கடந்த காலங்களில் நூல்கள் எனக்குள் பலவித புரிதல்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இன்று வரை ஏற்படுத்தி வருகின்றன. அறிவுசார் நண்பர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன. ஆளுமைகளுடனான தொடர்புகளும் வாசிப்பின் வழியே கிடைத்துள்ளன. பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் என சமூக மாற்றத்திற்கான ஆளுமைகளை வாசித்த 1990-களின் தொடக்கக் காலங்கள் இனிமையான பொழுதுகளாக நினைவுகளில் தங்கியுள்ளன. அதுபோல, பெரியாரை வாசிக்கத் தொடங்கிய நாள் முதல் பெரியாரை ஒரு நேர்கோட்டுப் பார்வையாகவே கவனித்து வந்துள்ளேன். பெரியார் குறித்த விவாதங்கள் நண்பர்களிடையே வரும்போது, மையப் பொருளாக தமிழ்த் தேசியம், மொழிவாரி மாநிலப் பிரிவினை போன்ற விடயங்கள் முதன்மையாக இருந்துள்ளன. கடவுள் குறித்த விவாதங்கள் பெயரளவிலேயே இருந்தது. ‘கடவுள் இல்லை’ என்ற அளவுகோலைக் கொண்டே பெரியாரை புரிந்துகொண்ட காலகட்டமாக இருந்துவந்துள்ளது.

பெரியார்

கோ.கேசவனின், ‘மண்ணும் மனித உறவுகளும்’, கல்வி நூலான, ‘சன்னலில் ஒரு சிறுமி’, ‘ஆயிஷா’, ரஷ்ய நாவலான ‘தாய்’, ‘தந்தையரும் தனயரும்’, ‘முதல் ஆசிரியர்’ போன்றவை என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அக்காலக்கட்டம் தொடங்கி இன்று வரை ரஷ்ய இலக்கியங்கள், மார்க்சிய நூல்களைத் தேடித் தேடி வாசித்து வந்துள்ளேன். ’மெளன வசந்தம்’, ‘ஓநாய் குலச்சின்னம்’ என எண்ணற்ற சூழலியல் நூல்கள் அறிவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கின்றன. அதுபோலவே, மக்கள் மருத்துவராக அறியப்பட்ட ‘நார்மன் பெத்யூன்’, இந்திய கல்விப்புலத்தில் புறக்கணிக்கப்பட்ட விஞ்ஞானியான ‘மேக்நாட் சாகா; ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை’ போன்ற நூல்கள் எனக்கான தேடல்களை அதிகரித்து வந்துள்ளது.

அந்தவரிசையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் பேராசிரியர் தொ.பரமசிவனின், ‘பண்பாட்டு அசைவுகள்’ நூலை படிக்கத் தொடங்கினேன். அதன் தொடர்ச்சியாக தொ.ப.வின் நூல்களை படிக்கத் தொடங்கினேன். அதனடிப்படையில் பெரியார், தமிழ்த்தேசியம் குறித்து நண்பர்களுடன் பெரும் விவாதம் நடந்தது. முடிவில், பெரியார் குறித்து எனக்குள் கரடு தட்டியிருந்த பல விடயங்கள் உதிர்ந்து விழுந்தன. 2011-ம் ஆண்டு ‘பூவுலகின் நண்பர்கள்’ பாபநாசத்தில் ஒருங்கிணைத்த பயிற்சிப் பட்டறை ஒன்றில் பேராசிரியர் தொ.பரமசிவன் தலைமை உரை நிகழ்த்தியபோது, அதை முழுமையாக கேட்கும் வாய்ப்பே, எனக்கு தொ.ப.வுடனான முதல் தொடர்பாக அமைந்தது.

‘கடவுள் இல்லை’ என்ற முழக்கத்தை தொ.ப.,வின் எழுத்துக்களின் அடிப்படையில் பார்க்க ஆரம்பித்தேன். சமூகத்தில் 90 சதவிகித மக்கள் தெய்வ நம்பிக்கையில் (தொ.ப., ’தெய்வம்’ என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவார்) இருக்கும்போது, பெரியார் எதிர்த்தது எந்த தெய்வத்தை என்ற கேள்வி எழுந்தது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெரியார் என்றுமே எதிர்க்கவில்லை. அதுபோலவே, (சிறு) தெய்வ நம்பிக்கையில் இருந்த பெரும்பான்மை மக்கள் பெரியாரைப் புறக்கணிக்கவில்லை. பெரியாரின் கருத்துக்களை ஆதரித்தே வந்துள்ளனர். அந்த வகையில், இந்திய மாநிலங்களுக்குத் தமிழகம் முன்மாதிரியாக இருந்து வருகிறது.

‘ராமனை செருப்பால் அடித்தார்…’ ‘விநாயகர் சிலையை உடைத்தாரே…’ தவிர, அய்யனார் சிலையையோ, அம்மன் வழிபாட்டையோ பெரியார் எப்போதும் எதிர்க்கவில்லை என்ற தொ.ப.,வின் எழுத்துக்கள் வழியே பெரியார் குறித்த மதிப்பீடுகள் உயர்ந்தன. பெரியாரை ‘தொ.ப.,’ என்ற கண்ணாடி வழியே பார்ப்பதும், அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும்தான் இன்றைய காலத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதையே அவரது எழுத்துக்கள் உணர்த்தி நிற்கின்றன.

தொ.பரமசிவன்

தொ.ப.,வின் வார்த்தைகளில் சொன்னால், பெரியார் எதிர்த்தது, பெருந்தெய்வ வழிபாட்டையும், பார்ப்பனியத்தையும், இந்துத்துவாவையும், சாதியையும் தான் என்ற உண்மை செவிட்டில் அறைந்தது போல இருந்தது. அன்றிலிருந்து தொ.ப.வின் நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கும்போது ஏற்பட்ட சந்தேகங்கள் கேள்விகளாக மாறின.

எழுத்துக்கள் மட்டுமே அறிமுகமாகியிருந்த நிலையில், தோழர் வே.ராமசாமி தொ.ப.,வின் அலைபேசி எண்ணைக் கொடுத்து “அனைவரிடமும் எளிமையாகப் பேசுபவர்தான் தொ.ப., உரையாடுங்கள்” என்றார். நேர்காணல் எடுப்பது குறித்து தொ.ப.விடம் அலைபேசியில் கூறியவுடன், உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் ஒத்துக் கொண்டார்.

தோழர் தயாளனுடன் விவாதித்து கேள்விகளை இறுதிப்படுத்திக் கொண்டு கடந்த 2015-ஆம் ஆண்டு இறுதியில் தோழர் தயாளனின் தென்காசி வீட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்து, தொ.ப.,வை நேர்காணல் செய்தது என்றென்றும் மறக்க இயலாத அனுபவமாக அமைந்தது. அதனை நேர்காணல் என்பதைவிட உரையாடல் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். நாங்கள் எழுப்பிய சராசரியான கேள்விகளுக்கும் உற்சாகமாகப் பதிலளித்தார். அவரது நினைவாற்றல் எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. உரையாடலின் முதல் நாள் இருந்த சிறிது தயக்கம், தொடர்ந்த நாட்களில் மறைந்தது.

அனுபவமற்ற இளைஞர்களான எங்களின் கேள்விகளுக்கு புன்னகை மாறாத பதிலும், துறை சாராத கேள்விகளுக்கு, தெரியவில்லை என்ற நேர்மையான பதிலும் தொ.ப., மீதிருந்த மதிப்பை பன்மடங்காக உயர்த்தியது. சுருக்கமான, தெளிவான பதில்கள், பண்பாடு, வரலாறு, கலை தொடர்பாக இன்னமும் நீண்ட உரையாடலுக்கு சொந்தக்காரராகவே தொ.ப. இருந்தார்.

தொ.பரமசிவன்

அந்த நான்கு நாட்களின் மாலைப் பொழுதுகள் எங்களின் அறிவுத்தளத்தை விசாலப்படுத்தின. தொ.ப.,வுடன் திராவிட இயக்கம், கருப்பு, அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம், சைவம், வைணவம், சமணம், ஆசிவகம், குலங்கள், சாதிகள் எனப் பல்வேறு தளங்களில் உரையாடல் நடந்தது. ’இந்து’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அனைவரையும் அடைக்கும் இந்துத்துவத்தின் சூழ்ச்சி குறித்தும் உரையாடல் நீண்டது. சித்தர் இலக்கியம் தொடங்கி கமல்ஹாசன் வரை அந்த உரையாடல் வளர்ந்தது. தொ.ப.வுடனான நான்கு நாள் உரையாடல் எங்களுக்குள் பல புதிய பார்வைகளை ஏற்படுத்தியது. தொ.ப., என்ற பண்பாட்டு ஆய்வாளர் எங்களுக்குள் பேராளுமையாக உயர்ந்தார். அவருடனான உரையாடல் கடந்த 2016-ஆம் ஆண்டு ‘மானுட வாசிப்பு’ (தொ.ப.,வின் தெறிப்புகள்) என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் மூத்த பண்பாட்டு ஆய்வாளராக அறியப்படும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் நூல்களை படிக்கத் தொடங்கியிருந்தேன். தற்போது ஆ.சிவசுப்பிரமணியனின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு, கள ஆய்வை என வாழ்வை மையப்படுத்தி ஆவணப்படத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் உருவானது. அதனோடு நேர்காணலுக்கான கேள்விகளும் உருவாகின.

திரு.ரெங்கையா முருகன் என்னைப் பற்றிய அறிமுகத்தை ஆ.சிவசுப்பிரமணியனிடம் ஏற்படுத்தியிருந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் ’நா.வானமாமலை நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம்’ நடைபெற்றது. அக்கருத்தரங்கில் மையக்கருத்துரை ஆ.சிவசுப்பிரமணியன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்விற்கு பாளையங்கோட்டை வந்திருந்த ஆ.சிவசுப்பிரமணியனின் உரை மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் தொடர்பான பதிவுகளை ஆவணப்படத்திற்காக காட்சிப்படுத்தியிருந்தோம்.

ஆ.சிவசுப்பிரமணியன்

நிகழ்வை முழுமையாக ஆவணப்படுத்திய பின், தோழர் ஆ.சிவசுப்பிரமணியனிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். வயது வித்தியாசமின்றி நட்புறவுடன் பேச தொடங்கினார். நிகழ்வு முடிந்த பின், ஆஷ் கல்லறையில் சிவசு அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்து ஆவணப்படுத்திக் கொண்டோம். அதன் பிறகு, தொ.ப., வீட்டிற்கு ஆ.சிவசுப்பிரமணியன் வருகை தர, பண்பாட்டுத் தளத்தில் வரலாற்று சந்திப்பொன்று நிகழ்ந்தது.

பல ஆண்டுகால இடைவெளியில் தமிழகத்தின் இரு பெரும் பண்பாட்டு ஆளுமைகளின் சந்திப்பு நிகழ்ந்தது. இருவருக்கும் பொதுவான கேள்விகளை முன்வைத்து, ஆவணப்படுத்தினோம். அத்தருணம் இருவருக்கும் நெகிழ்ச்சியாக மாறியிருந்ததை அவர்களுக்கிடையில் நடைபெற்ற உரையாடல் உணர்த்தியது.

தொ.ப.,விடம் விடை பெற்றுக் கொண்டு ஆ.சிவசுப்பிரமணியன் கிளம்ப, ஆவணப்படத்திற்கான மற்ற பணிகளை முடித்துவிட்டு திரும்பினோம். அன்று இரவு நேர்காணலுக்காகத் தொ.ப., குறைவான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கியிருந்தார். உடல் உபாதைகள் இருந்தபோதும், கேள்விகளுக்கான பதில்களை நினைவடுக்குகளில் மீட்டெடுத்து பதிலளித்தார். சுருக்கமான பதில்களாக இருந்தபோதிலும், அவரது நினைவாற்றல் எங்களை ஆச்சர்யப்பட வைத்தது. தமிழகத்தின் பேராளுமையுடனான இந்த இரு சந்தர்ப்பங்களும் எனது வாழ்வின் மறக்க இயலாத தருணங்களாக மாறியிருந்தன.

தமிழகத்தின் இருபெரும் பண்பாட்டு ஆளுமைகளின் சந்திப்புக்கான மையமாக ஆவணப்படம் இருந்ததும், தொ.ப.,வுடனான நேர்காணலுக்கான வாய்ப்பு கிடைத்ததையும் எனக்கான பெரும் வாய்ப்பாகவே கருதுகிறேன். தொ.ப.,வுடன் உரையாடக் கிடைத்த ஒவ்வொரு நிமிடமும் ‘ஒரு பல்கலைக்கழகத்துடனான’ உரையாடலாகவே அமைந்திருந்தது.

தொ.பரமசிவன்

மதவாதமும், கார்ப்பரேட்டும் ஒரு மையப்புள்ளியில் இணைந்து நவீன வடிவமெடுத்துள்ள இந்துத்துவம், பாசிசமாக சூழ்ந்துள்ள நிலையில், அவற்றை முறியடிக்க தொ.ப.,வின் நூல்கள் அறிவாயுதமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில், அவரது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வது அனைவரின் கைகளில் தங்கியுள்ளது. இத்தருணத்தில் தொ.ப.,வின் வாழ்வு குறித்த முழுமையான ஆவணப்படம் இல்லாத வெறுமையை ஒரு ஒளிப்படக்கலைஞராக உணரமுடிகிறது.

பேராசிரியர் தொ.பரமசிவன் விட்டுச் சென்றுள்ள பாதையில் பயணிக்க வேண்டிய தேவையை முற்போக்காளர்களுக்கு வரலாறு உணர்த்தியுள்ளது. முற்போக்காளர்கள் காலத்தை உணர்ந்தவர்களாக செயலாற்றுவதே தொ.ப.,விற்கு செய்யும் கடமையாக இருக்கும்.

– ஏ.சண்முகானந்தம்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.