ஆலமரத்திற்காக நிலத்தை பிரிக்காமல் வைத்திருக்கும் பெரம்பலூர் விவசாய குடும்பம்..

பெரம்பலூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது கண்ணபாடி. இங்கு வசிக்கும் ஒரு கூட்டுக் குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான விளைநிலத்தில் விவசாயம் பார்த்து வருகின்றனர். இவர்களுடைய விவசாய நிலத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று வளர்ந்து நிற்கிறது.

இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்னர் குடும்ப உறுப்பினர்களிடையே எல்லோருக்கும் நிலத்தை தனித்தனியாக பிரித்துக் கொடுக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் அப்படி நிலத்தை பிரித்தால் நிலத்தில் வளர்ந்து நிற்கும் ஆலமரத்தை வெட்டி அகற்ற வேண்டிய சூழல் உருவாகும் என்று யோசித்தனர்.

அதனால் மரத்தை வெட்ட மனமில்லாத அவர்கள், ஆலமரத்திற்காக நிலத்தை பிரிக்க வேண்டாம் என்று எல்லோரும் ஒருமனதாக முடிவு செய்தனர். மேலும் மரத்தின் அடியில் சாமி சிலையை வைத்து ஆலமரத்தை கோயிலாக வழிபட்டு வருகின்றனர்.

தங்களது குடும்பத்தினரை பொருத்தவரையில் நிலம் முன்னோர்களிடமிருந்து கிடைத்தது. மரத்தை பாதுகாப்பது அவர்களுக்கு செய்யும் மரியாதை என்கிறார் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.பிரதீப்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பிரதீப் கூறுகையில், ‘’இந்த பெரிய ஆலமரம் நம் முன்னோர்களைப் போலவே நமக்கு முக்கியமானது. என் தந்தை குழந்தையாக இருந்தபோது இந்த மரத்தை சுற்றி விளையாடியதாக கூறினார். அதனால்தான் குடும்பத்தில் யாரும் சொத்தை பிரிக்கக் கோரவில்லை.

குடும்பத்தில் பலர் வாழ்வாதாரத்திற்காக சிறிய அளவிலான விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறோம். நாங்கள் பணக்காரர்கள் அல்ல. முக்கியமாக விவசாயம் பொய்த்ததன் காரணமாக குடும்பத்தில் பலர் கஷ்டத்தில் இருக்கின்றனர். ஆனால் யாரும் நிலத்தை பங்கு கோரவில்லை’’ என்கிறார் பிரதீப்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.