அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 3-ம் தேதி நடந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 146 மில்லியன் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். இதில், ஜனநாயக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக 75 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். அதேபோல், பெரும்பான்மைக்கு 270 எலக்டோரல் வோட்ஸ் எனப்படும் பிரதிநிதிகளின் வாக்குகள் தேவை என்ற நிலையில், அவர் 290 வாக்குகள் பெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் அறிவித்தன. அதேநேரம், தற்போதைய அதிபரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப், 70 மில்லியன் வாக்குகளைப் பெற்றார். எலக்டோரல் வோட்ஸ் எனப்படும் பிரதிநிதிகளின் 214 வாக்குகளுடன் அவர் தோல்வியைத் தழுவியதாகக் கூறப்பட்டது.

ட்ரம்ப் மற்றும் பைடன்

தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பெரும்பான்மை அடிப்படையில் ஜோ பைடன் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதாக ஆய்வு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. ஆனால், தொடக்கம் முதலே தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். குறிப்பாக, தேர்தலுக்கு முன்னரே 101 மில்லியன் மக்கள் வாக்களித்ததாக வெளியான புள்ளிவிவரம் ட்ரம்ப் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தபால் வாக்குகளே ஜனநாயக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றிக்கு உதவியதாகவும் ட்ரம்ப் தரப்பு குற்றம்சாட்டியது. அதேநேரம், தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் பிரசாரக் குழு தரப்பில் இதுவரை ஆதாரங்கள் எதையும் வெளியிடவில்லை. இதுதொடர்பாக ட்ரம்ப் தெரிவித்த கருத்துகள் ஆதாரமற்றது என ட்விட்டர் சுட்டிக்காட்டியது.

தேர்தல் தோல்வியை ட்ரம்ப் ஒப்புக்கொள்ளாதநிலையில், அதிபர் தேர்தலில் முறைகேடு என சட்டரீதியாக வழக்கு தொடர ட்ரம்ப் தரப்பு முடிவு செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசின் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தலாம் என அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருந்த போதே முறைகேடு நடைபெற்றதாகக் கூறி பென்சில்வேனியா, ஜார்ஜியா உள்ளிட்ட 10 மாகாண நீதிமன்றங்களில் ட்ரம்ப் தரப்பு முறையிட்டது. ஆனால், அவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வில்லியம் பார்

இந்தநிலையில், ஆதாரமற்ற ட்ரம்பின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் ஒப்புதல் அளித்திருப்பது தேர்தல் நடைமுறைகளில் அரசியல்ரீதியாகக் குறுக்கீடு செய்வதே என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுகுறித்து பேசிய தேர்தல் சட்ட வல்லுநர் ரிக் ஹஸென் (Rick Hasen), `மாகாணங்கள் தரப்பில் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், அட்டர்னி ஜெனரல் எடுத்துள்ள முடிவு, தேர்தல் நடைமுறையில் அரசியல்ரீதியாகக் குறுக்கீடு செய்வதாகப் பார்க்கப்படும். முறைகேடு தொடர்பாக ட்ரம்ப் தரப்பு இதுவரை எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒப்புதல் அளித்திருப்பது ட்ரம்ப்புக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட முடிவு என்றே கருதப்படும்’’ என்றார்.

Also Read: ஜோ பைடன்: சோகம் நிறைந்த பெர்சனல் பக்கங்கள்; சவால் நிறைந்த அரசியல் பக்கங்கள் – அதிபரானது எப்படி?

இந்தநிலையில், தேர்தல் தொடர்பாக சட்டரீதியாக ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகளுக்கு குடியரசுக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அமெரிக்க செனட் அவையின் பெரும்பான்மைத் தலைவரான குடியரசுக் கட்சியின் மிட்ச் மெக்கொனல் (Mitch McConnell) கூறுகையில், `பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள், அதற்கான அமைப்புகளும் நம்மிடம் இருக்கின்றன. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அதிபர் ட்ரம்ப் கருதினால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்க அவருக்கு சட்டப்படி உரிமை இருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.