நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவரின் மகன் நம்பிராஜன், அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவரின் மகள் வான்மதியை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் இந்தக் காதலுக்கு வான்மதியின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நம்பிராஜன்

எதிர்ப்பையும் மீறி இருவரும் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இரு குடும்பத்தினருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. தன் தங்கையை நம்பிராஜன் திருமணம் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாத வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி, தன் நண்பர்களுடன் சேர்ந்து நம்பிராஜனை கடந்த ஆண்டு கொலை செய்து ரயில்வே தண்டவாளத்தில் வீசினார்.

நம்பிராஜன் கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவரது அண்ணன் ராமையா பழிவாங்கக் காத்திருந்தார். நம்பிராஜன் கொலையில் தொடர்புடைய நாங்குநேரியில் புரோட்டா கடை வைத்திருந்த ஆறுமுகம் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோரை ஆறு மாதங்களுக்குப் பின்னர் வெட்டிக் கொலை செய்து பழி தீர்த்துக் கொண்டனர்.

Also Read: நெல்லையை அதிரவைத்த இரட்டைக் கொலை – சிறுவன் கண் முன்பாக தாத்தா, தாய் கொல்லப்பட்ட கொடூரம்!

அதனால் ஆத்திரம் அடைந்த வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி மற்றும் உறவினர்கள் சிலர் இரட்டைக் கொலைக்குப் பழிவாங்கத் துடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று 12 பேர் கொண்ட கும்பல், நம்பிராஜனின் தந்தை அருணாசலம் தாய் சண்முகத்தாய் ஆகியோரைக் கொலை செய்வதற்காகச் சென்றுள்ளனர்.

அருணாசலத்தின் மகள் சாந்தி வீட்டுக்குச் சென்ற கும்பல் வெடிகுண்டை வீசியிருக்கிறது. அதில் சாந்தியின் மூன்று வயது குழந்தை செல்விக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் நிலைகுலைந்த சாந்தியின் கழுத்தை அந்தக் கும்பல் கொடூரமாக அறுத்துக் கொன்றது. பின்னர் அவரது தலையை தூக்கிக் கொண்டு தெருக்கள் வழியாக அருணாசலத்தைத் தேடிச் சென்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட சண்முகத்தாய்

தெருக்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியபடி சென்றதால் கிராமத்து மக்கள் வீட்டுக்குள் பதுங்கினார்கள். நிதானமாகச் சென்ற அந்தக் கும்பல், அருணாசலத்தின் வீட்டுக்குள் நுழைந்தது. அதற்குள் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அங்கிருந்த அவரது மனைவி சண்முகத்தாயின் தலையை வெட்டிய கும்பல், ஏற்கெனவே தூக்கிச் சென்ற சாந்தியின் தலையை நடுத்தெருவில் வைத்துவிட்டுச் சென்றது.

இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக மருகால்குறிச்சி கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணன், கொலைச் சம்பவம் குறித்து விசாரித்தார். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கொல்லப்பட்ட சாந்தி

கொலை கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் யார் என்பது தொடர்பாக நாங்குநேரி டோல்கேட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். காதல் சம்பவம் காரணமாக அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலை சம்பவங்களால் மருகால்குறிச்சி கிராமமே பதற்றத்தில் உறைந்துபோயுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.