குஷ்பு தைரியமானவர்: பாஜகவுக்கு கட்டாயம் வரவேண்டும் – அண்ணாமலை பேட்டி

சமீபத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதியக் கல்விக் கொள்கை திட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்த்தபோது, காங்கிரஸ் கட்சியிலிருந்து அழுத்தமாக வந்த ஆதரவுக் குரல் நடிகை குஷ்புவுடையது. அதற்காக, கட்சித் தலைமைகளின் கண்டனங்களுக்கும் ஆளானார். இந்நிலையில், குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர் சி பா.ஜ.க தலைவர் எல்.முருகனை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான அண்ணாமலையிடம் “குஷ்பு பாஜகவில் சேரப்போகிறார் என்ற தகவல்கள் உண்மையா?” என்று கேட்டோம்,

      “என்னை பாஜகவில் இணைத்துக் கொண்டபிறகு ஒரு தொண்டனாக பிரதமர் மோடியை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று களப்பணியாற்றிக்கொண்டு வருகிறேன். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கூடுதலாக பிரதமரின் திட்டங்களை கொண்டு சேர்த்து வருகிறேன் என்பதால், இப்போது ஊரில்தான் இருக்கிறேன்.

image

அதனால், குஷ்பு இணைவது குறித்து தெரியாது. குஷ்பு பாஜகவில் சேர்ந்தால் வரவேற்கிறேன். அது, பாஜக மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பாஜக தமிழகத்தில் வேகமாக வளர்கிறது என்ற உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டும். குஷ்பு மிகவும் தைரியமான பெண்மணி. அவரின் தைரியம் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு ஊக்கம் கொடுப்பவை. அரசியலில் பெண்களுக்கு தைரியமும் துணிச்சலும் மிகவும் முக்கியம். அது அவரிடம் நிறையவே இருக்கிறது.

அதேபோல, எந்த அரசியல் கருத்தாக இருந்தாலும் நல்லப் புரிதலோடு தெளிவாகப் பேசக்கூடியவர். அவர் எங்கள் கட்சிக்கு  வந்தால் பிரதமர் மோடியின் சாதனைகளையும் பாஜக மக்களுக்கான அரசு என்பதையும் எடுத்துச் சொல்வார். குஷ்பு பாஜகவுக்கு கட்டாயம் வரவேண்டும்.

image

பாஜக கொண்டுவந்த புதியக் கல்விக் கொள்கையை குஷ்பு ஆதரித்திருந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

ஒரு காலத்தில் குஷ்பு பாஜகவின் திட்டங்களை கடுமையாக விமர்சித்தவர். இப்போது, அவரே எங்கள் கட்சியின் திட்டங்களை பாராட்டுகிறார் என்கிற போது தமிழக மக்களும் நிச்சயம் பிரதமர் மோடி குறித்து புரிந்து கொள்வார்கள். ஒரு தாயாக, ஒரு பெண்மணியாக, ஒரு தமிழக அரசியல்வாதியாக புதியக் கல்விக்கொள்கை தொலைநோக்கு சிந்தனை கொண்டது என்று அவருக்கு தெரிந்திருக்கவேதான் பாராட்டினார். கட்சி பாகுபாடில்லாமல், கட்சிக் கொள்கையை மீறி குஷ்பு வரவேற்றது, அவரது வெளிப்படைத்தன்மையையும் உண்மையான உள்ளத்தையுமே காட்டுகிறது.

– வினி சர்பனா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM