`இல்லத்தரசிகளுக்கு ஊதியம், வீடுதோறும் இணையம்’ எனப் பல அதிரடியான திட்டங்களை அறிவித்திருக்கிறார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். ஆனால், இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

`சீரமைப்போம் தமிழகத்தை’ என்கிற பெயரில், 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை கடந்த 13-ம் தேதி மதுரையில் தொடங்கினார் நடிகர் கமல். தொடர்ந்து, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல்கட்டப் பிரசாரத்தை மேற்கொண்டார். இரண்டாம்கட்டப் பிரசாரத்தை, கடந்த 20-ம் தேதி தொடங்கிய கமல்ஹாசன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பயணித்து, நேற்று விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கடலூர், மஞ்சக்குப்பத்தில் கமல்

இந்தநிலையில், காஞ்சிபுரத்தில் கடந்த திங்களன்று நடந்த பிரசாரத்தில், `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவோம்’ எனச் சில திட்டங்களை அறிவித்தார் அவர்.

அவற்றில், இல்லத்தரசிகள் செய்யும் வேலைகள் மதிப்பிட முடியாதவை. அதனால், அவர்களைக் கணக்கெடுத்து, அரசு ஊதியம் வழங்கும் திட்டம்.

தமிழக மக்கள் சாக்கடையோரங்களிலும், நதிக்கரையோரங்களிலும் அவதிப்பட்டுக்கொண்டு வசிப்பதை தடுக்கும் வகையில் தற்சார்பு கிராமங்கள் உருவாக்கும் திட்டம்.

சாதாரண பஞ்சாயத்து அலுவலகம் முதல் முதல்வர் அலுவலகம் வரை காகிதங்களே இல்லாமல் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு உடனுக்குடன் அரசுக் கோப்புகள் நகரும் வகையில் துரித நிர்வாகத் திட்டம்.

மக்கள் எதற்கும் வரிசையில் நிற்காமல் அவர்களது உரிமைகளை அவர்களாகவே பெறுவதற்காக மக்களைத் தேடி அரசுத் திட்டங்கள் சென்றடையும் வகையில் சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரும் திட்டம்.

குடிசை வீடுகள் முதல் அனைத்து வீடுகளுக்கும் மிக அதிவேக இன்டர்நெட் இணைப்புடன்கூடிய கணினி வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம்.

இயற்கை வேளாண்மைக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் பசுமைப் புரட்சித் திட்டம்.

பெரும் தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்குவதைவிட ஒவ்வொரு வட்டாரம் வாரியாக ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில்களை உருவாக்கும் திட்டம் என ஏழு அம்சத் திட்டங்களை அவர் அறிவித்திருக்கிறார்.

சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்

மேற்கண்டவற்றில், `இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’ எனும் திட்டம் ஏற்கெனவே, சில நாடுகளில் செயல்பாட்டில் இருப்பதாகவும், நம் நாட்டிலும் அதை அமல்படுத்த வேண்டும் என்றும் பல ஆண்டுகாலமாகவே இங்கிருக்கும் மாதர் சங்கங்கள் கோரிக்கையை முன்வைத்துவருகின்றன. தவிர, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2012 காலகட்டங்களில் கணவனின் சம்பளத்தில் சிறு பகுதியைப் பிடித்து மனைவிக்கு வழங்க வேண்டும் எனப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் சார்பில் அரசுக்குக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட ஒன்றுதான். தவிர தற்சார்பு கிராமங்கள் போன்ற திட்டங்கள் காந்தியக் கொள்கைகளுள் ஒன்று.

அதேபோல, காகிதங்கள் இல்லா அரசாங்கம், இல்லம்தோறும் இணையம், அதன் மூலம் சிறு, குறு தொழில் உருவாக்கம் ஆகியவை தற்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, சந்தோஷ் பாபு ஐ.டி துறையின் செயலாளராக இருந்தபோது எடுக்கப்பட்ட முயற்சிகள்தான். `வீடுதோறும் இணையம்’ என்பது மத்திய அரசால் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட பாரத்நெட் திட்டம்தான். ஆனால், `மத்திய அரசின் பாரத்நெட் திட்டம், கிராமங்களுக்கான இணைய வசதியை உறுதிப்படுத்துவது மட்டும்தான். கிராமப் பகுதிகளில் மட்டுமல்லாமல் நகரப் பகுதிகளுக்கும் இணைய சேவையை வழங்க தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் தமிழ்நெட். இதன் மூலம், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஆன்லைனுக்குக் கொண்டுவரப்படும். பேப்பர் இல்லா அரசு அலுவலகங்கள் உருவாக்கப்படும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். கூடுதலாக கணினி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி

மக்கள் எதற்கும் வரிசையில் நிற்காமல் அனைத்து அரசுத் திட்டங்களும் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே வந்து சேரும் திட்டம் தற்போது ஆந்திராவில் நடைமுறையில் இருக்கிறது. ஐம்பது குடும்பங்களுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டு, இந்தச் சேவை தொடரப்படுகிறது. தவிர, இயற்கை விவசாயம் போன்றவை தமிழகத்தில் ஏற்கெனவே பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சிகளில் முன்வைத்தவைதான்.

இந்தத் திட்டங்கள் குறித்துப்பேசும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ்,

“வாரத்துக்கு அல்லது பத்து நாள்களுக்கு ஒரு முறை இதுபோன்ற ஏழு அம்சத் திட்டங்களை இனி நீங்கள் பார்க்கலாம். கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் கொடுக்கும்போது வீட்டுக்கு ஒரு கணினி (டெஸ்க்டாப்) கொடுக்க முடியாதா… எம்.ஜி.ஆர் வீட்டுக்கு ஒரு குண்டு பல்பாவது எரிய வேண்டும் என்கிற திட்டம் கொண்டுவந்ததால்தான் இன்று அனைத்து வீடுகளிலும் மின்சார வசதி இருக்கிறது. அது போன்ற ஒரு தொடக்கம்தான் இணைய வசதித் திட்டமும். ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான விஷயங்களைப் பூர்த்தி செய்வது. இது ஏற்கெனவே ஆந்திராவில் நடைமுறையில் இருக்கிறது. அடுத்ததாக, ஒவ்வொரு தனிமனிதரின் தனித்திறனைக் கண்டறிந்து அதை மேம்படுத்துவது. படித்தவர்கள் வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்துக் காலத்தை வீணடிக்காமல், சிறு, குறு தொழில்களைத் தொடங்கவைப்பது. தனித்திறன்களைக் கண்டறிவதன் மூலம் இதை நாம் செய்யவைக்கலாம். தற்சார்பு கிராமங்கள் உருவாக்கத்துக்காகவும் பல திட்டங்கள் முந்தைய அரசுகளால் (மத்திய) முன்மொழியப்பட்டன. ஆனால், சரியாக செயல்படுத்தப்படவில்லை. கிராமங்களுக்கான அதிகாரத்தை மேம்படுத்தினாலே தற்சார்பை அடைய முடியும்.

மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ்.

வறுமைக்கோடு மேலே கீழே என்பதை மாற்றி, செழுமைக்கோடு என்கிற திட்டம் கொண்டு வரப்படும். இனி வறுமைக்கோட்டுக்கு மேலேதான் அனைவரும் இருப்பார்கள். ஆனால், அவர்களைச் செழுமைக் கோடுகளைத் தொட வைப்பதுதான் எங்கள் லட்சியம். அதேபோல, இல்லத்தரசிகளின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதை கணவனோ இல்லை அரசாங்கமோ மதிப்பிட்டுக் கொடுக்க வேண்டும். தவிர, லஞ்சம் ஒழிக்கப்படும்போது இதற்கான பொருளாதாரத்தை நாம் எளிதாகப் பெற முடியும். டாஸ்மாக்கை நம்பி இருக்கத் தேவையில்லை” என்கிறார் நம்பிக்கையாக.

Also Read: `எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்தும் கமல், ரஜினி…’ ஏன் பதறுகிறார் எடப்பாடி?

ஆனால்,“கமல்ஹாசனின் திட்டங்கள் எல்லாம் அதிகமாகச் செலவாகும் திட்டங்களாகவே இருக்கின்றன. ஆனால், இதற்கான வரவுகளைப் பற்றி அவர் எதையும் சொல்லவில்லை. ஏற்கெனவே 5 லட்சம் கோடி கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது தமிழகம். போக்குவரத்துத்துறையில் பென்ஷன், சம்பளம், பி.எஃப் கொடுப்பதற்கே சிரமமாக இருக்கிறது. மின்சாரத்துறையில் அதே நிலைமைதான். ஜி.எஸ்.டி வருவாயும் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் குறைந்துவிட்டது. தமிழகத்தின் முக்கியமான வருவாய் டாஸ்மாக். ஆனால் அதைக் குறைக்கப்போவதாக கமல் ஏற்கெனவே பேசியிருந்தார். இந்தத் திட்டங்களையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால் அதிகமாகச் செலவாகும். ஒன்று ஏற்கெனவே செய்கிற செலவுகளைக் குறைக்க வேண்டும் அல்லது வருவாயைப் பெருக்க ஏதாவது செய்ய வேண்டும். கமல் என்ன செய்யப்போகிறார் என்பதை அவர் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்” என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

ஊழல்

“ஊழலை ஒழித்து அதன்மூலம் வருவாயைப் பெருக்கலாம் என்கிறார் கமல். ஆனால், தமிழகத்தில் இந்த ஆட்சியில் என்னென்ன ஊழல்கள் நடந்திருக்கின்றன, எவ்வளவு கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்கிற பட்டியலை ஏதும் அவர் வெளியிட்டிருக்கிறாரா… குறைந்தபட்சம் அவர் கட்சி ஆரம்பித்த இந்த இரண்டு ஆண்டுகளில் ஊழலை எதிர்த்து ஏதாவது போராட்டம் நடத்தியிருக்கிறாரா… மேடைப் பேச்சுக்காக, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக இதையெல்லாம் தற்போது பேசிக்கொண்டிருக்கிறார் கமல்” எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள்.

ஆனால், மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளோ “நாங்கள் முன்வைக்கும் திட்டங்களை நிச்சயமாக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம். ஆனால், அதை எப்படி நிறைவேற்றுவோம் என்பதைத் தற்போது சொல்ல மாட்டோம். நிச்சயமாக மற்ற கட்சிகள் அதைக் காப்பியடித்துவிட வாய்ப்பிருக்கிறது. அதைத்தான் எங்கள் தலைவரும் சொன்னார். ஆனால், கொள்கையைச் சொன்னால் காப்பியடித்துவிடுவார்கள் என தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது’ என்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.