பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா பொருளாதார மந்தநிலை காரணமாக மக்களின் வருமானமும், வாங்கும் திறனும் பெருமளவு குறைந்துவிட்டன. எனவே வங்கிகளில் பல்வேறு கடன்கள் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், தாம் விரும்பினால் மாதாந்திர கடன் தொகையை (இ.எம்.ஐ) செலுத்துவதற்கான காலக்கெடுவை 6 மாதங்கள் வரை நீட்டித்துக் கொள்ளும் வாய்ப்பை வங்கிகள் வழங்குகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இந்த வசதி அனைத்து வங்கிகளாலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்டேட் வங்கி

இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) மக்களின் கொரோனா கால பொருளாதார சிக்கலைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு புதிய சில்லறைக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் தவணை தொகை செலுத்துவதை மேலும் 24 மாதங்கள் (2 ஆண்டுகள்) வரை நீட்டித்துக்கொள்ளும் வாய்ப்பைத் தம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது எஸ்.பி.ஐ.

தகுதியுள்ள வாடிக்கையாளர்கள், விருப்பம் இருப்பின் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என எஸ்.பி.ஐ யின் அறிக்கை தெரிவிக்கிறது.

தகுதிகள்:

பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தி செய்யப்பட்டால் கடன் தவணை செலுத்துதல் 2 ஆண்டுகள் வரை தள்ளிவைக்கப்படும்.

1)பிப்ரவரி 2020 உடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் 2020 இல் வாடிக்கையாளரின் சம்பளம் அல்லது வருமானம் குறைந்து இருப்பது.

2)லாக்டௌன் காரணமாக ஊதியக் குறைவு அல்லது தற்காலிக பணிநீக்கம்.

3)லாக்டௌன் காரணமாக வேலை இழப்பு அல்லது வியாபாரத்தைக் கைவிடுவது.

4)சுயதொழில் செய்பவர்கள்,தொழில் வல்லுநர்கள் அல்லது வணிகர்கள் விஷயத்தில் வியாபாரத்தை விட்டு நீங்குதல்,அலகுகள் (Units),கடைகள் அல்லது வணிக நிறுவனங்கள் குறைவான செயல்பாட்டின் காரணமாக மூடப்பட்டிருத்தல்.

Representational Image

இந்த கட்டமைப்பின் கீழ் நிவாரணத்திற்கான விண்ணப்ப தேதியின்படி சில்லறைக் கடன் நிலையான கணக்காக (Standard)
இருக்க வேண்டும்.மேலும் கணக்கு மார்ச் 1,2020 வரை 30 நாட்களுக்கு மேல் வழுவுதல் நிலையாக (Not in default) இருந்திருக்கக் கூடாது.

மார்ச் 1,2020 தேதிக்கு முன்பு பெற்ற கடன்கள் மட்டுமே மறுசீரமைப்பிற்குத் தகுதியானவை.வீட்டுவசதி மற்றும் பிற தொடர்புடைய கடன்கள்,கல்விக் கடன்கள்,வாகனக் கடன்கள் (வணிக பயன்பாட்டிற்கான கடன்கள் தவிர) மற்றும் தனிப்பட்ட கடன்கள் உள்ளிட்ட சில்லறை கடன்கள் மறுசீரமைப்புக்கு தகுதியானவை.

கடன் மறுசீரமைப்பு கட்டமைப்பின் கீழ் கிடைக்கும் நிவாரணங்கள்:

# வங்கி விதிமுறைகளுக்கு இணங்க, அதிகபட்சம் 24 மாதங்கள் வரை தவணை செலுத்துவதில் விலக்கு.

# அதிகபட்சம் 2 ஆண்டுகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட தள்ளிவைப்பு காலத்திற்கு சமமான காலப்பகுதியை நீட்டித்தல்.

# வயது மற்றும் அப்போதைய தகுதி அடிப்படையில் தவணைகளை மறுசீரமைத்தல்.

# சில்லறை கடன் பெற்றவர்களுக்கு 1 முதல் 24 மாதங்கள் வரை கால அவகாசம் தேர்வு செய்யும் வாய்ப்பு.

# இந்த கடன் தள்ளிவைப்பு முன்னர் வங்கி வழங்கிய தள்ளிவைப்புடன் (6 மாதங்கள்) கூடுதலாக இருக்கும்.

கடன் மறு சீரமைப்பு-செயல்படும் விதம்:

*கடன் நீட்டிப்புக்காலம் முழுவதுமே செலுத்த வேண்டிய அசல் தொகைக்கு வட்டி கணக்கிடப்படும்.இது நீட்டிப்புக்கால முடிவில் செலுத்த வேண்டிய தொகையுடன் (Outstanding amount)இணைக்கப்படும்.

* வழங்கப்பட்ட நீட்டிப்புக்காலத்தின் அடிப்படையில்,கடனின் முடிவடையும் காலம் நீட்டிக்கப்படும்.

*தற்காலிக நீட்டிப்பு காலத்திற்குப் பின்னர் செலுத்த வேண்டிய ஈ.எம்.ஐ மீண்டும் கணக்கிடப்படும்.

* மீதமுள்ள கடன் தொகைக்கு தற்போதைய வட்டிக்கு மேல் ஆண்டிற்கு 0.35% கூடுதல் வட்டி வங்கியால் வசூலிக்கப்படும்.

* தற்காலிக கடன் தள்ளிவைப்பிற்குப் பின்னர் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய ஈ.எம்.ஐ தொகை மற்றும் கால அளவு மீண்டும் கணக்கிடப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

Representational Image

சாதக – பாதகங்கள்:

கடன் தொகையை செலுத்த இயலாத வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 24 மாதங்கள் வரை கடன் நீட்டிப்புக் காலம் கிடைக்கும் என்பதால் இது மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாக பாரத ஸ்டேட் வங்கியால் முன்மொழியப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில் கடன்தாரர்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டியதில்லை.
ஆனால் கடன் பெற்றவர்கள் உபரி பணம் இருந்தால் அவர்கள் ஈ.எம்.ஐ.களை செலுத்தலாம்,இது வட்டித் தொகையைக் குறைக்க உதவும்.

ஆனால் நீட்டிப்பு காலத்தில் கணக்கில் உள்ள மொத்த கடன் தொகைக்கும் வழக்கம்போல வட்டி கணக்கிடப்படுவது மற்றும் கடன் சீரமைப்பு காலத்திற்குப் பிறகு 0.35% அதிகப்படியான வட்டி காரணமாக செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் இ.எம்.ஐ ஆகியவற்றின் அளவு அபரிமிதமாக அதிகரித்துவிடும். எனவே நீட்டிப்பு காலத்திற்கு பிறகு வாடிக்கையாளரின் கடன் சுமை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புண்டு.

கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 24 ஆகும். ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து பிற பொதுத்துறை வங்கிகளும் வரும் நாட்களில் இதே போன்ற சீரமைப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கே.வி.காமத் கமிட்டி பரிந்துரைத்த கார்ப்பரேட் கடன் மறுசீரமைப்பு திட்டத்துடன் ஒப்பிடும்போது சில்லறை கடன் மறுசீரமைப்பு சற்று தாராளமய அடிப்படையில் உள்ளது.

ஆனால் இந்த கடன் சீரமைப்பில் உள்ள மிகப்பெரிய குறை, கடனுக்கான தள்ளிவைப்பு கால வட்டி தள்ளுபடி செய்யப்படுவது கிடையாது என்பதே.

“தள்ளிவைப்பு கால வட்டியைத் தள்ளுபடி செய்தால் வங்கிகள் மாபெரும் நிதிச்சிக்கலை எதிர்கொள்ளும், எனவே தள்ளிவைப்பு கால வட்டியைத் தள்ளுபடி செய்ய இயலாது” என ரிசர்வ் வங்கி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

எனவே வாடிக்கையாளர்கள் இ.எம்.ஐ தொகையை செலுத்த வாய்ப்பு இருப்பின் தள்ளி வைப்பு சலுகை கோராமல் வழக்கம்போல செலுத்திவிடுவதே சிறந்த முடிவாகும். முற்றிலும் தவணை செலுத்த இயலாத சூழல் உள்ளோர் மட்டும் இரண்டு ஆண்டுகள் கடன் தள்ளிவைப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

“கொரோனா தொற்றுநோயால் கடன் வாங்கியவர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகிறாரா, இல்லையா என்பதே இந்த சீரமைப்பின் முக்கிய அளவுகோல்” என்று ஸ்டேட் வங்கி தெரிவிக்கிறது.

எனவே கடன்களுக்கான தள்ளிவைப்பு வசதியைக் கோருவதும்,நிராகரிப்பதும் வாடிக்கையாளரின் தற்போதைய பொருளாதாரச் சூழலைப் பொறுத்ததே!

அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.