பெற்றோர் ஆதரவு இல்லாத நிலையில் வேலை செய்யச் சென்ற இடத்தில் மேனேஜரின் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டு, அது பற்றிப் புகார் கொடுக்கச் சென்றபோது காவல்துறையின் பொய் வழக்கால் சிறைக்கு அனுப்பப்பட்ட இளம்பெண்கள் இருவர் தங்களுக்கு நீதிகேட்டு மதுரை கலெக்டரிடம் முறையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பிகா

வேலைக்குச் செல்லும் ஏழைப் பெண்களுக்கு நேரும் பாலியல் வன்முறைகள் மீதான புகார்களில் காவல்துறையினர் கருணை இல்லாமலும் பாரபட்சத்துடனும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது இச்சம்வம் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கலெக்டரிடம் மனு கொடுக்கத் தன் தோழி நவீனாவுடன் வந்த அம்பிகாவிடம் பேசினோம். ”பெற்றோர் பிரிந்து சென்றதால் திருப்பரங்குன்றத்தில் என் பாட்டியுடன் வசித்து வந்தேன். ப்ளஸ் டூ முடித்தவுடன், மேற்கொண்டு படிக்க வேண்டும் என்பதால் வேலை தேடத் தொடங்கினேன். அப்போது தோழி ஒருத்தி மூலம் பல்லடத்திலுள்ள கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலைபார்த்துக்கொண்டே அஞ்சல் வழியில் டிகிரி படித்தேன்.

வேலை செய்யுமிடத்தில் மேனேஜர் சிவகுமார் எனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். நான் கண்டுகொள்ளாமல் விலகினேன். ஆனால், என் படங்களை மார்ஃபிங் செய்து, `நான் சொல்லும் இடத்துக்கு வர வேண்டும், இல்லாவிட்டால் அந்தப் படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவேன்’ என்று மிரட்ட ஆரம்பித்தார். இதற்கு முடிவு கட்டவும் எங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடிவு செய்து, என் தோழி நவீனாவுடன் அவர் வரச்சொன்ன இடத்துக்குச் சென்றேன். எங்களிடம் தவறாக நடக்க முயன்ற சிவகுமாரின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவி, கயிற்றால் நாங்கள் கட்டிப்போட்டோம். பின்பு போலீஸுக்குத் தகவல் கொடுத்தோம்.

கலெக்டரிடம் புகார் அளிக்க வந்தபோது

காவல் நிலையத்துக்குச் சென்ற பின்பு, பல்லடம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ ஆகியோர் சிவகுமாருடன் சேர்ந்துகொண்டு எங்களிடம் வெற்றுத்தாளில் மிரட்டி கையெழுத்து வாங்கி, நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு எதுவும் பேசக் கூடாது என்று எங்களை மிரட்டினர். எங்களைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டபோது அதிர்ந்துபோனோம்.

Also Read: கேரளா: கொரோனா பாதித்த இளம் பெண்… ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை! – சிக்கிய ஓட்டுநர்

எங்களைத் தற்காத்துக்கொண்டதைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாத நாங்கள் சிறையில் இருந்துவிட்டு, தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளோம். நிபந்தனை ஜாமீனில் கையெழுத்துப் போடச் சென்றபோது, மேனேஜர் சிவகுமார் அடியாட்களுடன் வந்து தாக்கி, எங்களை காவல் நிலையத்துக்குச் செல்ல முடியாத வகையில் தொந்தரவு செய்தார். வெளியில் எங்கும் செல்ல முடியாத வகையில் மிரட்டினார். பலவகையிலும் எங்களை டார்ச்சர் செய்து, பொய் வழக்கு பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகத்தான் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்” என்றார்.

நவீனா, அம்பிகா

இவர்களுடைய புகாரின் அடிப்படையில், திருப்பூர் கலெக்டரிடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக மதுரை கலெக்டர் வினய் உறுதி அளித்துள்ளார்.

வேலைக்குச் செல்லும் இடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு இடையூறு என்றால் காவல்துறையில் புகார் அளிக்கச் சொல்லி வலியுறுத்துகிறது சட்டம். ஆனால், அந்தக் காவல்துறையே நிரபராதி பெண்களைக் குற்றவாளிகளாக்கியுள்ளது, அதிர்ச்சிக்கும் கண்டனத்துக்கும் உரியது என்று கண்டிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பெண்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கண்காணிக்க வேண்டிய அரசின் பொறுப்பு அதிகரித்துள்ளதையே இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.