கொரோனா தொற்று உலகை ஆட்கொள்ளத் தொடங்கி ஓராண்டு நெருங்குகிறது. இந்தச் சூழலில் இந்தியா தொடங்கி உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஏதிராக 150-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கும் பணி தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நிறுவனமான ஃபைசர் (Pfizer) மற்றும் ஜெர்மானிய நிறுவனமான BioNTech ஆகிய இரண்டு நிறுவனங்களும் தயாரித்துள்ள தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையில், அது 90 சதவிகிதத்துக்கும் மேல் செயல்திறனுடையது என்று தெரியவந்துள்ளது.

தடுப்பூசி உருவாக்கத்தின் இடைக்கால ஆய்வாக, தனிப்பட்ட ஒரு கண்காணிப்பு நிறுவனத்தால் அதன் திறன் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின்படி, அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த 44,000 பேரிடம் தடுப்பூசியின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட 44,000 பேரில் வெறும் 94 பேருக்கு மட்டுமே புதிய தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும், ஆராய்ச்சி நிறைவடையும் தருணத்தில் ஆரம்பகட்ட பாதுகாப்புத் திறனில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இது பற்றிப் பேசியுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இங்கிலாந்து அரசின் தடுப்பூசி திட்டக் குழுவின் உறுப்பினருமான சர் ஜான் பெல், “இந்த உலகம் விரைவில் இயல்புக்குத் திரும்பும் என்பதை அறிவிக்கும் முதல் நபராக நான் இருக்கிறேன். ஃபைசர் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசி குறித்த ஆய்வின் முடிவைத் தொடர்ந்து மிகவும் நம்பிக்கையுடன் இதைத் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

90% செயல்திறன்
தடுப்பூசியின் செயல்திறன் பற்றிப் பேசியுள்ள ஃபைசர் நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் போர்லா, “அறிவியலுக்கும் மானுடத்துக்கும் இந்த நாள் சிறந்த நாள். BNT162b2 கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது கட்ட மனித பரிசோதனை குறித்த ஆய்வு முடிவில் அதன் செயல்திறன் குறித்த நம்பத்தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளது.
உலக அளவில் தொற்றுப் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி, மருத்துவமனைகள் நிரம்பி வழியும் இந்தச் சூழலில், தடுப்பூசி கண்டுபிடிப்பில் முக்கியமான மைல்கல்லை எட்டியிருக்கிறோம்.
இந்தத் தடுப்பூசி, உலகத்தின் மருத்துவப் பிரச்னை முடிவுக்கு வர மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கூடுதல் தரவுகள் பரிசோதனையில் பங்கேற்றவர்களிடமிருந்து விரைவில் பெறப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வருமா என்பது போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
BNT162b2 தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனை ஜூலை 27-ம் தேதி தொடங்கியது. அதில் 43,538 பேர் பங்கேற்றனர். அவற்றில் 38,955 பேருக்கு நவம்பர் 8-ம் தேதி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கூடுதல் எண்ணிக்கையிலானோருக்குப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதற்கான பரிசோதனைக்குப் புதிய நபர்கள் உட்படுத்தப்படுகின்றனர். தடுப்பூசி போட்ட பிறகு, தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரிக்கும்போது அதன் செயல்திறன் குறித்த இறுதி ஆய்வு செய்யப்படவுள்ளது.

ஏற்கெனவே தொற்று பாதித்தவர்களுக்கு மறுபாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையிலும் இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருவதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசிக் கண்டுபிடிப்பின் முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசிகளும், 2021-ம் ஆண்டில் 130 கோடி வரை தடுப்பூசிகளும் அந்நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.