பீகாரில் கடந்த 2015 தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த இடதுசாரி கட்சிகள் இம்முறை குறிப்பிடத்தக்க எழுச்சியைப் பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தேஜஸ்வியின் ராஷ்டிரியா ஜனதா தளம், காங்கிரஸ் உடன் மகா கூட்டணியில் இடதுசாரி கட்சிகளான சி.பி.ஐ (எம்-எல்), இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தத் தேர்தலில், மகா கூட்டணி சார்பில் சி.பி.ஐ (எம்-எல்) 19 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 4 இடங்களிலும் என மொத்தம் 29 இடங்களில் போட்டியிட்டன. இவற்றில், கிட்டத்தட்ட 20 இடங்களைக் கைப்பற்றும் வகையில் முன்னிலை பெற்றுள்ளன.
கடந்த 2010-ல் மார்க்சிஸ்ட் ஓர் இடத்தை மட்டுமே பெற்றது. 2015 தேர்தலில் சி.பி.ஐ (எம்.எல்) 3 இடங்களைக் கைப்பற்றியதும், மற்ற இரு கட்சிகளும் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முந்தைய தேர்தல்களில் பெரிதாக சோபிக்காத காரணத்தால், இடதுசாரி கட்சிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே தொகுதிகள் ஒதுக்கப்பட்டதும் கவனத்துக்குரியது.
இதனிடையே, பிற்பகல் 3.20 நிலவரப்படி, நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி 128 இடங்களிலும், தேஜஸ்வியின் ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி 105 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM