பொதிகை தொலைக்காட்சியில் நாள்தோறும் 15 நிமிடம் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைக் கண்டித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச), வீடுகளுக்குள் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொறுப்புத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கவேண்டும் எனவும், வாராவாரம் சனிக்கிழமை 15 நிமிடங்களை வாராந்திர செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டுமெனவும் வெளியாகியுள்ள ஆணைக்கு தமுஎகச கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய மக்களின் வாழ்வோடு எந்தவொரு காலத்திலும் வகையிலும் தொடர்பற்றது மொழியியலாளர்களால் சுட்டப்படுகிற சமஸ்கிருதத்தை தூக்கிச்சுமக்கும் ஒன்றிய அரசு, அதை ராஷ்ட்ரீய சமஸ்கிருத சன்ஸ்தான் என்ற அமைப்பின் மூலம் இந்திய மக்கள் அனைவர்மீதும் திணிக்க தொடர்ந்து மேற்கொண்டுவரும் இழிமுயற்சிகள் நாட்டின் ஒற்றுமைக்கும் பன்மைத்துவத்துக்கும் எதிரானவை என தமுஎகச சுட்டிக்காட்டுகிறது.

image

தேசியமொழிகள் எதுவொன்றுக்கும் இல்லாத முன்னுரிமையை சமஸ்கிருதத்திற்கு வழங்கி அதை இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றாக சேர்த்ததும்கூட திட்டமிட்ட மோசடியே. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய செம்மொழிகளின் வளர்ச்சிக்கு கடந்த மூன்றாண்டுகளில் வெறும் 29 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்க 643.84 கோடி ரூபாயை – அதாவது 22 மடங்கு கூடுதல் தொகையை ஒதுக்கியுள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 24,821 பேருக்கு மட்டுமே தாய்மொழியாக உள்ள சமஸ்கிருதத்திற்கு இவ்வளவு பெருந்தொகையை செலவழிப்பதானது, அதை இந்தியாவின் தொன்மையான மொழியாகக் காட்டுவது, ஆரியர்களின் பூர்வீகம் இந்தியாவே எனத் திரிப்பது, வேதவழிப்பட்ட பண்பாட்டை இந்தியாவில் மீட்டமைப்பது என்னும் இந்துத்துவ வரலாற்று மோசடிக்கு அரசதிகாரத்தைப் பயன்படுத்துவதாகும். சமஸ்கிருத ஆண்டு, சமஸ்கிருத வாரம் ஆகியவையும் இத்தகையதே.

“அனைத்து மாநிலங்களிலும் டி.டி-யில் தமிழ் செய்தி ஒளிபரப்பப்படுமா?” – திருமாவளவன் கேள்வி 

தேசிய கல்விக்கொள்கையில் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்தி அந்த மொழியையும் அதனூடாக ஆரிய மேன்மை, வேதவழிப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றை குழந்தைகளிடம் திணித்து அவர்களது மனங்களை தகவமைக்கும் முயற்சி குறித்த கண்டனங்களை பொருட்படுத்தாத இந்த அரசு, இப்போது நேரடியாக வீடுகளுக்குள் தொலைக்காட்சி செய்தியறிக்கை வழியாக சமஸ்கிருதத்தை திணிக்க முனைகிறது.

image

தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்காக 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொதிகை தொலைக்காட்சியில் இதுகாறும் வேறுமொழிச் செய்திகள் எதுவும் இடம்பெற்றிராத நிலையில் தமிழர்களின் பண்பாட்டு வாழ்விற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத சமஸ்கிருத செய்தியறிக்கை என்பதை ஏற்கமுடியாது. சமஸ்கிருத செய்தி அறிக்கை, சமஸ்கிருத வாராந்திர செய்தித்தொகுப்பு குறித்த ஆணையை பிரசார் பாரதி நிறுவனம் உடனே திரும்பப்பெற வேண்டும். இந்த ஆணையை 2020 டிசம்பர் 1 முதல் செயல்படுத்துவதாக பொதிகை தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்.

குறைந்த விலையில் மிகுந்த ஊட்டம்… பட்ஜெட்டுக்குள் அடங்கும் ஆரோக்கியம்! 

இதுதொடர்பாக மொழிப்பற்றாளர்களும் தமிழர் பண்பாட்டு அமைப்புகளும் குரலெழுப்ப வேண்டும் என தமுஎகச கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசும் இவ்விசயத்தில் ஒன்றிய அரசுக்கெதிரான தனது கண்டனத்தைப் பதிவு செய்வதுடன் சமஸ்கிருதத் திணிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தமுஎகச வலியுறுத்துகிறது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.