இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த பெண் ஒருவர், இந்து மதத்திற்கு மதம் மாறி திருமணம் செய்திருக்கிறார். அதன் பிறகு, சில அச்சுறுத்தல்களின் காரணமாக, அந்த காதல் தம்பதியினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு வேண்டி மனு ஒன்றினை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் மகேஷ் சந்திர திரிபாதி, திருமணத்திற்காகச் செய்யப்படும் மதமாற்றம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஏற்கெனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் சில வழக்குகளுக்கு தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த வழக்கில் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு பெண் மதம் மாறியதால், மதமாற்றம் செல்லாது என்றும் அதன் காரணமாக பாதுகாப்புக் கோரி தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்திருக்கிறார்.

Marriage

2014-ம் ஆண்டு நூர் ஜஹான் பேகம் என்கிற அஞ்சலி மிஷ்ரா வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம், அதேபோன்று திருமணத்துக்கு முன் மதம் மாறிய காதல் தம்பதி பாதுகாப்பு வேண்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்து, மதமாற்றம் செல்லாது என்றும், எனவே மனுவினை ஏற்க முடியாது என்றும் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், “ஒரு தனி மனிதர் இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டுமானால், அவர் மேஜராக (18 வயதை தாண்டியவராக) இருக்க வேண்டும்; மனநலம் உடையவராக இருக்க வேண்டும்; இஸ்லாம் மதத்தை அவருடைய தனிப்பட்ட விருப்பதின் பேரில், கடவுள் ஒருவன் என்பதன் மீது (அல்லாவின் மீது), முகம்மதுவின் தீர்க்கதரிசனத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மதமாற்றமானது, நம்பிக்கையின் காரணமாக இல்லாமல், மதம் மாற வேண்டும் என்பதற்காகவே, சட்டத்தின் கீழ் ஓர் உரிமையை அடைவதற்காகவோ, திருமணத்தை தவிர்ப்பதற்கான நோக்கத்திற்கான ஒரு சாதனமாகவோ, கடவுள் ஒருவன் (அல்லா) என்பதன் மீதும், முகம்மதுவின் தீர்க்கதரிசனத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல், வேறு எந்தக் காரணத்திற்காகவோ மதம் மாறுவது மதமாற்றமாகாது. மதமாற்றம் என்பது மனதில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவும், பழைய மதத்தின் கொள்கைகளுக்கு பதிலாக புதிய மதத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் நேர்மையான மாற்றமாகவும் இருக்க வேண்டும்” என்று தீர்ப்பில் கூறியிருந்தது.

Lae

லில்லி தாமஸ் வழக்கில், உச்சநீதிமன்றம், “ஒரு தனி மனிதர் இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டுமானால், அவர் மேஜராக (18 வயதை தாண்டியவராக) இருக்க வேண்டும்; மனநலம் உடையவராக இருக்க வேண்டும்; இஸ்லாம் மதத்தை அவருடைய தனிப்பட்ட விருப்பதின் பேரில், கடவுள் ஒருவன் என்பதன் மீது (அல்லாவின் மீது), முகம்மதுவின் தீர்க்கதரிசனத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று தீர்ப்பில் கூறியிருந்ததையும், நூர் ஜஹான் பேகம் வழக்கில் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இவற்றின் அடிப்படையில்தான் தற்போது அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இதற்கு முன்பு, பல்வேறு வழக்குகளில் இதே அலகாபாத் நீதிமன்றம், திருமணமான தம்பதி வெவ்வேறு மதமாக இருந்து, மதமாற்றத்தின் பின் திருமணம் செய்திருந்தாலும், விருப்பப்பட்ட நபரை தேர்ந்தெடுக்கும் உரிமையின் அடிப்படையில், உத்திரப்பிரதேச இந்து திருமணச்சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பினை வழங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்பு குறித்து, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் `ஜாக்டோ ஜியோ’ அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜே. கணேசன் அவர்களிடம் பேசினோம்.

Marriage

“மதமாற்றம் என்பது இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை. அதை ஒருவர் திருமணத்துக்கு முன்பு செய்கிறார் அல்லது திருமணத்துக்கு பின் செய்கிறார் என்பதெல்லாம் வேறு விஷயம். திருமணம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகமாக இந்துத்துவ கருத்துகளைக் கொண்டிருப்பதால் இந்த மத மாற்றத்தை அவர்கள் ஆதரிப்பதில்லை. இந்த வழக்கின் தீர்ப்பானது தனி மனித உரிமையில் தலையிடுவதாக இருக்கிறது. மேலும், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதற்காக பாதுகாப்புக்காக நீதிமன்றத்தை நாடுபவர்களிடம், அவர்களது மதமாற்றத்தை கேள்வி கேட்டு உள்நோக்கம் கற்பிக்க முயல்வது தவறானது” என்றார்.

பெற்றோரின் அச்சுறுத்தல்களைத் தாண்டி திருமணம் செய்து நீதிமன்ற பாதுகாப்பினைக் கோருகிறார்கள் காதல் தம்பதிகள். அப்போது, சட்டத்தின் நுணுக்கங்களைக் காரணம் காட்டி அவர்களது பாதுகாப்பு மனுக்களை நிராகரிப்பது, நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும்போது மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய கொள்கைகளான சமத்துவம், நீதி மற்றும் நல்ல மனசாட்சியின் கீழ் வருமா என்பது கேள்விக்குறி. மேலும், அவர்கள் திருமணத்துக்காக மட்டும்தான் மதம் மாறினார்கள் என்பது மதமாற்றத்துக்கும், திருமணத்துக்கும் இடைப்பட்ட காலத்தை வைத்துத்தான் முடிவு செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இதுபோன்ற தீர்ப்புகளைத் தொடரும் கேள்விகளுக்கு, உச்சநீதிமன்றம்தான் இதையொத்த ஒரு வழக்கில் இனிவரும் ஒரு தீர்ப்பில் பதிலளிக்க வேண்டும்.

இதற்கிடையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தன் இடைத்தேர்தல் பிரசாரத்தில், அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பினை குறிப்பிட்டு, தங்கள் அரசு `லவ் ஜிகாத்’துக்கு எதிரான சட்டம் கொண்டுவரும் என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார். “அலகாபாத் உயர் நீதிமன்றம், திருமணத்துக்காக மதம் மாற தேவையில்லை என்று கூறியுள்ளது. `மிஷன் சக்தி’ மூலம் நாங்கள் தாய்மார்களையும் சகோதரிகளையும் பாதுகாப்போம். பெண்களின் கண்ணியம் காக்க, `ஆபரேஷன் சத்யா’ கொண்டுவரப்படும். பெண்களின் கண்ணியத்துக்கு இழுக்கு விளைவிப்பவர்களை நான் எச்சரிக்கிறேன்” என்றிருக்கிறார் யோகி ஆதித்யநாத்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.