நவராத்திரி நாயகியாம் லலிதா பரமேஸ்வரிக்கு ஆயிரம் நாமங்கள். அதில் ஒவ்வொரு நாமமும் ஒரு தனித்துவம் வாய்ந்தது. அம்பிகையின் அற்புதங்களை எடுத்துரைப்பது. அப்படி ஒரு நாமம்தான் சாம்பவி என்பது. நவராத்திரியின் ஏழாம் நாளில் நாம் சாம்பவி என்னும் திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதிக்க வேண்டும்.

சிவபெருமான் சாம்பு என்ற திருநாமத்தால் துதிக்கப்படுபவர். சாம்புவின் மனைவி சாம்பவி ஆகிறாள். மேலும் சாம்பவி என்னும் திருநாமத்துக்கு, உதவிகரமானவள், அன்பானவள், கருணையுள்ளம் கொண்டவள் என்னும் பொருள்களைக் கூறுகின்றன சாஸ்திரங்கள். லலிதா சகஸ்ரநாமத்தில் 122 ம் நாமமாக விளங்குவது சாம்பவி. விஷ்ணுசகஸ்ரநாமத்தில் 38வது நாமமாக விளங்குவதும் இந்தத் திருநாமமே. இவை இரண்டுமே பக்தர்கள் மீது எல்லையில்லாக் கருணையுள்ளவள் என்னும் பொருளிலேயே வழங்கப்படுகின்றன.

சரஸ்வதி தேவி

சண்ட முண்டர்களை வதைத்த பின் தேவி பொன் பீடத்தில் அமர்ந்து, வீணை வாசிக்கும் கோலமே சாம்பவியின் திருக்கோலம். கைகளில் வீணை ஏந்திக் காட்சி அருளினாலும் அன்னையின் வீரமான தோற்றம் மனதில் இருக்கும் பயங்களைப் போக்கவல்லது. இந்த நாளில் அன்னை வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் நீங்குவதோடு வாழ்க்கையில் இருக்கும் சங்கடங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.

7ம் நாள் படிக்க வேண்டிய கதை

முற்காலத்தில் ஆங்கீரஸ முனிவர் ஒருநாள் வனத்தின் வழியே செல்லும்போது ஒரு பெண் அழும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டார். சத்தம் கேட்ட திசை நோக்கிச் சென்றார். அங்கே ஒரு குடிசையில் ஒரு பெண் தன் கணவரை மடியில் கிடத்தி, கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட முனிவர் வெளியிலிருந்தபடியே குரல் கொடுத்தார். முனிவரின் குரல் கேட்டு வாசலுக்கு வந்தாள்.

அந்தப் பெண்ணின் முகத் தோற்றத்திலிருந்து அவள் அரச வம்சத்தைச் சேர்ந்தவள் என்று புரிந்துகொண்டார் முனிவர். “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார் முனிவர். அதற்கு அந்தப் பெண்ணும், தான் அண்டை நாட்டின் அரசி என்றும், சதிகாரர்கள் என் கணவரை ஏமாற்றி ராஜ்ஜியத்தைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டதாகவும், தன் கணவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தாள். தன் கணவர் நலமடைய வேண்டும் என்று முனிவரைப் பிரார்த்தித்தாள். மேலும் தாங்கள் இழந்த ராஜ்ஜியம் திரும்பக் கிடைக்கவேண்டும் என்றும், தங்களுக்கு ஓர் ஆண்குழந்தை வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாள்.

அவளுடைய நிலைக்கு மனம் வருந்திய முனிவர், ஒன்பது தினங்கள் அம்பிகைக்கு பூஜை செய்யும் நவராத்திரி வைபவத்தின் மகிமையை எடுத்துச் சொல்லி அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் வழியையும் கூறினார். முனிவரின் ஆசிரமத்தில் தங்கி பூஜையை நிறைவேற்றினாள் அந்தப் பெண். அம்பிகை அந்தப் பெண்ணின் பூஜைக்கு மகிழ்ந்து அவள் வேண்டியபடி அவள் கணவனுக்கு ஆரோக்கியத்தையும் புத்திர பாக்கியத்தையும் அருளினாள்.

அவர்களின் மகன் வளர்ந்து பெரியவனாகி போர்க்கலையில் சிறந்து விளங்கினான். உரிய காலத்தில் முனிவர் அவனுக்குக் கடந்த காலத்தில் நிகழ்ந்ததை விளக்கிச் சொல்ல அவன் போர்தொடுத்துத் தன் தந்தை இழந்த நாட்டை வென்றான். அவன் பெற்றோரும் முனிவரும் வென்ற நகரின் தலைநகருக்குச் சென்று அவனுக்குப் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். அந்தப் பெண் தான் விடாது செய்துவந்த நவராத்திரி பூஜையின் பலனே இது என்பதை உணர்ந்து அதை நாட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க உத்தரவிட்டாள். இழந்த பொருள், உரிமை, பலம் ஆகியவற்றை வேண்டிப் பெற உரிய விரதம் நவராத்திரி விரதம் என்பதை நாட்டு மக்களும் அறிந்துகொண்டனர்.

விசேஷ வழிபாடு:

இன்றைய தினம் எட்டு வயது பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு அழைத்து, அவர்களை சாம்பவியாக பாவித்து பூஜித்து, எலுமிச்சை சாதமும், ஏதேனும் ஒரு நவதானியத்தில் செய்த சுண்டலையும் அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்கலாம். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நிலைத்த புகழும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நமபிக்கை.

7-ம் நாளுக்கான வழிபாட்டு நியதிகள்

கோலம்: ஏழாம் நாளுக்கான கோலம் திட்டாணிக்கோலம். இந்தக் கோலத்தை மலர்கள் கொண்டு போட வேண்டும்.

பூக்கள்: இந்தத் தினத்தில் அன்னைக்கு வெள்ளை நிற மலர்கள் கொண்டு அர்ச்சிப்பது விசேஷம். எனவே முல்லை, மல்லிகை போன்ற மலர்களைப் பயன்படுத்த வேண்டும்.

நிவேதனம்: வெண்பொங்கல்.

செய்முறை: அரிசி, பயத்தம் பருப்பை ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கினால் வெண்பொங்கல் தயாராகிவிடும்.

Also Read: வீட்டில் அன்னம் செழிக்க வைக்கும் நவராத்திரி தரிசனம் 6-ம் நாள் வழிபாடு… சிறப்புகள் என்னென்ன?

வழிபாட்டு துதிப்பாடல்:

கலைமகளே அருள்வாய்

கற்பனைத் தேன் இதழாள்- சுவைக்

காவியம் எனும் மணிக் கொங்கையினாள்

சிற்பம் முதற் கலைகள்- பல

தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்

சொற்படு நயம் அறிவாள்- இசை

தோய்ந்திடத் தொகுப்பதன் சுவை அறிவார்

விற்பனத் தமிழ்ப் புலவோர்- அந்த

மேலவர் நாவெனும் மலர்ப் பதத்தாள்

– மகாகவி பாரதியார்

இந்த நவராத்திரி நன்னாளில் தேவி பராசக்தியை சாம்பவியாக வழிபட்டுச் சரணடைந்து நம் சங்கடங்கள் தீர்ந்து வாழ்வோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.