விவசாயிகளின் பிரச்னைகளுக்காக மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்திய, மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பெயரில் விருது வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும் சாதனை விவசாயிகளுக்கு இந்த விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் 2010-ம் ஆண்டு தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது, திருந்திய நெல் சாகுபடி திட்டத்துக்கு ராஜராஜ சோழன் திருந்திய நெல் சாகுபடி திட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் தான், திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக மகசூல் எடுக்கும் சாதனை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் விருது, இனி நாராயணசாமி நாயுடுவின் பெயரில் இந்த விருது வழங்கப்பட இருப்பதாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம் வேளாண் சட்டங்கள் தொடர்பாகச் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாராயணசாமி நாயுடு தனது பேச்சு, செயல் மற்றும் தலைமைப் பண்புகளால், தமிழ்நாடு விவசாயிகளை ஒருங்கிணைத்து, விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார். 1973-ம் ஆண்டு தமிழக விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி, அதன் தலைவராகப் பொறுப்பேற்று, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாய மாநாடுகளை நடத்தி, விவசாயிகளுக்காகப் பாடுபட்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, ஓய்வு எடுத்தபோதுதான் தனது இன்னுயிரை நீத்தார். அவரது நினைவு நாளில் அவரைப் போற்றுவதில் நாம் எல்லோரும் பெருமை அடைகிறோம்.

நாராயணசாமி நாயுடு விவசாயிகளுக்கு ஆற்றிய சிறந்த சேவையைப் போற்றிப் பாராட்டும் வகையில் குடியரசு தின விழாவில், திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விருது, இனி நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது என்ற பெயரில் வழங்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவால் தொடங்கப்பட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் ஜெகதீசனிடம் பேசினோம். “விவசாயிகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் நாராயணசாமி நாயுடு. அவர் கொடுத்த ஊக்கத்தாலும் அவரது தியாகத்தாலும்தான் விவசாயிகளிடம் போராட்ட குணம் எழுச்சி பெற்றது. வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியதால், ஆட்சியாளர்கள் மத்தியில் விவசாயிகள் மீது மிகுந்த மரியாதையும் ஏற்பட்டது.

விவசாயி ஜெகதீசன்

அவரது பெயரில் விருது வழங்குவது மகிழ்ச்சிக்குரியது. இதை நாங்கள் மனதார வரவேற்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வோர் உழவரும் இதை உளமார வரவேற்பார்கள். ஆனால் அதேநேரம், விவசாயிகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்த நாராயணசாமி நாயுடு பெயரில் விருது வழங்கும் இதே தமிழக அரசு, விவசாயிகளின் உரிமைகளைக் குழி தோண்டி புதைக்கக்கூடிய மூன்று புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பது, மிகவும் முரண்பாடாகும். தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுதான் நாராயணசாமி நாயுடுவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும். தமிழக அரசு விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.