சென்னையில் செல்போன்கள் வழிப்பறி செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகிவருகின்றன. செல்போனில் பேசியபடி நடந்து செல்பவர்களிடம், டூ விலர்களில் வருபவர்கள் செல்போன்களைப் பறித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவதுண்டு. செல்போன்களைப் பறிகொடுத்தவர்கள் காவல் நிலையங்களில் புகார் கொடுத்துவிட்டு, என்றாவது ஒருநாள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள். செல்போன்களைப் பறிக்கும் சம்பவங்களில் சிறுவர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

திருட்டு செல்போன் வழக்கில் கைதானவர்கள்

சில நேரங்களில் செல்போனை வழிப்பறி செய்யும்போது தாக்குதலும் நடைபெறும். வழிப்பறி செய்யப்படும் செல்போன்கள் குறித்து புகார்கள் வந்ததும், சைபர் க்ரைம் போலீஸார், ஐ.எம்.இ.ஐ நம்பர்கள் மூலம் அதைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள். தற்போது ஐ.எம்.இ.ஐ நம்பர்களையும் மாற்றி அவற்றை விற்கத் தொடங்கியிருக்கிறது ஒரு நெட்வொர்க். அந்தக் கும்பலைக் கூண்டோடு கைதுசெய்திருக்கிறது இணை கமிஷனர் பாலகிருஷ்ணனின் தலைமையிலான எஸ்.ஐ விஜய், தலைமைக் காவலர் முருகேஷ்வரன், காவலர் விமல் ஆகியோர் அடங்கிய ஸ்பெஷல் டீம்.

Also Read: தேனி: `அழிக்கப்பட்ட படம்; சிக்க வைத்த செல்போன்!’ – கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி

ஸ்பெஷல் டீம் போலீஸாருக்கு இந்த நெட்வொர்க் குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின்படி ஸ்பெஷல் டீம் போலீஸார் கடந்த ஒரு வாரமாக சென்னை பர்மாபஜாரில் முகாமிட்டனர். அப்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போன்களை வழிப்பறி செய்யும் கும்பல், குறிப்பிட்ட ஓரிடத்தில் அதிகாலை நேரத்தில் சந்தித்தனர். அதை ஸ்பெஷல் டீம் போலீஸார் ரகசியமாகக் கண்காணித்தனர்.

பணம்

அப்போது வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்களை 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை விற்றுவிட்டு ஒரு கும்பல் அங்கிருந்து புறப்பட்டது. அதை வாங்கிய இன்னொரு டீம், அடுத்த சில மணி நேரத்தில் பர்மா பஜாரிலுள்ள குறிப்பிட்ட சில கடைகளில் அந்த செல்போன்களை 3,000 ரூபாய் வரை விற்றுவிட்டு வீடு திரும்பியது. சில மணி நேரத்தில் செல்போன்களை வழிப்பறி செய்தவர்களும் அதை வாங்கி விற்கும் புரோக்கர்களும் ஆயிரக்கணக்கில் சம்பாதித்துவிட்டுச் சென்றதை ஸ்பெஷல் டீம் போலீஸார் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

Also Read: சென்னை: ரூ.2 கோடி தங்கம், வைரம், வெள்ளி திருட்டு – தி.நகரைக் குறிவைக்கும் கொள்ளையர்கள்

இதையடுத்து ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க ஸ்பெஷல் டீம் போலீஸார் வியூகம் அமைத்தனர். செல்போன்களை வழிப்பறி செய்யும் கும்பலிடமிருந்து வாங்கும் புரோக்கர்களை ஸ்பெஷல் டீம் போலீஸார் முதலில் பிடித்தனர். அதன் பிறகு செல்போன்களை வழிப்பறி செய்யும் கும்பலைக் கைதுசெய்தனர். அடுத்து புரோக்கர்கள், பர்மா பஜாரில் எந்தக் கடையில் செல்போன்களை விற்றார்களோ அந்தக் கடையின் உரிமையாளர்களைப் பிடித்து அவர்களிடமிருந்து 50 செல்போன்கள பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் விசாரித்தபோது வழிப்பறி செய்யப்படும் செல்போன்கள் எப்படியெல்லாம் சேல்ஸ் செய்யப்படுகிறது என்ற முழு விவரமும் தெரியவந்தது.

செல்போன் திருட்டு

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம், “செல்போன் வழிப்பறியில் ஈடுபடுபவர்களை மட்டும் கைதுசெய்து, செல்போன்களைப் பறிமுதல் செய்துவந்த நிலையில், ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க முடிவு செய்துதான் இந்த ஆபரேஷனில் களமிறங்கினோம். இதற்காக ஸ்பெஷல் டீமில் உள்ள போலீஸார், கடந்த ஒரு வாரமாக இந்தக் கும்பலைப் பின்தொடர்ந்து எம்.கே.பி நகரைச் சேர்ந்த பாலமுருகன், வியாசர்பாடியைச் சேர்ந்த சுரேஷ், சந்துரு, மண்ணடியைச் சேர்ந்த அந்தோணிசாமி, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மருது, பெரியதோப்பைச் சேர்ந்த புகழேந்தி, ராயபுரத்தைச் சேர்ந்த பர்வீன், கோயம்பேட்டைச் சேர்ந்த பரத், திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ்பிரபு ஆகிய ஒன்பது பேரைக் கைது செய்திருக்கிறார்கள்.

இவர்களிடமிருந்து 50 செல்போன்கள், 60,000 ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். திருட்டு செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர்களை மாற்றிவிட்டு புதிய செல்போன்களைப்போல இவர்கள் விற்று வந்திருக்கிறார்கள். 3,000 ரூபாய்க்கு வாங்கும் செல்போனை குறைந்தபட்சம் 10,000 ரூபாய்க்கு விற்று அதிக அளவில் லாபம் பார்த்திருக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்னையில் திருடப்படும் செல்போன்கள் விற்பனை செய்யப்பட்டுவந்தன. இந்த நெட்வொர்க் குறித்த முழு விவரங்களையும் சேகரித்துவருகிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.