‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்பது பழமொழி. ‘பிக்பாஸ் கலகம் TRP-ல் முடியும்’ என்பது புதுமொழி. அந்த நோக்கில் பிக்பாஸ் வீட்டில் இன்று சில சுவாரஸ்யமான டிராமாக்கள் நடந்தன. என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.

‘எத்தனை சந்தோஷம்… தினமும் கொட்டுது உன் மேல’ என்கிற அட்டகாசமான பாடலைப் போட்டார் பிக்பாஸ். ஆனால் அந்தப் பாடலின் வரிகளுக்கு மாறான விஷயங்கள்தான் வீட்டில் இன்று நிகழ்ந்தன.

ஒரு சிறிய மனஸ்தாபம் எப்படி விரிசலாக வளர்ந்து வம்பாகவும் சண்டையாகவும் உருமாறுகிறது என்பதற்கான உதாரணச் சம்பவம் காலையிலேயே நடந்தது.

பிக்பாஸ் – நாள் 15

பிக்பாஸ் நிகழ்ச்சியை வெறுமனே வம்பை வேடிக்கை பார்க்கும் மனோபாவமாக மாற்றிக் கொள்ளாமல், நம் வீடுகளில் ஒரு சண்டை எப்படி உருவாகிறது என்பதற்கான கற்றலாகவும் அமைத்துக் கொண்டால் நம் வீட்டில் நிகழவிருக்கும் பல பிரச்னைகளை முன்கூட்டியே தடுத்துக் கொள்வதற்கான வாயப்புகள் இதில் இருக்கின்றன. பிரச்னையின் துவக்கத்திலேயே இந்தக் காட்சிகளை நம் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்துக் கொண்டால் நாமும் இது போன்ற விபத்தில் விழாமல் இருக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.

ஓகே… காலையில் ஆரம்பித்த பஞ்சாயத்து இது. சுரேஷிற்கு முதுகு வலியுள்ளது. குனிவதில் சிரமம். எனவே அவர் தன் துணிகளை வாஷ் பேஷினில் நின்றவாக்கில் அலசிக் கொள்ள முனைகிறார். “அண்ணா… அது எச்சி துப்புற இடம். அதுல போய் துணியை அலசறீங்களே… நான் வேணா பக்கெட்ல அலசித் தர்றேன்” என்று சனம் இடைமறிக்கிறார்.

“அப்படியா… சரிம்மா… விடு” என்றபடி துணிகளை அலசாமலேயே எடுத்துச் செல்கிறார் சுரேஷ். இது வயதானவர்களுக்கேயுரிய வீம்பு. மற்றவர்களைப் புண்படுத்துவற்காக தன்னையே வருத்திக் கொள்வார்கள். அது மட்டுமல்லாமல் பாலாவிற்கும் சனத்திற்கும் ஆகாது என்பதால் சுரேஷூம் சனத்தை தன் எதிரியாக வரித்துக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது.

பிக்பாஸ் வீட்டில் இப்போது மூன்றிற்கும் மேலான அணிகள் தன்னிச்சையாக உருவாகியிருப்பதைக் கவனிக்க முடியும். மனிதக் கூட்டத்தில் இவ்வாறு நிகழ்வதை தடுக்கவே முடியாது. இதுதான் இயற்கை. ‘குரூப்பிஸம் இல்லை’ என்று ரியோ தொடர்ந்து மல்லுக்கட்ட முனைவது அறியாமை அல்லது பாவனை.

‘துணி அலசல்’ விஷயத்தைப் பற்றி சம்யுக்தாவிடமும் ஆஜித்திடமும் பின்னர் புலம்பிய சுரேஷ், பாலா வருகிற போது அவரிடமும் லேசாக அனத்துகிறார். சுரேஷிற்கு நன்றாகவே தெரியும். ‘அதிகம் மெனக்கடாமல் சும்மா கொளுத்தினாலே பாலா என்கிற பட்டாசு நன்றாக வெடித்து எரியும்’ என்பது.

பிக்பாஸ் – நாள் 15

சுரேஷ் எதிர்பார்த்தபடியே பாலா பொங்கி எழுந்து “வயசானவங்கன்னு ஒரு கரிசனம் வேண்டாமா? என்னங்க நடக்குது இங்க?” என்று கேப்டனான ரியோவிடம் சென்று வாஷ்பேஷினில் துணி அலச அனுமதி வாங்கிக் கொண்டு வருகிறார். அதற்குள் சுரேஷிற்கு உதவி செய்ய ஆரி முன்வருவதால் ஒருமாதிரியாக பிரச்னை அடங்குகிறது.

துணியைக் காயப் போட வெளியே வந்த சுரேஷை அணுகும் சனம், “உங்களுக்கு உதவத்தான் அப்படிச் சொன்னேன். ஆரியோட ஹெல்ப்பை ஏத்துக்கற நீங்க. என் உதவியை ஏன் ஏத்துக்க மாட்டேங்கறீங்க… இப்ப ஓகேதானே. நாம ஃப்ரெண்ட்ஸ்தானே?” என்கிற சமாதானக் கொடியை பறக்க விடுகிறார்.

இந்தப் பிரச்னையின் இன்னொரு திரி இன்னொரு இடத்தில் எரியத் துவங்குகிறது. நடந்த விஷயத்தை பிறகு ரியோவிடம் விளக்கும் சனம், “நேத்திக்கு பாத்ரூம் கழுவும் போது மட்டும் குனிஞ்சு வேலை செய்ய முடியற சுரேஷிற்கு… துணி துவைக்கும் போது மட்டும் குனிய முடியலையா?” என்று கேட்டுவிட அங்கிருந்த கேப்ரியல்லா இதை ஆட்சேபிக்கிறார். “பாத்ரூம் கழுவறது பொதுவேலை. துணி துவைக்கறது அவரோட தனிப்பட்ட வேலை… நீங்க ஏன் அவர் தனிப்பட்ட விஷயங்கள்ல மூக்கை நுழைக்கறீங்க?” என்று கேட்கிறார்.

தூக்கிச் சுமந்த டாஸ்க்கிற்குப் பிறகு சுரேஷூம் கேப்ரியல்லாவும் ‘பாசப் பறவைகளாக’ ஆகி விட்டதால் அவருக்கு இந்தக் கரிசனம் இயல்பாக வந்து விட்டது.

பிக்பாஸ் – நாள் 15

கேப்ரியல்லா இந்த விஷயத்தை அப்படியே விட்டு விடாமல் சுரேஷிடமும் சென்று சொல்ல, அது வரை ‘சண்டைக்கு போக விருப்பமில்லை’ என்கிற பாவனையில் இருந்த சுரேஷிற்கு இப்போதுதான் உண்மையிலேயே அதிக கோபம் வருகிறது. “என் பர்சனல் விஷயத்துல தலையிட்ட… அவ்வளவுதான்… வகுந்துடுவேன்” என்று சனத்திடம் மிகையான கோபத்தை வெளிப்படுத்துகிறார். வெளியில் சமாதானக் கொடியைப் பறக்க விட்டு பிறகு ரியோவிடம் சென்று ஏன் வேறு மாதிரியாக ‘புறணி’ பேச வேண்டும்… என்பது சுரேஷிற்கான கோபம்.

“சுரேஷ்… என்னை மிரட்டறாரு… என்னன்னு கேளுங்க” என்று சனம் பஞ்சாயத்தைக் கூட்ட கேப்டனின் முன்னிலையில் விசாரணை நடக்கிறது. “பொது வேலைகளைச் செய்ய சுரேஷ் எப்போதும் தயங்கியதில்லை. அவரோட பர்சனல் விஷயத்துல நீங்க தலையிட வேணாம்” என்று சனத்திடம் தீர்ப்பு சொல்கிறார் ரியோ. கேப்ரியல்லா சுரேஷிடம் போட்டுக் கொடுத்ததால் இந்தப் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது என்பது சனத்தின் கோபம்.

இப்போது நன்றாக கவனியுங்கள்.

ஒரு பிரச்னைக்குத் தொடர்பான அனைத்து நபர்களையும் உரையாடல்களையும் தரப்புகளையும் காணும் வாய்ப்பு பிக்பாஸின் மூலமாக நமக்குக் கிடைக்கிறது. (அதுவும் எடிட்டிங்கின் வழியாகத்தான்). இதன் மூலம் அந்தப் பிரச்னையை ஆராய்வதற்கான கோணங்களும் ஓரளவிற்கு நமக்கு கிடைக்கின்றன.

ஆனால் நம் வீடுகளில் நிகழும் பிரச்னைகளில் இவ்வாறான காட்சிகள் நமக்கு கிடைக்காது. ‘எதிராளி இதைத்தான் சொல்லியிருப்பார்’ என்று நாமாக முன்தீர்மானத்துடன் எண்ணிக் கொண்டு சண்டையையும் வீம்பையும் தொடர்ந்து கொண்டிருப்போம். எனில் நாமாக இந்தக் காட்சிகளை உருவகித்துக் கொண்டு சமாதானம் அடைவதுதான் இதிலுள்ள படிப்பினை.

பிக்பாஸ் – நாள் 15

ஒரு நல்ல எண்ணத்தினாலோ அல்லது அது போன்ற பாவனையினாலோ சனம் உதவ முன்வர அதை வீண் பிடிவாதத்துடன் சுரேஷ் முதலில் மறுத்ததுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என்று நினைக்கிறேன். அவர் ஒப்புக் கொண்டிருந்தால் பிரச்னை பெரிதாக ஆகியிருக்காது.

அடுத்ததாக நாமினேஷன் பஞ்சாயத்து ஆரம்பித்தது. ரியோ, அர்ச்சனா, சனம், வேல்முருகன் ஆகியோரை நாமினேட் செய்ய முடியாது.

இந்தச் சடங்கின் போது, அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் ‘ஆரி’யை நாமினேட் செய்தார்கள். தன்னை ஒரு பீடத்தில் அமர்த்திக் கொண்டு அவர் தொடர்ந்து உபதேசம் செய்வது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை. ‘தான் செய்யும் உபதேசத்தை அவரே பின்பற்றுவதில்லை’ என்பது கூடுதல் காரணம். “கேக்கற இடத்துல மட்டும் அட்வைஸ் பண்ணுங்க” என்று ஆரிக்கு கமல் சொன்னதற்கும் இதுதான் காரணம்.

(ஆனால், நாம் கேட்காமலேயே ‘யோசிச்சு ஓட்டு போடுங்க’ என்கிற அரசியல் அறிவுரையை கமல் பிடிவாதமாக தொடர்ந்து நமக்குச் சொல்வாராம்…)

அடுத்து, ஆரிக்கு நிகராக ஒன்பது நாமினேஷன்களைப் பெற்றவர் சுரேஷ். ‘கொளுத்திப் போடுவதைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே’ என்று சுரேஷ் வெளிப்படைத்தனத்துடன் இருந்தாலும் அவரது செயல்களும் கோபமும் மற்றவர்களுக்கு ஆட்சேபணையைத் தருகின்றன. மேலும் அவர் நமட்டுச் சிரிப்புடனும், புத்திசாலித்தனத்துடன் இந்த ஆட்டத்தை ஆடுவது மற்றவர்களுக்கு எரிச்சலைத் தந்திருக்கலாம்.

நாமினேஷன் வரிசையில் அடுத்த இடத்தைப் பெற்றவர் ஆஜித். அவரிடமுள்ள எவிக்ஷன் ப்ரீ பாஸ் மற்றவர்களின் கண்களை உறுத்திக் கொண்டேயிருக்கிறது. ‘பாவம்… சின்னப்பையன்’ என்கிற முதலில் தோன்றிய அனுதாபத்தைத் தாண்டி இப்போதுதான் போட்டியாளர்களின் உண்மையான முகங்கள் வெளியே வருகின்றன. ‘அது இருக்கற தைரியத்துலதான் பய ரொம்ப அசால்ட்டா இருக்கான். அதைப் புடுங்கிட்டாதான் ஆட்டம் சுவாரஸ்யமாகும்’ என்பது மற்றவர்களின் கணக்கு.

பிக்பாஸ் – நாள் 15

‘எல்லாவற்றிற்கும் உடனே கோபப்பட்டு விடுகிறார்’ என்கிற காரணத்தையொட்டி அனிதாவிற்கு நான்கு ஓட்டுக்கள் கிடைத்தன. ‘பட்’டென்று பேசி விடும் பாலாவிற்கு இரண்டு மட்டுமே கிடைத்தது ஆச்சரியம்தான்.

ஆஜித்தை நாமினேட் செய்த நிஷா அதற்கு சொன்ன காரணம் உண்மையாக இருந்தது போல் இருந்தது. “அந்தப் பையன் முகம் வாடுதேன்னு ரமேஷ் கிட்ட இருந்து பாஸை வாங்கிக் கொடுத்தேன். ரமேஷ் என்கிட்ட கோச்சுக்கிட்டு பெரிய டிராமா நடந்தது. ஆனா. ஆஜித் இதுக்கு பெரிசா ரியாக்ட் பண்ணவேயில்ல. எனக்கு வருத்தமா இருந்தது” என்றார்.

இதைப் போலவே நிஷாவிற்கு பாலா சொன்ன காரணமும் பொருத்தமாக இருந்தது. “நிஷாக்கா அவங்க கேமை ஆடலை. எப்பவும் ரியோவிற்கு ஏதோ தளபதி மாதிரியே செயல்படறாங்க” என்றார்.

நாமினேஷன் படலம் முடிந்தது. இந்த இடத்தில் ஒரு புதிய பட்டாசை குறும்புடன் கொளுத்திப் போட்டார் பிக்பாஸ். பொதுவாக நாமினேஷன் முடிந்ததும் நபர்களையும் எண்ணிக்கைகளையும் மட்டுமே சொல்வார். இந்த முறை கூடுதலாக ‘சொல்லப்பட்ட காரணங்களையும்’ பிக்பாஸ் இணைத்துக் கொண்டார். இதனால் நாமினேட் ஆனவர்கள், எதற்காக ஆனார்கள் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்து விட்டது.

“அய்யோ… வெஷமக்காரப் பயடா நீ” என்று கேமராவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தார் சுரேஷ். சுரேஷிற்கும் பிக்பாஸிற்கும் இடையே ஒரு பந்தம் உருவாகிக் கொண்டிருக்கிறது. எதிரிகளை சம்பாதித்தாலும் சுரேஷ்ஷை வீட்டை விட்டு வெளியேற்றுவது அத்தனை எளிதல்ல என்று நினைக்கிறேன். அத்தனை முக்கியமான போட்டியாளராக உருமாறிக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் – நாள் 15

“அண்ணே… ஒரு டவுட்… இனிமே ‘அட்வைஸ்’ பண்ணாம ஆரி எப்படி உயிர் வாழ்வாரு?” என்கிற சீரியஸான விஷயத்தை பாலா சுரேஷிடம் கேட்க, “நீ வேற… இப்பவும் அவன் வெளியே அதைத்தான் பண்ணிட்டு இருக்கான்… அவன் ஃபுல் டைம் ஜாப்பா இதைத்தான் பண்றான் போலிருக்கு” என்பது போல் நக்கலாக பதில் சொன்னார் சுரேஷ்.

அவர் சொன்னது போலவே வெளியே அனிதாவிற்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் சமுத்திரக்கனி… மன்னிக்கவும்… ஆரி. (அடங்க மாட்டார் போல!) ‘என் இமேஜ் மட்டுமல்லாமல் என்ற… வூட்டுக்காரு பேரும் பாழாப் போவுது’ என்கிற கூடுதல் காரணத்தோடு மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தார் அனிதா. (கடவுளே!)

‘நேத்திக்கு மீன் குழம்பு மொக்கினீங்கள்ல. உங்களுக்கு இன்னமும் இருக்கு’ என்கிற வீம்போடு அடுத்தும் வில்லங்கமானதொரு டாஸ்கைத் தந்தார் பிக்பாஸ்.

‘Truth or dare’ விளையாட்டு. நாமினேட் ஆன ஐந்து பேர்கள் கேள்வி கேட்பார்கள். நாமினேட் ஆகாத இதர நபர்கள் அவர்கள் கேட்பதற்கு ‘உண்மை’யைச் சொல்ல வேண்டும் அல்லது சொன்ன விஷயத்தைச் செய்ய வேண்டும்.

முதலில் வந்தவர் வேல்முருகன். ‘நாம யாரு வம்புக்கும் போறதில்லை. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கோம்’ என்கிற குணாதிசயத்தைக் கொண்ட வேல், ‘உண்மை’ சொல்லும் தேர்வை எடுக்க மாட்டார் என்பது எளிதில் யூகிக்கக்கூடியதே. எனவே ‘சொன்னதைச் செய்கிறேன்’ என்கிற வாய்ப்பை தேர்ந்தெடுத்தார். ‘பிடிக்காத மூன்று பேர்களுக்கு மீசை வரைய வேண்டும்’ என்று சொல்லப்பட்டது.

குத்துமதிப்பாக கைக்கு கிடைத்த மூன்று பேருக்கு மீசை வரைந்து சென்றார் வேல்முருகன். அதற்கான காரணங்களைக் கேட்டால் கூட அவரால் சொல்லியிருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

பிக்பாஸ் – நாள் 15

அர்ச்சனா, நிஷா போன்றவர்கள் ‘என்ன வேணுமின்னாலும் கேளுங்கடா… ‘உண்மை’ சொல்றோம்’ என்று கெத்தாக சபையில் நின்றார்கள். மற்றவர்களின் பிழைகளைச் சுட்டிக் காட்டும் அதே நேரத்தில் அது சண்டையாக உருவாகாதவாறு சொல்லும் திறமையும் நகைச்சுவைத் திறனும் இவர்களிடம் இருக்கிறது.

ரியோவின் முறை வந்த போது, அவர் சுரேஷைக் குறித்து எதையோ சொல்ல முற்பட ‘மத்த பதினோரு பேருக்குள்ள மட்டும்தான் விளையாடணும்’ என்கிற ‘விதியைச்’ சுட்டிக்காட்டி அவரை அடக்கி விட்டார் சுரேஷ். ‘எவிக்ஷன் ப்ரீ பாஸில்’ மற்றவர்களை ராஜதந்திரத்துடன் அடக்கிய அதே உத்தி இது.

ஆனால் ஆட்டம் தொடர்ந்த போது ரியோவிற்கு இந்தச் சந்தேகம் வலுத்துக் கொண்டே இருந்ததால் மீண்டும் தன் சந்தேகத்தை எழுப்பினார். சுரேஷை ரம்யா மடக்கி ‘நல்ல பெயர்’ வாங்கியதைப் போன்று தானும் வாங்கலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். இதனால் இரண்டு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகியது.

உண்மையில் ரியோ முன்வைத்த கேள்வி லாஜிக்கானது. கேள்வி கேட்கும் எல்லை வரைக்கும்தான் ஐவர் அணி செல்ல முடியும். பதில் சொல்லப்படும் போது அதில் அவர்களும் இணைக்கப்படலாம். இதை எதிரணி ஒப்புக் கொள்ளாமல் ‘போங்காட்டம்’ ஆடினார்கள். ‘எப்படியாவது அடித்துக் கொள்ளுங்கள்’ என்று பிக்பாஸூம் தண்ணி தெளித்து விட்டார். அதுதானே அவரது பிளான்?!

இந்த டாஸ்க்கில் பாலாஜிக்கும் சுரேஷிற்கும் இடையே சில சுவாரஸ்யமான உரையாடல்கள் நிகழ்ந்தன. “சும்மா இருங்க.. தாத்தா… சும்மா டுபாக்கூர் மாதிரி” என்று பாலா ஜாலியாக சொல்லி விட, “டேய் இதைச் சொல்லித்தாண்டா முன்ன மாட்டிக்கிட்டே” என்று சிரித்தார் சுரேஷ்.

இன்னொரு இடத்தில், “சிரிக்காதடா… அவங்க ஹர்ட் ஆகப் போறாங்க” என்று பாலாவை சுரேஷ் எச்சரிக்க “எனக்கே விபூதி அடிக்கறீங்களா? என் கிட்டயே ஸ்கோர் பண்ணப் பார்க்காதீங்க” என்று ஜாலியாக எச்சரித்தார் பாலா. தனக்கு வேண்டியவர்கள் என்றாலும் தான் சொல்ல நினைப்பதை வெளிப்படையாக சொல்லி விடும் பாலாவின் இந்தக் குணாதிசயம் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.

பிக்பாஸ் – நாள் 15

வேல்முருகனின் கோபத்தைப் பற்றி பார்ப்போம். தீபாவளி சமயத்தில் சரவெடியைப் பற்ற வைத்த பின்னர் அது ஆக்ரோஷமாக வெடிப்பதை வியப்பாக நாம் பார்த்துக் கொண்டிருப்போம். ‘அனைத்தும் வெடித்து முடிந்தது போல’ என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு வெடிக்காத வெடி எதிர்பாராத நேரத்தில் வெடிக்கும். அதைப் பார்த்து சிரிப்போம்.

வேல்முருகனின் இன்றைய கோபமும் இப்படித்தான் காமெடியாக அமைந்து விட்டது பரிதாபம். வெளிப்படையாக பேசியிருக்கக்கூடிய எத்தனையோ சந்தர்ப்பங்களை தயக்கம் காரணமாக வீணடித்த அவர் இப்போது திடீரென்று “அமைதியா இருந்தா கெட்டவனா.. எனக்கும் பேசத் தெரியும்” என்பது போல் ஆவேசமடைவது அவரது கோபத்தை மதிப்பில்லாமல் செய்து விட்டது. அது மட்டுமல்லாமல் அவரை கோமாளியாகவும் காட்டுகிறது.

வேல்முருகன் வெளிப்படையாக இல்லாததைப் பற்றி ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டு வரும் போது வேறு வழியில்லாமல் செயற்கையான புன்னகையுடனும் அடக்கி வைக்கப்பட்ட கோபத்துடனும் கேட்டுக் கொண்டு வந்த அவர், ‘கேப்ரியல்லாவும்’ இதைக் குறிப்பிட்ட போது அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த அழுத்தங்கள் வெடித்து சாமியாடுவது போல் ஆவேசமாகி விட்டார். “ச்சூ… பத்து நிமிஷம் சும்மா இரு… நான் சொல்றேன்ல…” என்று அர்ச்சனா உரிமையோடு அதட்டி அடக்கியும் கூட வேல்முருகனால் தணிய முடியவில்லை.

விதி தொடர்பாக ரியோ தன் ஆட்சேபத்தை வைத்த போது ‘ஏதாவது பிரச்னை இருந்தா பிக்பாஸ் சொல்லியிருப்பாரு’ என்று சுரேஷ் சொன்னார். அதற்கு பதிலளித்த போது ரியோவின் உடல்மொழி ஒரு ஹீரோவிற்கு நிகராக இருந்தது. “நீங்க நோண்டிட்டே இருப்பீங்க.. மேலே இருந்து பதில் சொல்லிட்டே இருப்பாங்களா?” என்பது போல் ரியோ சொன்ன அந்த மாடுலேஷன் அட்டகாசம். எனக்கு ‘முள்ளும் மலரும்’ காளியெல்லாம் நினைவிற்கு வந்து போனார்.

பிக்பாஸ் – நாள் 15

இப்போது அடுத்த கோபம் அனிதாவுடையது. இதுவும் வேல்முருகனைப் போன்ற காமெடியாகி விட்டது என்றாலும் இதில் இன்னொரு பக்கம் சீரியஸாகவும் இருந்தது.

‘Truth or dare’ டாஸ்க்கில் நிகழ்ந்த பஞ்சாயத்துக்களைப் பற்றி பிறகு ரியோவும் ஆரியும் சீரிஸயாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அனிதாவும் இடையிடையே ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் அவர்களோ. ‘இது வேற நடுவுல’ என்கிற மாதிரி அனிதா சொல்ல வந்ததை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில் வெடித்த அனிதா… “நான் ஒண்ணும் குழந்தையில்ல. பொம்பளை… நிறையப் படிச்சிருக்கேன்.. உலக அரசியல்லாம் தெரியும்… என் குடும்பத்துல நானும்தான் முடிவு எடுக்கறேன்” என்றெல்லாம் அவர்களிடம் பொங்க ஆரம்பிக்க வீடே நிசப்தமாக மாறிப் போனது.

அனிதாவின் கோபம் ஒருபக்கம் மிகையானதாகவும் காமெடியானதாகவும் தெரிந்தாலும் இன்னொரு பக்கம் அது பெண்குலத்தின் பிரதிநிதித்துவ வெடிப்பு என்றே சொல்லலாம்.

பெரும்பாலான வீடுகளில் நிகழும் முக்கியமான பஞ்சாயத்துக்களில் கூட பெண்களின் தரப்பை ஆண்கள் அதிகமாக அனுமதிப்பதில்லை. அங்கீகரிப்பதும் இல்லை. “தே.. சும்மாயிரு” என்று கோபத்துடன் அடக்கி விடுவார்கள். அவர்கள் மட்டுமே தீவிரமாக விவாதிப்பார்கள். பக்கத்து வீட்டு ஆணைக் கூட மதித்து பிரச்னையைப் பேசுகிற ஆண்கள், தன் வீட்டுப் பெண்களிடம் கூட பொருட்படுத்தி விவாதிக்க மாட்டார்கள்.

பிக்பாஸ் – நாள் 15

ஆணாதிக்க உலக மனோபாவங்களுள் இதுவும் ஒன்று. அனிதாவின் திடீர் வெடிப்பைக் கண்ட ரியோவும் ஆரியும் திகைத்துப் போய் நின்றது சுவாரஸ்யமான காட்சி. குறிப்பாக ரியோவின் முகத்தில் ஈயாடவில்லை.

இப்படியான கோப தாபங்களுடனும் பஞ்சாயத்துக்களுடனும் இன்றைய நாளின் டிராமாக்கள் முடிந்தன.

முன்னர் குறிப்பிட்டதையே மீண்டும் இங்கு நினைவுப்படுத்துகிறேன். இந்தச் சம்பவங்களை, வம்பை வேடிக்கை பார்க்கும் மனோபாவத்தோடு நாம் நின்று விடாமல் இவற்றின் மூலம் நம்முடைய பிழைகளின் சுயபரிசீலனையாகவும் எடுத்துக் கொண்டால் அது இந்த நிகழ்ச்சிக்கு நாம் செலவு செய்யும் நேரத்திற்கான பலனாக அமையும்.

என்னது? என்ன சொல்றீங்க? நானும் ஆரி மாதிரி உபதேசம் செய்து கொண்டே இருக்கிறேனா? அய்யோ… ஆளை விடுங்கப்பா சாமிகளா!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.