இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்த நாடுகளுடன் சவுதி அரேபியாவும் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை நிறுத்திவைத்துள்ளது. இதுகுறித்த 6 அப்டேட்ஸ்:

> இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரஸின் கடந்த வாரம்தான் இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. லண்டன், கென்ட், எசெக்ஸ் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் கூர்மையான, அதிவேக உயர்வு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 60 வெவ்வேறு உள்ளூர் பகுதிகளில் 1000 பேருக்கு முதற்கட்டமாக இந்தத் தொற்று பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர்தான், இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியதால் இங்கிலாந்து முழுவதும் உஷார்படுத்தப்பட்டது.

> பரவல் வேகம் 70% அதிகம்: இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏற்கேனவே பரவி வைரஸை விட இதன் தொற்றும் தன்மை 70% அதிகம் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் பெரும் அச்சம் எழுந்து கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 30 வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு யு.கே முழுவதுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முற்றிலும் முடங்கியுள்ளது.

image

> புதிய வகை கோரோனா வைரஸைப் பொறுத்தவரையில், இது பரவும் வேகம் அதிகம் என்பது அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டாலும், இந்த வகை வைரஸின் தாக்கத்தால் மனித உயிருக்கு அதிக அச்சுறுத்தல் இருக்கிறதா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

> புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து கடந்த ஒரு வார காலமாக கண்காணித்து வருகிறது, உலக சுகாதார நிறுவனம். குறிப்பாக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள், இந்தப் புதிய வகை கொரோனா வைரஸை எந்த அளவுக்கு கட்டுப்படுத்தும் என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

image

> இங்கிலாந்தில் இருந்து வரும் மற்றும் அங்கு செல்லும் பயணிகளுக்கு பிற ஐரோப்பிய நாடுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இங்கிலாந்திற்கான விமான சேவையை இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவைத்துள்ளன. தங்கள் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பது குறித்து தீவிர ஆய்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனிடையே, சவுதி அரேபியாவும் விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

> புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசர கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது. இதில், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சர்வதேச சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதியும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய வகை உருமாற்றம் பெற்ற வைரஸ் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.