கடந்த ஆண்டு முதல் உலக மக்களை தனது ஆக்டோபஸ் கரங்களால் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றால் இதுவரை உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுமார் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகெங்கும் நடைபெறும் கொரோனா பரிசோதனைகளில் சிக்கல்கள் இருப்பதால் மேற்சொன்ன மொத்த எண்ணிக்கை உண்மையான எண்ணிக்கையைவிடச் சற்று குறைவுதான் என்றும் சொல்லப்படுகிறது.

WHO Director-General, Dr Tedros Adhanom Ghebreyesus

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததாக அறியப்பட்டதால் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசிஸ் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக நேற்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் பல முன்னெடுப்புகளை, விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் இதன் தலைவரே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பது கொரோனாவுக்கு எந்தவொரு மனிதபேதமும் கிடையாது என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

தனக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லையென்றும் தான் நன்றாகவே இருப்பதாகவும் ட்விட்டரில் கூறியிருக்கும் 55 வயதான டெட்ராஸ், உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைகளுக்கு இணங்க வரும் நாள்களிலும் தனது தனிமையைத் தொடர இருப்பதாகவும் அலுவலக வேலையை ஜெனீவாவிலுள்ள தனது வீட்டிலிருந்தே கவனிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய உடல்நிலை குறித்த இந்தச் செய்தியை ட்வீட் செய்த டெட்ராஸ் தொடர்ந்து, ‘கோவிட்-19 குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொருவரும் அப்படியே பின்பற்றவேண்டும், அப்போதுதான் இதன் பரவலைக் குறைத்து சுகாதார அமைப்பின் மீதுள்ள பெருஞ்சுமையை நீக்க முடியும்’ என்று தனது மற்றொரு ட்வீட்டில் கூறியிருக்கிறார். தானும், தன்னுடன் பணிபுரிபவர்களும் கொரொனோ பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க தொடர்ந்து ஒற்றுமையுடன் பணிபுரிய இருப்பதாகவும் டெட்ராஸ் நம்பிக்கையுடன் ட்வீட் செய்திருக்கிறார். ஆனால் கொரோனா பாதித்த யாருடன் அவர் தொடர்பில் இருந்தார் என்கிற தகவலை அவர் வெளியிடவில்லை.

கொரோனா/ உலக சுகாதார அமைப்பு – WHO

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையிடமான ஜெனீவா ஸ்விட்சர்லாந்து நாட்டில் அமைந்துள்ளது. கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இதுவும் ஒன்று. குறிப்பாக ஜெனீவாவில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்திருப்பதால், மீண்டும் அங்கே அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தில் உள்ள சில்லறை வணிகக் கடைகள், தங்குமிடங்கள், மதுபானக் கடைகள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், நீச்சல் குளங்கள் போன்றவற்றை மூடவும் அந்நகர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்று இரவு ஏழு மணி முதல் ஜெனீவாவில் பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.