ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி !

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

 

 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னசந்திரம் அடுத்த நெடுசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், இவர் ஓசூரில் உள்ள தனியார் வர்த்தக நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இதனை அடுத்து திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மற்றும் பூசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரை அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்த்துள்ளார். இந்த நிலையில் அந்த வர்த்தக நிறுவனம் நஷ்டம் அடைந்ததாக கூறி நிறுவனத்தை மூடி விட்டதுடன் அதனை நடத்தி வந்தவர்களும் தலைமறைவாகி விட்டனர்.

நிறுவனம் மூடப்பட்டதால் உறுப்பினர்களாக இணைந்த சாமிநாதன் மற்றும் சீனிவாசனுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது அந்த இழப்பை வினோத்குமார் தான் வழங்க வேண்டுமென இருவரும் தகராறு செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக வினோத்குமார் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததன் அடிப்படைகள் இருவருக்கும் இடையே சமாதான உடன்படிக்கை செய்து வைக்கப்பட்டது. இருப்பினும் சீனிவாசன் மற்றும் சாமிநாதன் இருவரும் தொடர்ந்து வினோத்குமாரிடம் தகராறு செய்து வந்ததுடன் அடியாட்களை வைத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

 

 

image

இந்த நிலையில் இன்று வினோத்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து சீனிவாசன் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரும் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த ஒரு லட்சம் பணம் 10 சவரன் நகை மற்றும் இரண்டு கறவை மாடுகளை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் தனது தந்தை முருகேசன் தாய் எல்லம்மாள் மற்றும் சகோதரர் உடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து உடலில் மண்ணெனய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

 
இதனைக்கண்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீர் ஊற்றி அவர்களை காப்பாற்றினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM