ‘’கோவாக்சின் தடுப்பு மருந்தின் செயல் திறன் குறித்த தரவுகள் இல்லாதது வருத்தமளிக்கிறது. மேலும், இதுபோன்று வெளிப்படைத்தன்மை இல்லாதது நிறைய கேள்விகளை உருவாக்கும். இது இந்தியாவின் அறிவியல் சார்ந்த முடிவுகளை எடுக்கும் அமைப்புகளின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த உதவாது” என்று தெரிவித்துள்ளது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் கூறுகையில், ‘’ கோவாக்சின் தடுப்பு மருந்தை இப்போதைக்கு தமிழக அரசு பயன்படுத்தக்கூடாது. உலக அளவில் பின்பற்றப்படும் பரிசோதனை நடைமுறைகள் முழுமையடைவதற்கு முன்பே கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை இந்திய அரசு பயன்பாட்டுக்கு அனுமதித்திருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதைத் தமிழ்நாட்டில் இப்போதைக்கு அனுமதிக்கமாட்டோம் எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

இந்நிலையில் கோவாக்சின் தொடர்பாக எழுப்பப்பட்டு வரும் சர்ச்சைகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன். “இதுபோன்ற ஒரு முக்கியமான பிரச்னையை அரசியல் ஆக்குவது ஏற்க முடியாதது, மிகவும் அதிர்ச்சிகரமானது. கொரோனா தடுப்பூசிகளுக்கு அறிவியல்பூர்வமான வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதித்ததை யாரும் நம்பிக்கை இழக்க செய்யக்கூடாது” எனக் கூறியுள்ளார்.

image

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா, ‘’கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது அவசரச் சூழலுக்குத்தான். அவசரப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ள அல்ல. உலகச் சூழலைக் கருத்தில் கொண்டு, அவசரமான சூழலை எதிர்கொள்ள, அவசரமான ஒப்புதல் இரு மருந்து நிறுவனங்களுக்கும் தரப்பட்டுள்ளது.

நம்மிடம் திறன்மிக்க ஆன்டிவைரல் மருந்து இல்லை. இருக்கின்ற மருந்துகளையும் வைத்துக்கொண்டு நாம் கண்டிப்பாக விழிப்புடன் செயல்பட வேண்டும். திடீரென கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்கும் சூழல் உருவானால், அந்த அவசரச் சூழலை எதிர்கொள்ள அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். அந்த அவசரச் சூழலின்போது கோவாக்சின் தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம்.

image

அதுமட்டுமல்லாமல் கோவிஷீல்ட் எந்த அளவுக்கு வீரியமாகச் செயல்படும் எனத் தெரியாத சூழல் இருக்கிறது. அதனால்தான், 2-வது மருந்தாக கோவாக்சின் மருந்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உருமாறிய கொரோனா வைரஸை மனதில் வைத்துதான் அவசரச் சூழலை கொண்டு, இரு நிறுவனங்களுக்கும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில் மருந்து நிறுவனங்களும் தொடர்ந்து தங்களின் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையைத் தொடர்ந்து நடத்தி, அதிகமான புள்ளிவிவரங்களைத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.