செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, நடுரோட்டில் கொலை, சாலை விபத்து, குழந்தைக் கடத்தல் என தினம் தினம் பல குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வந்தாலும், எந்தக் குற்றம் நடந்தாலும், போலீசார் முதலில் தேடுவது சிசிடிவி எனும் மூன்றாம் கண்களைத்தான். எல்லா இடத்திலேயும் பாதுகாப்புக்காக ஒருவர் இருக்க முடியாது. ஆனால், கண்காணிக்க ஒரு கண் இருக்க முடியும் என்ற ஃபார்முலாவில் சென்னை எங்கும் அமைக்கப்பட்டது மூன்றாம் கண் எனும் சிசிடிவி கேமரா. சென்னையின் முன்னாள் காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் 2016ம் ஆண்டில் இந்த சிசிடிவி நடவடிக்கையை கையில் எடுத்தார்.

image

முதலில் முக்கிய சாலைகளின் முக்கியச் சந்திப்புகள், பின்னர் முக்கிய சாலைகள் என சென்னையில் சிறு சிறு சாலைகளிலும் சிசிடிவி சென்றடைந்தது. அதன் தாக்கமாக பல குற்றாவளிகளை எளிதாக கண்டுபிடித்து கைது செய்தது சென்னை போலீசார். பல குழந்தை கடத்தல்காரர்களை சிசிடிவி மூலமே பின் தொடர்ந்து கைது செய்தது போலீஸ். 2016-ல் 30,000, 2017-ல் 1 லட்சத்து 35,000, 2018-ல் 2 லட்சத்து 30,000, 2019-ல் 2 லட்சத்து 80,000 என சிசிடிவி கேமரா சென்னை முழுவதும் பரவியது. அதன் தாக்கமாக, சதுர கிலோமீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் என்ற எண்ணிக்கையுடன் உலகின் நம்பர் 1 பாதுகாப்பு நகரமாக சென்னை திகழ்கிறது. ஹைதராபாத்தில் சதுர கிலோமீட்டருக்கு 480 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. டெல்லியில் சதுர கிலோமீட்டருக்கு 289 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.

image

லண்டன், பீஜிங் நகரங்களும் சென்னைக்கு பின்னால்தான் என்பது உள்ளபடியே தமிழகத்து பெருமைதான். அதாவது, 1000 பேருக்கு 25 சிசிடிவி கேமரா சென்னையில் உள்ளன. சாலைகளில் சிசிடிவி பொருத்துவது மட்டுமில்லாமல், முக்கிய கடைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் போன்ற இடங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டுமென சென்னை போலீஸ் வலியுறுத்தியது. இதனால், எந்தக் குற்றச் செயல் என்றாலும் ஏதாவது ஒரு கேமராவில் குற்றவாளிகள் சிக்கிக்கொள்வார்கள் என்பதே நிலை. இதுவே போலீசாருக்கு பெரிதும் கைகொடுத்தது. குற்றச் செயல்கள் குறைவதற்கும் துணைபுரிந்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பரில் மட்டும் 60 செயின் பறிப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியிருக்கிறது சிசிடிவி. இதன்மூலமே சிசிடிவியின் தேவையை உணர முடியும்.

image

இதுகுறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அளித்த பேட்டியில், ”தற்போது உள்ள சிசிடிவி கேமரா வீடியோ மூலம் புகைப்படங்களை கண்டுபிடித்து குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். இது எதிர்காலத்தில் லைல்ஸ்ட்ரீமாக கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்களை அந்தக் கணமே எச்சரிக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

சென்னையில் சிசிடிவிகளை பொருத்த நடவடிக்கை எடுத்த முன்னாள் கமிஷ்னர் விஸ்வநாதன் இது குறித்து பேசியுள்ளார். அதில், ” சிசிடிவி கேமராக்களுக்கு எல்லை இல்லை. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெரிவிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். சிசிடிவி குற்றச் சம்பவங்களை கண்டுபிடிக்க மட்டுமல்ல, நடக்காமல் இருக்கவும் உதவும். எந்த ஒரு குற்றவாளியும் சிசிடிவியை பார்த்தால் குற்றம் செய்ய யோசிப்பார்கள்” என்றார்.

image

சிசிடிவியில் ‘சென்னை டாப்’ என்பதை பெருமையாகும் சொல்லும் சென்னைவாசிகள் சிலர் சில வருத்தங்களையும் பதிவு செய்கின்றனர். ”பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உடைந்து பழுதாகியுள்ளன. பல இடங்களில் கோணங்கள் மாறி பயனற்ற நிலையில் உள்ளன. சிசிடிவியை பொருத்தும் காவலர்கள் அதனை முறையாக பாராமரிக்கவும் வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பேசிய காவலர்கள், ”சிசிடிவிக்களை காவல்துறை முடிந்தவரை கண்காணித்து பராமரிக்கிறது. அதேவேளையில் ஒவ்வொரு சாலையிலும் சிசிடிவிக்களை பாரமரிப்பது சற்று சவாலான விஷயம். அதனால் பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். சாலையில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு சிசிடிவிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றனர்.

image

அரசு அமைத்துள்ள சிசிடிவி கேமராக்களை நம்முடைய சொத்தாக நினைத்து பாதுகாப்பது, வணிக நிறுவனங்கள், குடியிருப்புப்பகுதிகள் அவரவர்களின் வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப சிசிடிவிக்களை அமைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகள் நம் நகரத்தை மேலும் பாதுகாப்பாக மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மூன்றாம் கண் உதவியும் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து நகரங்களும் பாதுகாப்பான நகரமாக திகழ வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.