“தனித்தனியா விளையாடுங்க… இல்லைன்னா கூண்டோடு கைலாசம்” என்கிற கமலின் எச்சரிக்கை, சனத்தின் வெளியேற்றம் போன்றவற்றைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் மாற்றங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. வியூகங்கள் மாறுகின்றன. தன் செல்ல மகனான சோமையே நாமினேட் செய்யும் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார் ராஜமாதா அர்ச்சனா.

“தனித்தனியா வெளயாடறவங்களை வெளியே அனுப்பிட்டு சும்மா இருக்கிற இந்த சொகுசு குரூப்பு ஜெயிப்பாங்களாமா?” என்று ஆரி புலம்புவதில் நியாயமுள்ளது. இந்த சிண்டிகேட்டை உடைக்கும் வகையில் பிக்பாஸும் இப்போது தனது வியூகத்தை வகுக்கத் துவங்கியிருக்கிறார்.

பிக்பாஸ் – நாள் 64

அதை விடவும் முக்கியமான மாற்றம் ஒன்று இன்று நடந்தது.

கேப்டன்சி டாஸ்க் என்பது பொதுவாக உடல்தகுதி சார்ந்துதான் ஒவ்வொரு வாரமும் நடக்கும். இந்த செயல்முறை பெண் போட்டியாளர்களுக்கான சந்தர்ப்பத்தைக் குறைக்கிறது என்று நான் பல முறை குறிப்பிட்டிருக்கிறேன். மாறாக, மூளை சார்ந்த விளையாட்டை வைத்து வீட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறேன். இந்த வாரம் அது சாத்தியமானதில் மகிழ்ச்சி.

ஓகே… 63வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

62-ம் நாளின் தொடர்ச்சி. சனம் இருக்கும் போது அழுது புரண்டது போதாதென்று அவருக்காக ஒரு ரகசிய பிரிவுக் கடிதத்தையும் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார் அனிதா.

ஷிவானி தனியாக அமர்ந்து கண்கலங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அவரும் சனத்தின் பிரிவிற்காக கலங்குகிறாரோ என்று பார்த்தால் இல்லை… ‘ஜஸ்ட் எஸ்கேப்’ என்கிற விஷயம் அவரை அதிர்ச்சியாக்கி இருக்கிறது. “மக்களை சந்திச்சிட்டு வர்றேன்” என்று கெத்தாகக் கூறியவருக்கு இப்போதுதான் தோல்வியின் சூடு உறைக்க ஆரம்பித்திருக்கிறது போல.

பிக்பாஸ் – நாள் 64

“அசடு… இதுக்காகவா அழுவே… நீ முந்திண்டா நோக்கு… நான் முந்திண்டா நேக்கு’’ என்கிற வியட்நாம் வீடு ‘சிவாஜி’ மாதிரி ஷிவானிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் பாலாஜி. “வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த பிக்பாஸ் வீட்டில் இடமேது” என்கிற தத்துவத்தையெல்லாம் சொல்லி ஷிவானியை ஆற்றுப்படுத்த முயன்றார்.

“நீ நீயா இரு. என்னை மாதிரி கோபக்காரன்… domestic violence-ன்னுல்லாம் பேரை வாங்கிட்டு போகாத” என்று ஆலோசனையும் தந்து கொண்டிருந்தார் பாலாஜி. ஷிவானி இயல்பில் அமைதியான சுபாவம் கொண்டவராக இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் ஒரு விளையாட்டில் பேச வேண்டிய, செயல்பட வேண்டிய நேரத்தில் கூட செயல்படாமல் ஏதோ சுற்றுலா தளத்திற்கு வந்தவர் போலவே இருப்பது முறையல்ல.

வரிசைப்படுத்துதல் டாஸ்க்கில் இதர போட்டியாளர்கள் கொலைவெறியுடன் முட்டி மோதி கொண்டிருந்தபோது, அதன் தீவிரம் புரியாமல், “எனக்கு வோட் பண்ணணும்னு தோணலை” என்று அவர் விட்டேற்றியாக சொல்வது பொறுப்பின்மை. போலவே பாலாஜியின் முறை வரும் போது மட்டும் வாக்களிக்க முன்வருவது ‘குரூப்பிஸம்’.

64-ம் நாள் விடிந்தது. காலைப்பாடலுக்கு அனிதா நடனமாட வராமல் துக்கமும் தூக்கமுமாக படுக்கையில் கிடந்தார். ஆஜீத்தின் சிகையலங்காரம் ஜப்பானிய சாமுராய் போல விநோதமாக இருந்தது.

“குரூப்பா விளையாடறவங்கதான் இங்க இருப்பாங்கன்னா, தனியா வெளயாடறவங்களுக்கு என்ன மரியாதை? கேமை கேமா விளையாடணும். தகுதியுள்ளவங்களுக்கு டைட்டில் கிடைச்சா எனக்கு சந்தோஷம்” என்று சரியான விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்தார் ஆரி.

“பிக்பாஸ் வீட்டில் தனியாக நின்று விளையாடியவர் நீங்கள்தான்” என்று சனத்தை கமல் வெளியில் பாராட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அதனினும் முதன்மையாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஆரியைத்தான். ‘தனியா விளையாடணும்’ என்று சொல்கிற பாலாஜிக்கு கூட ‘குரூப்’ இருக்கிறது. ஆனால் எந்தக் குரூப்பிலும் இல்லாமல் தனியாளாக இந்தப் போட்டியை கடந்து கொண்டிருப்பவர் ஆரி மட்டுமே.

ஆரியின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பாலாஜி, “அதனால்தான் நானும் முன்னயே சொன்னேன். இதே மாதிரி போயிட்டு இருந்தா இந்த போட்டி சமநிலையற்றதா மாறிடும்ணு” என்றார். “தகுதியில்லாத ஆளை சூப்பர் சூப்பர்ன்னு சொல்லிட்டு இருந்தா என்ன அர்த்தம்?” என்று ஆரி சொன்னதற்கு “ஆடியன்ஸூம் அதைத்தான் நம்பிடுவாங்க” என்றார் அனிதா. பார்வையாளர்களை அப்படி குறைத்து மதிப்பிடத் தேவையில்லை அனிதா மேடம்! அவர்கள் தங்களுக்குக் காட்டப்படுகிற காட்சிகளின் வழியாக சரியாகத்தான் போட்டியாளர்களை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது முடிவுகளில் சரியாக பிரதிபலிக்கிறதா என்பதுதான் கேள்வி.

பிக்பாஸ் – நாள் 64

“இந்த ரமேஷ்… தன் கால் மேல இன்னொரு காலைத் தூக்கிப் போடறதுக்கு கூட இன்னொருத்தர் உதவியை எதிர்பார்க்கறாரு. விட்டா… ஹெல்ப்புக்கு பிக்பாஸையே கூப்பிடுவாரு போல. இவரெல்லாம் ஒரு கேப்டனா?” என்று காண்டானார் அனிதா.

“தோடா… மிஸ்டர் இண்டியா போறாருடா… இவர்தான் இந்தியாவிலேயே அழகாம்டா…” என்பதை வித்தியாசமான மாடுலேஷனில் சொல்லி பாலாஜியை ரம்யா கிண்டல் செய்து கொண்டிருந்தது சுவாரஸ்யமான காட்சி. “‘மிஸ்டர் இந்தியா’ன்னா இந்தியாவிலேயே அழகானவரா?” என்று சீரியஸாக சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் ஆஜீத். (ஏம்ப்பா.. தம்பி… பாலாஜியைப் பார்த்துமா உனக்கு இந்த சந்தேகம்?).

“என்னாது… இவர்தான் உலகத்துலயே அளகானவரா? அப்படில்லாம் சொல்லாதீங்க… என் மனசு தாங்காது” என்று இந்தக் கலாய்ப்பில் இணைய வந்தார் ஷிவானி. பாலாஜியிடமிருந்து டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுகிறாராம். “ஹலோ… உங்க மனசுல இருக்கற விருப்பத்தையெல்லாம் இதுல கோத்து விடாதீங்க!” என்று ஷிவானியையும் கிண்டலடித்தார் கலாய்ப்பு ராணி ரம்யா.

இந்த வார தலைவர் போட்டி. புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கிறவர்கள், வந்தவருக்கெல்லாம் பதவி கொடுப்பது போல, இந்த வாரம் வீட்டிலுள்ள அனைவருமே தலைவர் பதவி போட்டிக்குத் தகுதியானவர்களாம். இது நினைவுத் திறனை பரிசோதிக்கும் போட்டியாக அமைந்தது மகிழ்ச்சி. திரையில் சில புகைப்படங்கள் பத்து விநாடிகளுக்கு காட்டப்பட்டு பிறகு அதிலிருந்து கேள்வி கேட்கப்படும்.

பிக்பாஸ் – நாள் 64

இரண்டு இரண்டு பேராக வந்து போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். தோற்றவர் விலக, ஜெயித்தவர் அடுத்த ஜோடியை தேர்வு செய்ய வேண்டும். இறுதியில் எஞ்சுபவர் இந்த வார கேப்டன். இதுதான் விதி.

ஜெயித்தவர் அடுத்த ஜோடியை அழைக்கும் விதத்தில் பிக்பாஸ் வீட்டின் உள்அரசியல் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. அர்ச்சனாவும் பாலாஜியும் இணைந்து காய்களை நகர்த்தினார்கள். இந்த விளையாட்டில் அர்ச்சனா கூர்மையானவராகவும், தன்னம்பிக்கையுள்ளவராகவும் செயல்பட்டார். கம்ப்யூட்டர் ஸ்கீரினிற்கு உள்ளேயே தலையை விட்டு விடுவாரோ என்று எண்ணுமளவிற்கு அதீத ஆர்வத்துடன் இருந்தார் அனிதா.

உடல்பலம் சார்ந்த போட்டி என்றால் தன்னம்பிக்கையுடன் வரும் ராஜதந்திரியான பாலாஜி, இதில் சற்று ‘டொங்கலாகத்தான்’ இருந்தார். இவர் தவறான விடையைச் சொல்லி தோற்றபோது பாம்பு நடனம் ஆடி அந்தத் தோல்வியைக் கொண்டாடினார் அர்ச்சனா. “நீயெல்லாம் ஜெயிக்கப் போறியா?” என்று சேம்சைட் கோல் போட்டு ஷிவானியை ஏளனமாக பார்த்தார் பாலாஜி. ஆனால் ஆச்சர்யமாக ஷிவானியும் ஒருமுறை சரியான பதிலைச் சொல்லி விட்டார்.

சில கேள்விகளை நேரடியாகவும், சில கேள்விகளைக் குழப்புவது போல் திருகியும் கேட்டார் பிக்பாஸ். சரியாக கவனித்து சொன்னார்களா, அல்லது அதிர்ஷ்டத்தில் அடித்துவிட்டார்களா என்பது அவரவர்களுக்கே வெளிச்சம். இறுதி நிலையில் நிஷாவும் அனிதாவும் வர, அனிதா சொன்ன பதில் சரியாக அமைந்ததின் காரணமாக… அவரே இந்த வாரத்தின் தலைவர்.
ஏற்கெனவே சொன்னது போல் மூளைத்திறனை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போட்டி நடத்தப்பட்டதால்தான் ஒரு பெண்ணால் இதில் ஜெயிக்க முடிந்தது. இதற்காக உடல்திறனில் பெண்கள் குறைவானவர்கள் என்று அர்த்தம் இல்லை. பிரசவ கால அவஸ்தைகளையும் வலியையும் ஆணால் தாங்க முடியாது என்பதுதான் உண்மை. அந்த அளவிற்கான மன உறுதி பெண்களிடம் உண்டு. ஆனால் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடும் போது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் கலாசாரம் இங்கு குறைவு. இங்குள்ள உணவுப்பழக்கமும் கலோரிகளைக் கூட்டி விடுகிறது.

பிக்பாஸ் – நாள் 64

‘சோழி பரம்பரையில் (சோழருக்கு பெண்பால்) ஒரு எம்.எல்ஏ…’ என்பது போல் அனிதா தலைவர் ஆனதை அவராலேயே நம்ப முடியவில்லை. அனிதாவிற்கு சந்தோஷம் வந்தாலும் சரி. துக்கம் வந்தாலும் சரி, எதிரில் இருப்பவரின் பாடு திண்டாட்டம்தான். அந்த அளவிற்கு உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கி எதிரில் இருப்பவரின் மீது சாரல்களை தெறித்து விடுகிறார். எனவே இம்முறையும் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கி விநோதமான சப்தங்களுடன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ‘இந்த வாரம் போயிடுவேன்’னு நெனச்சேன். ஆனா தப்பிச்சிட்டேன்’ என்பதில் அவருக்கு ஆனந்தம்.

“இந்த வாரம் போனாலும் பரவாயில்லை. அதுக்கு தயாராகத்தான் இருக்கேன்” என்று போட்டியாளர்கள் ‘கெத்தாக’ சொல்வது பெரும்பாலும் பாவனைதான் என்பது அனிதாவின் எதிர்வினைகளில் இருந்து தெரிகிறது.

“அர்ச்சனா குரூப்பில் மாட்டிக்காம தன்னிச்சையாக முடிவு எடுங்க” என்பது போன்ற எச்சரிக்கையை அனிதாவிற்கு வழங்கினார் பாலாஜி. அதை பிக்பாஸூம் அப்போது வழிமொழிந்தது ஹைலைட்டான தருணம்.

ஆனால் அனிதா அதை பின்பற்றியது போல் தெரியவில்லை. கேப்டனுக்குரிய கெத்து இல்லாமல், “யார் யாருக்கு என்ன வேலை வேணும்?” என்று டொங்கலாக செயல்பட்டார் புதிய கேப்டன். ஆரி சொன்ன ஒரு யோசனைக்கு சோம் கோபித்துக் கொள்ள (பார்றா!) இருவருக்கு இடையேயும் வாக்குவாதம் நடந்தது. ‘ஒரே டீமில் ஒருவர் தொடர்ந்து இருக்க வேண்டியதில்லை. பணிகளை மாற்றி மாற்றி செய்யலாம்’ என்று ஆரி சொன்னது சரியான யோசனைதான். இவர்களின் வாக்குவாதத்தைத் தடுக்க முடியாமல் திகைத்துப் போய் நின்றார் அனிதா. இந்த சர்ச்சையில் சோம் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

“இன்னொரு விஷயம் இருக்கு. அதை முடிவு பண்ணிட்டு சொல்றேன்” என்று சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் புதிய தலைவர். என்னவென்று இனிதான் பார்க்க வேண்டும். (இனிமே பாசிப்பருப்புல மட்டும்தான் சாம்பார் வைக்கணும் என்று ஆர்டர் போடுவாரோ?!).

அர்ச்சனா குரூப் தங்களுக்கு உள்ளாக நாமினேட் செய்து கொள்ளாமல் போங்காட்டம் ஆடுகிறார்கள் அல்லவா? அந்த வியூகத்தை உடைக்க பிக்பாஸ் முடிவு செய்தார் போலிருக்கிறது. அதற்கான ஆட்டத்தை ஆரம்பித்தார்.

பிக்பாஸ் – நாள் 64

வரிசைப்படுத்துதல் டாஸ்க்கில் முதலிடத்தில் வந்த ஆரியை ‘ஆக்டிவிட்டி’ ஏரியாவிற்கு அழைத்த பிக்பாஸ், அவரை எவிக்ஷன் பிராசஸில் இருந்து விடுவிப்பதாகவும், அவருக்குப் பதிலாக இன்னொரு நபரை அவர் சேர்க்கலாம் என்று சொல்லி ஆரிக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

‘வாழைப்பழத்தை உறித்து தரச் சொல்வதோடு மட்டுமல்லாமல் அதில் ஜூஸ் போட்டு தரச் சொல்லும்’ கடும் உழைப்பாளியான ரமேஷை சந்தோஷத்தோடு நாமினேட் செய்தார் ஆரி. இவர் விடைபெறும் போது ‘குருநாதா’ என்று பிக்பாஸை அழைத்தது புதிய ஸ்டைலாக இருக்கிறது. இது கடந்த சீஸனில் சாண்டி அடிக்கடி செய்த விஷயம்.

வெளியே வந்த ஆரி ‘கோவிட் டெஸ்ட் எடுத்தாங்க’ என்கிற வழக்கமான இன்சைட் ஜோக்கை சொல்ல “அப்படியா சரி… சரி…” என்ற இதர போட்டியாளர்கள் புரிந்து கொண்டு சிரித்து மகிழ்ந்தார்கள்.

ஆனால், உள்ளே ஏற்கெனவே சென்று வந்தவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்றால் “உங்கள் பங்களிப்பு என்ன?” என்று தங்களை பிக்பாஸ் துளைத்து எடுத்ததைப் போலவே ஆரியையும் துளைத்திருப்பார் என்றே கருதியிருப்பார்கள். ஆனால் நடந்தது வேறு விஷயம் என்பது அவர்களுக்கு பிற்பாடுதான் தெரியும்.

சனம் வெளியேற்றப்பட்டு விட்டதால் மூன்றாம் இடத்திலிருந்த பாலா இரண்டாம் இடத்திற்கும் நான்காம் இடத்திலிருந்த அர்ச்சனா மூன்றாம் இடத்திற்கும் முன்னகர்ந்தார்கள். அவர்களையும் இதே போல் அழைத்த பிக்பாஸ், ஆரிக்குத் தந்த அதே வாய்ப்பை தந்தார். அடுத்ததாக உள்ளே வந்த பாலாஜி. அர்ச்சனாவிற்கு வைத்தது அட்டகாசமான செக்மேட்.

தன்னுடைய பெயரை ரிலீஸ் செய்து கேபியை நாமினேட் செய்த இவர், அடுத்ததாக வரவிருக்கும் அர்ச்சனாவிற்காக சோம், ஆஜீத், ரியோ ஆகிய மூவரை மட்டும் விட்டு வைத்தார். சோம், ரியோ ஆகியோரை அர்ச்சனா நாமினேட் செய்ய மாட்டார். ஆஜீத்தை தேர்வு செய்தால் ‘குரூப்பிஸம்’ என்கிற முத்திரை பலமாகும் என்பது பாலாஜியின் கணக்கு.

பிக்பாஸ் – நாள் 64

அடுத்து வந்த அர்ச்சனாவிற்கு பாலாஜியின் வியூகம் புரிந்தது. ஆஜித்தை நாமினேட் செய்தால் கமல் சொன்ன புகார் உறுதியாகி விடும் என்பது அவருக்குப் புரிந்தது. எனவே மீதமிருப்பவர்கள் ரியோ மற்றும் சோம். இரண்டு செல்லப்பிள்ளைகளில் எந்தப் பிள்ளையை தியாகம் செய்வது என்கிற தத்தளிப்பில் இருந்தவர், பின்பு மனதை கல்லாக்கிக் கொண்டு ‘சோமின்’ பெயரைத் தேர்ந்தெடுத்தார். நல்ல முடிவு. ஏறத்தாழ ரமேஷைப் போலவே (சோம்)பேறியாக இருக்கும் சோம் வெளியேறினால் நல்லதுதான். சோமை நாமினேட் செய்தது அர்ச்சனாவிற்கு வலித்தாலும் அதை விடவும் தான் தப்பித்ததில் நிம்மதியும் கூடவே தெரிந்தது.

வெளியில் வந்த பாலாஜி, “அய்யோ… ஊசி போட்ட இடம் வலிக்குதே” என்று மிகையாக பாவனை செய்தது சுவாரஸ்யமான நகைச்சுவை. போலவே அர்ச்சனா வெளியே வந்த போது நெஞ்சின் இருபக்கத்தையும் காட்டி, “எந்தப் பக்கத்துல குத்தினீங்க?” என்று சூசகமாக கேட்டதும் நல்ல கிண்டல்.

‘ஐயா… என்னை மட்டும் ஏங்கய்யா கூப்பிட மாட்றீங்க… நான் மட்டும் என்ன பாவம் பண்ணேன்’ என்று ஜாலியாக அனத்திக் கொண்டிருந்தார் ரியோ. உள்அறையை, ‘ஆபிஸ் ரூம்’ என்று நான் குறிப்பிட்டது போலவே, அதே காமெடியை வைத்து ரியோவும் குறிப்பிட்டது எனக்கு கிடைத்த சிறுமகிழ்ச்சி.

இந்த வாரம் எவிக்ஷன் பிராசஸில் இடம் பெற்றவர்களின் பட்டியலை பிக்பாஸ் அறிவித்தார். அனிதா இந்த வாரம் தலைவர் ஆகிவிட்டதால் அவர் ரிலீஸ் செய்யப்படுகிறார். எனவே பழைய பட்டியலோடு புதிதாக இணைந்தவர்களையும் சேர்த்து அறிவித்தார் பிக்பாஸ். பட்டியலில் எப்படி மாற்றம் ஏற்பட்டது என்று சிலர் குழம்பினார்கள். அந்த ரகசியம் அர்ச்சனா, ஆரி மற்றும் பாலாஜிக்கு மட்டுமே தெரியும். பிறகு ‘இங்க்கி பிங்க்கி பாங்க்கி’ கணக்கு போட்டு அவர்களாக ஒருவாறு கண்டுபிடித்தார்கள்.

பிக்பாஸ் – நாள் 64

ஆக… இந்த வாரம் எவிக்ஷன் பிராசஸ் பட்டியலில் இடம் பெற்றவர்கள் ரம்யா, நிஷா, ஷிவானி, கேபி, ரமேஷ் மற்றும் சோம். (இந்த வாரமாவது தகுதியில்லாத போட்டியாளர்களில் ஒருவர் வெளியேறினால் நன்று!). மாற்றியமைக்கப்பட்ட புதிய போர்டு வெளியில் தொங்கியதை மக்கள் சென்று வேடிக்கை பார்த்தார்கள்.

“ஆஜீத்தை நாமினேட் செஞ்சா குருப்பிஸம்-னு சொல்லிடுவாங்க.. (டெபனட்லி.. டெபனட்லி)… அதனால்தான் வேறவழியில்லாம சோமை நாமினேட் செஞ்சேன். ஒருவேளை ஆரி மாட்டியிருந்தா அவரைத்தான் தூக்கியிருப்பேன்” என்று நிஷாவிடம் ரகசியம் சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. “இவனுக்கு ஒரு பாயாசத்தைப் போட்ற வேண்டியதுதான்” என்கிற வழக்கமான முகபாவம் அவரது கண்களில் மின்னியது. அதே சமயத்தில் சோமை நாமினேட் செய்ய வேண்டியிருந்ததே என்கிற சோகமும் இருந்தது.

பிக்பாஸ் வீட்டில் நிகழும் மாற்றங்கள் ஆரி மற்றும் பாலாஜியின் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடா’ என்று விஜய் – மோகன்லால் ஜோடியைப் போல தோளோடு தோள் சேர்ந்து அவர்கள் பாடாததுதான் பாக்கி. ‘போடா எல்லாம் விட்டுத்தள்ளு… பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு’ என்று தேவா – சூர்யாவாக மாறியிருக்கிறார்கள்.

“அர்ச்சனா வந்தப்புறம்தான் இங்க குரூப்பிஸம் ஸ்ட்ராங்கா ஆகியிருக்கு… அதை உடைக்கணும்… இந்தத் தனி குரூப்புல ஒவ்வொருத்தரா வெளியே போயிட்டா… அவங்களுக்கு வசதியா போயிடும். உனக்காவது ஊட்டி விடறதுக்கு ஷிவானி இருக்கா. எனக்கு யார் இருக்கா… சொல்லி புலம்பறதுக்கு கூட ஆளிருக்காது” என்று பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆரி.

“நீயும் விளையாடற… நானும் இறங்கறேன்… யாரு நேர்மையா விளையாடறாங்களோ அவங்க கப்பு அடிக்கட்டும். அதுதான் சரியான விஷயம்” என்று ஆரி சொல்வது முற்றிலும் சரியானது.

பிக்பாஸ் – நாள் 64

பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது ஆயில் மசாஜ் நடப்பதால் அதையொட்டியே ஒரு டாஸ்க்கை அமைத்துவிட்டார் பிக்பாஸ். தேங்காய் எண்ணெய் நிறுவன விளம்பரம் தொடர்பான டாஸ்க். ரமேஷூம் ஆஜீத்தும் நடுவர்களாக இருக்க, வீடு இரண்டு அணிகளாகப் பிரிய வேண்டும். அதில் தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் கூந்தல் வடிவில் உள்ள கயிற்றைப் பிடித்து தொங்க வேண்டுமாம். அவர் தொங்குவதை விட்டுவிட்டால் அவர் அணியைச் சேர்ந்தவர் எதிர் அணிக்குத் தலை மசாஜ் செய்ய வேண்டுமாம். (என்னதான் ஆயில் கம்பெனி விளம்பரம்னாலும் டாஸ்க்ல ஒரு நியாய தர்மம் வேணாமா!). யார் நீண்ட நேரம் தாக்குப் பிடித்து தொங்குகிறாரோ, அந்த அணி வெற்றி பெறும்.

கூந்தலில் தொங்குவதற்காக (வேறு எந்த வார்த்தையையும் நினைத்து விடாதீர்கள்) பாலாஜியும் ஆரியும் தேர்வு செய்யப்பட்டார்கள். பாடிபில்டராக இருந்தாலும் பாலாஜியால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆனால் யோகா மாஸ்டரான ஆரி, அவரை விடவும் அதிக நேரம் தாக்குப் பிடித்து அசத்தி போட்டியில் வெற்றி பெற்றார். இவர்களுக்குப் பரிசு கிடைத்தது. வேறென்ன, தேங்காய் எண்ணெய்தான்!

இந்தப் பரிசைத் தலைமையேற்று வாங்கிக் கொண்ட அனிதா, தனது பிரத்யேக சிரிப்பை வழங்கினார். எனக்கென்னமோ அனிதாவின் சிரிப்பு சத்தம் வருங்காலத்தில் ஒரு பிரபலமான ரிங் டோனாக மாறி அதுவே ஒரு சிறந்த பிராண்ட் ஆகலாம் என்று தோன்றுகிறது. அப்படியொரு தெய்விகச் சிரிப்பய்யா அந்த சிரிப்பு!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.