டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் தடுக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அய்யாக்கண்ணு தலைமையில் எலிக்கறி சாப்பிடும் நூதன போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயச் சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்து உள்ள நிலையில், அவர்களின் இந்த போராட்டம் 12 நாள்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த போராட்டத்திற்குத் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கலந்து கொள்ளச் செல்வதற்கு முன்பாக அவர்களைக் காவல் துறையினர் கடந்த வாரம் திருச்சி ரயில் நிலையத்தில் கைது செய்தனர். தொடர்ந்து அவர் டெல்லி போராட்டத்திற்குச் செல்ல விடாமல் காவல் துறையினர் தடுத்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் தன்னையும், தன்னுடைய விவசாயச் சங்கத்தைச் சேர்ந்தவர்களையும் டெல்லிக்குச் செல்ல அனுமதிக்காததைக் கண்டித்தும்,

போராட்டத்தில் விவசாயிகள்

தங்களைத் தடுக்கக் கூடாது என வலியுறுத்தியும் நேற்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், கரூர் புறவழிச் சாலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சனம் செய்து கண்டன கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், தங்களது வாயில் எலிகளை வைத்துக் கடித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணுவிடம் பேசினோம், ”மத்திய அரசு விவசாயிகளை விரோதியாகவும் பார்க்கிறது.

அய்யாக்கண்ணு

டெல்லியில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தில் விவசாயிகள் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாதபடி சட்டம் இயற்றியிருக்கிறார்கள். விவசாயிகளிடம் எந்தவித ஆலோசனையும் கேட்காமல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் நிர்ணயிக்கும் விலைக்கு மட்டுமே வாங்கவும் விற்கவும் முடியும். குத்தகைதாரர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள். மரபணு மாற்றப்பட்ட விதைகளை ஊக்கப்படுத்தி விவசாயம் செய்ய ஊக்கப்படுத்துவதை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுவதால், கடந்த ஆண்டு டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் அமித் ஷா எங்களிடம் நதி நீர் இணைப்பு, விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் போன்றவற்றை ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்று வரையிலும் அவை நிறைவேற்றவில்லை, அதற்கான தொகையையும் ஒதுக்கவில்லை. இதனை கண்டித்து மத்திய அரசை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தத் தீர்மானித்து விவசாயிகளோடு கிளம்பும் நேரத்தில் போலீஸார் என்னைத் தடுத்து நிறுத்தி, வீட்டுக் காவலில் வைத்திருந்தனர்.

எலிகறி சாப்பிடும் நூதன போராட்டம்

இதே போல் இரண்டும் முறை என்னை வீட்டுக் காவலில் வைத்து மிரட்டுகின்றனர். நான் டெல்லி சென்றுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். நான் டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர உள்ளேன்” என்றார். “மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமல் இனி எலி கறியைத் தான் சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப் போராட்டத்தை நடத்தினேன்” என்றார் ஆவேசமாக!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.