பஞ்சாபின் சாலை ஒன்றிற்கு நடிகர் சோனு சூட்டின் அம்மா பெயரை சூட்டியதால் நெகிழ்ச்சியில் மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார் சோனு சூட்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் நடிகர் சோனு சூட். அதேபோல, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மாணவர்களை சொந்த செலவிலேயே விமானத்தில் இந்தியா கொண்டு வந்தார். மேலும், ட்விட்டரில் பல்வேறு கோரிக்கை வைத்து உதவி கேட்கும் ஏழைகளுக்கு உதவி வந்தார். இதனால், தங்கள் குழந்தைகளுக்கும், தங்கள் கடைகளுக்கும் சோனு சூட் பெயரை சூட்டி அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள், அவரது ரசிகர்கள்.
இந்நிலையில்தான், பஞ்சாப் மாநிலம் மோகாவில் சோனு சூட் அம்மா சரோஜ் பாலா சூட் பெயரை சாலை ஒன்றிற்கு சூட்டிப்பட்டுள்ளது. சோனு சூட்டின் அம்மா சரோஜ் சூட் கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணிபுரிந்தாவர். அப்போதே ஏழைகளுக்கு கல்வி கட்டணங்களை செலுத்தியுள்ளார். அவரது உதவும் குணமே தன்னையும் இயங்க வைக்கிறது என்று சோனு சூட் பலமுறை தெரிவித்துள்ளார்.
தற்போது தான் பிறந்த மோகாவிலேயே சாலை ஒன்றிற்கு அம்மா பெயரை சூட்டியிருப்பது குறித்து நெகிழ்ந்து போயுள்ள சோனு சூட் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் “இது என் வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயம்.
என் அம்மா வாழ்நாள் முழுக்க பயணம் செய்த அதே சாலை. வீட்டிலிருந்து கல்லூரிக்கும் கல்லூரியிலிருந்து வீட்டுக்கும் திரும்பிய சாலை. என் அம்மாவும் அப்பாவும் வானத்திலிருந்து எங்காவது இதனைப் பார்த்து புன்னகைத்து கொண்டிருப்பார்கள். இன்றைய தேதிவரை இதுதான் எனது வாழ்நாள் சாதனை” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM