எப்போதும் காலத்துக்கேற்ப தன்னை மாற்றத்துக்குட்படுத்திக்கொள்ளும் விகடன், தற்போது யூ டியூப்பில் ஒரு வித்தியாசமான முயற்சியுடன் களம் இறங்கியிருக்கிறது. `விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் `மோஷன் கன்டென்ட் குரூப்’ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து, யூ டியூபில் மட்டுமே பிரத்யேகமாக ஒளிபரப்புவதற்காக `வல்லமை தாராயோ’ என்ற பெயரில் தினசரி டிஜிட்டல் தொடரைத் தயாரித்திருக்கின்றன.

மருத்துவமனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெற்றித்தொடரான `எமர்ஜென்சி’யை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன்தான் இந்த டெய்லி சீரிஸின் இயக்குநர். `கோலங்கள்’ புகழ் வி.திருச்செல்வம் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். அக்டோபர் 26-ம் தேதி விஜயதசமியிலிருந்து, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு `Vikatan TV’ யூடியூப் சேனலில் `வல்லமை தாராயோ’ ஒளிபரப்பாக உள்ள நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் மோஷன் போஸ்டருக்கும் டீஸருக்கும் லைக்ஸ் குவிந்துகொண்டிருக்கின்றன.

இயக்குநர் திருச்செல்வம்

`அந்தப் பொண்ணோட கண்ணே ஆயிரம் கதை சொல்லும்’, `டீஸரைப் பார்க்கும்போது சினிமா ஃபீல் தருகிறது’ என்றெல்லாம் யூ டியூப் வாசிகள் கமென்ட்டுகளைப் பதிவிட்டு, புதிய அனுபவத்துக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், `வல்லமை தாராயோ’வுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ள `கோலங்கள்’ புகழ் திருச்செல்வத்திடம் பேசினோம்…

“வல்லமை தாராயோ’தான் இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ்… இந்த ஐடியா உருவான கதையை முதலில் சொல்லுங்களேன்?”

“அது விகடன் குழுமத்தின் எம்.டி சீனிவாசன் சாரோட ஐடியாதான். கோலங்கள்ல இருந்து விகடனோடு டிராவல் பண்றேன். நல்ல கதைகளைச் சொல்வதில் எப்போதுமே சீனிவாசன் சார் ரொம்பவே ஆர்வமாக இருப்பாங்க. முதலில் இந்தக் கதையை 8 எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸாகத்தான் நான் எழுதியிருந்தேன். அதை ஒரு சந்தர்ப்பத்தில் சீனிவாசன் சாரிடம் சொன்னேன். கதையைக் கேட்டதும், `இந்தக் கதையில் 80 எபிசோடுகள் பண்ற அளவுக்கு டெப்த் இருக்கு. இதை எக்ஸ்டெர்ன்ட் பண்ணுங்க’ என்றதுடன், யூடியூபில் சீரிஸ் வெளியிடும் ஐடியாவையும் சொன்னார். அந்த ஐடியா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனால், இதை 80 எபிசோடுகள் செய்ய முடியுமானு முதல்ல நான் தயங்கினேன். `அதெல்லாம் நிச்சயம் முடியும்’னு சீனிவாசன் சார் தைரியம் தந்தார். உட்கார்ந்து எழுதிப் பார்த்தபோதுதான் சீனிவாசன் சார் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசினு தெரிஞ்சது. 80 எபிசோடுகளும் இயல்பாக எழுத முடிந்தது. கதை மிகவும் இயல்பாக வந்திருக்கு.”

“வல்லமை தாராயோ… என்ன மாதிரியான கதைக்களம்?”

“இது ஹீரோயினை மையப்படுத்தின கதைதான். ஆனால், ஹீரோயின் துயரங்களை மட்டும் சொல்லும் கதை கிடையாது. விதவிதமான மனிதர்கள் இதில் வருவார்கள். தன் விருப்பப்படி வாழ்க்கையை வாழ முடியாமல், குடும்பத்தினர் சொல்படி மட்டுமே வாழ நிர்ப்பந்திக்கப்படும் பெண் அபிராமி. அவளுக்குள் `தன் விருப்பப்படி வாழ வேண்டும்’ என்ற தீராத தாகம் இருக்கு. இப்படியான சூழலில் 11 வயசிலிருந்து 31 வயசு வரை அபிராமி சந்திக்கும் போராட்டங்கள்தான் இந்தத் தொடரின் கதைக் களம்.

சின்ன வயசுலேருந்து பொதுப்புத்தியில்தான் நாம் வளர்கிறோம். அப்பா, அம்மா சொன்னா சரியாக இருக்கும் என்று வளரும் நாம் ஒருபோதும் அவர்களின் நம்பகத்தன்மையை பரிசோதனை பண்ணவே மாட்டோம். பெற்றோர்கள் காட்டுகிற உலகம்தான் நமக்குப் பெரிசுனு ஆணும் பெண்ணும் வளர்க்கிறாங்க. ஆண் பிள்ளைகள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் வாழ அனுமதிக்கப்படுறாங்க. ஆனால், பெண்களுக்கு அப்படி இல்லை. சமூக அமைப்பின் காரணமாக திருமண பந்தம் ஏற்பட்டு சில இடர்பாடுகளைச் சந்திக்கும் சூழல் இன்றும் இருக்கு. அப்படியான இடர்ப்பாடுதான் அபிராமிக்கும்.

வல்லமை தாராயோ

கிராமத்தில் வளர்ந்து கல்லூரியில் படிக்கப்போகும்போது, நாம் தனியாக இயங்கணும் என்ற ஆசை எல்லா பெண்களுக்குமே இருக்கும். ஆனால், அதை வீடுகளில் சொல்லும்போது… `நீ எவ்வளவு வேண்டுமானாலும் படி, எங்கு வேணாலும் வேலைக்குப் போ… என்ன வேணாலும் செய். ஆனால், அதைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு செய்’னு வலுக்கட்டாயமாகத் திருமண பந்தந்துக்குள் தள்ளிடுவாங்க. அப்படித்தான் அபிராமியும் தள்ளப்படுகிறாள். கணவன் குடும்பத்தை மதிக்கக்கூடிய, மிகவும் நல்லவனாக இருந்தாலும்கூட திருமண வாழ்க்கை, உணர்வுப் பரிமாறல்களும் உரையாடல்களும் இல்லாத வாழ்க்கையாக இருக்கு. இப்படியான சூழலில் சென்னை வரும் அபிராமிக்கு, தனித்துச் செயல்படும் பெண்கள், கணவன் இல்லாமல் பாய் ஃபிரெண்டோடு இருக்கிற பெண்கள்னு பல விதமான கேரக்டர்கள் அறிமுகமாகறாங்க. இவளுக்கு ஓர் இளைஞரின் நட்பு கிடைக்குது. அது ஈர்ப்பா மாற அவள் தடுமாற ஆரம்பிக்கிறாள். இந்த முக்கோண சிக்கலுக்குள் அவள் எப்படிப் பயணிக்கிறாள்… என்ன முடிவெடுக்கிறாள் என்பதை இயல்பாகச் சொல்லியிருக்கிறோம்.”

“டி.வி சீரியல்களுக்கும்… தினசரி யூடியூபில் மட்டுமே வெளியாகப்போகும் இந்த சீரிஸுக்கும் என்ன வித்தியாசம்… இது யாருக்கான கதை?”

வல்லமை தாரோயோ

“இது எல்லோரும் குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிற கதைதான். யூடியூபில் கட்டற்ற சுதந்திரம் இருக்கு என்பதற்காக நாங்கள் கொஞ்சம்கூட `அடல்ட்’ விஷயங்களை டச் பண்ணலை. கிராமத்தில் நான் சந்திச்ச மனிதர்களிடமிருந்து உள்வாங்கிய கதைதான் என்பதால், அதை ரொம்ப நேர்மையாகச் சொல்லியிருக்கிறோம். இதேபோல் நிறைய பேர் வாழ்க்கையில் நடந்திருக்கும். அதை எதிர்கொள்ள முடியாமல் போராடியிருப்பாங்க. எனவே நிறைய பேர், இதை அவங்க கதையோடு பொருத்திப் பார்த்து ஃபீல் பண்ணுவாங்க. டிவி சீரியல்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்னா, டிவி சீரியலில் உள்ள நாடகத்தன்மை இதில் இருக்காது. அழுகை… ஆர்ப்பாட்டம்… சண்டை சச்சரவுனு எந்தப் பரபரப்பும் இருக்காது. எல்லோரும் வலிகளைச் சுமந்துகிட்டு சிரிச்சுகிட்டே டிராவல் ஆவாங்க. இயல்பான காட்சி அமைப்பில் மென்மையா கதையைச் சொல்லியிருக்கோம். ஒவ்வோர் எபிசோடும் 15 நிமிடம்தான். அதனால, ஆடியன்ஸுக்கு போர் அடிக்காது. இது வெற்றியடைந்தால் டிவி சீரியலுக்கு மாற்றாகப் பலர் இந்தக் களத்துக்கு வருவாங்க. பல லட்சம் சப்ஸ்க்ரைபர்களை வைத்திருக்கும் விகடன் பேனரில் இதை வெளியிடும்போது `வெற்றியடைந்தால்?’ என்று சொல்வதற்கே வேலையில்லை. வல்லமை தாராயோ நிச்சயம் வெற்றியடைந்து மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.”

வரும் 26-ம் தேதி, திங்கள்கிழமை, இரவு 7 மணி… வல்லமை தாராயோவை மிஸ் செய்யாமல் பார்க்க விகடன் டிவிக்கு வாங்க!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.