பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜ.க என முக்கிய கட்சிகள் அனைத்தும் களப் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில், சுஷாந்த் வழக்கை வைத்து ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க கூட்டணி, அரசியல் செய்து வருகிறது என்று பீகார் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது குறித்த விரிவான கட்டுரையைக் கீழுள்ள லிங்கில் படிக்கலாம்.

Also Read: சுஷாந்த் புகைப்படத்துடன் 30,000 மாஸ்க்குகள்… அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறதா பா.ஜ.க?

கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரண வழக்குதான் வட இந்திய மீடியாக்களின் ஹாட் டாபிக். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படுவதற்கு முன்னர் சுஷாந்த் மரணித்த இடமான மும்பையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மகாராஷ்டிர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதையடுத்து சுஷாந்த்தின் சொந்த மாநிலமான பீகாரில் உள்ள பாட்னா காவல் நிலையத்தில், “சுஷாந்த்தின் தோழி ரியா சக்ரபோர்த்தி, தன் மகனின் வங்கிக் கணக்கை நிர்வகித்து ஏராளமான பணத்தைக் கையாடல் செய்துவிட்டார். சுஷாந்தை தற்கொலைக்கு தள்ளியது ரியாதான்” என்று சுஷாந்தின் தந்தை கிருஷ்ண குமார் சிங் புகார் அளித்தார்.

இந்த புகரை அடுத்து ரியா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது பீகார் காவல்துறை. இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய மும்பை வந்த பீகார் காவல்துறை அதிகாரியை கொரோனா தடுப்பு நடவடிக்கை என்று சொல்லித் தனிமைப்படுத்தியது மகாராஷ்டிர அரசு. இதற்குப் பின்னர்தான் இது இருமாநில அரசுகளுக்கிடையேயான பிரச்னையாக மாறியது.

சுஷாந்த் – ரியா

விசாரணை செய்ய வந்த பீகார் காவல்துறை அதிகாரியை தன் வேலையைச் செய்ய விடாமல் தனிமைப்படுத்திவிட்டது சிவசேனா அரசு என்று கடுமையாக சிவசேனாவைச் சாடினார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார். மேலும், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். பீகார் மாநில டி.ஜி.பி குப்தேஷ்வர் பாண்டேவும் இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். “சுஷாந்த்தின் வங்கிக் கணக்கிலிருந்து கடந்த 4 ஆண்டுகளில் ரூ.50 கோடி காணாமல் போயிருக்கிறது. இது குறித்து மும்பை காவல்துறை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, விசாரணைக்கு வந்த எங்கள் மாநில காவல்துறை அதிகாரியைத் தனிமைப்படுத்தியுள்ளனர். எந்த மாநிலக் காவல்துறையும் இப்படிச் செய்ததே இல்லை. மும்பை காவல்துறையிடம் நேர்மையான அணுகுமுறை இருந்தால் விசாரணையை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார் குப்தேஷ்வர் பாண்டே.

இதையடுத்து மகாராஷ்டிர அரசின் முக்கிய புள்ளிகள் `மும்பை காவல்துறையை டி.ஜி.பி குப்தேஷ்வர் எப்படிக் குறை கூறலாம்’ எனப் பொங்கினர். இதைத் தொடர்ந்து சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் டி.ஜி.பி குப்தேஷ்வர் பாண்டேவை தாக்கிப் பேசி வந்தனர். இதற்கிடையில், சுஷாந்த் வழக்கை சிபிஐ-க்கு மாற்றித் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை வரவேற்கும் வகையில் “இந்தியா முழுவதும் இந்தத் தீர்ப்புக்காகத்தான் காத்திருந்தது. இந்தத் தீர்ப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது கண்டிப்பாக இந்த வழக்கில் நீதி கிடைத்துவிடும்” என்று கூறினார் குப்தேஷ்வர்.

குப்தேஷ்வர் பாண்டே

இதையடுத்து சிவசேனாவைச் சேர்ந்தவர்கள், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்குச் சாதகமாகவே டி.ஜி.பி குப்தேஷ்வர் பாண்டே நடந்து வருகிறார் என்று குற்றஞ்சாட்டினர். சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், “இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி. பீகார் மாநிலத்தில் சிபிஐ-க்கு மாற்றப்பட்ட எத்தனை வழக்குகளுக்குத் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன? நாட்டிலேயே சிறந்த காவல்துறை மகாராஷ்டிர மாநில காவல் துறைதான். எங்கள் காவல்துறைக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். குறிப்பாக `காக்கி’ அணிந்து கொண்டு (குப்தேஷ்வரை குறிக்கிறார்) ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் பாடம் எடுக்கத் தேவையில்லை. இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதில்தான் அந்த அதிகாரிக்கு (குப்தேஷ்வர்) எவ்வளவு ஆனந்தம். அவர் பா.ஜ.க கொடியை அசைத்து கொண்டாடாததுதான் மிச்சம்” என்று கடுமையாக டி.ஜி.பி குப்தேஷ்வரை தாக்கிப் பேசினார். இதைத் தொடர்ந்து சிவசேனா அரசில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருக்கும் ஜித்தேந்திர அவாத் (Jitendra Awhad) ஒரு கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்…

குப்தேஷ்வர் பாண்டே, சிவசேனாவின் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் விதமாக “என் மீது வைக்கப்படும் எல்லா குற்றாச்சட்டுகளையும் நான் கவனித்து அதற்குப் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகச் சேவை செய்து கொண்டேதான் இருப்பேன். என் மீது முடிந்தவரை குற்றம்சாட்டுங்கள். அதேநேரத்தில் சுஷாந்த்துக்கான நீதி கிடைத்தே தீர வேண்டும்” என்றார்.

இந்தநிலையில், கடந்த செவ்வாய்கிழமை (22.09.2020) அன்று விருப்ப ஓய்வு பெற்று தனது டி.ஜி.பி பதவியிலிருந்து விலகியிருக்கிறார் குப்தேஷ்வர் பாண்டே. இதையடுத்து வருகின்ற பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. `பா.ஜ.க, ஐக்கிய ஜனதா-தளம் இணைந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகக் களமிறங்கப் போகிறார் குப்தேஷ்வர்’ எனப் பீகார் மாநில செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Gupteshwar pandey

இந்த விஷயம் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சச்சின் சாவன்ந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிர அரசின் நற்பெயரைக் களங்கப்படுத்த பா.ஜ.க சில அழுக்கான நாடகங்களை நடத்துகிறது. அதற்குப் பயன்படுத்தப்பட்ட டி.ஜி.பிக்கு இப்போது வெகுமதி வழங்கவுள்ளது. அதைத்தான் அவரது விருப்ப ஓய்வு காட்டுகிறது. பா.ஜ.க-வுக்கு சுஷாந்த் சிங் மீது எந்த அனுதாபமும் இல்லை. பீகார் தேர்தலுக்காக பா.ஜ.க அவரது மரண வழக்கைப் பயன்படுத்திக் கொள்கிறது. அவ்வளவுதான்” என்று பதிவிட்டுள்ளார்.

டி.ஜி.பி குப்தேஷ்வர் பாண்டே

சிவசேனா எம்.பி ப்ரியங்கா சத்ருவேதியும் இது குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

இந்தியில் பதிவிட்டிருந்த இந்த ட்விட்டில் `குப்த்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மறைமுகமாக குப்தேஷ்வரை தாக்கியிருக்கிறார் ப்ரியங்கா.

யார் இந்த குப்தேஷ்வர் பாண்டே?

பீகார் மாநிலம் பக்ஸார் (Buxar) மாவட்டத்தில் 1961-ல் பிறந்தவர் குப்தேஷ்வர். யு.பி.எஸ்.சி தேர்வில் சமஸ்கிருத மொழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற இவர், 1987 ஐ.பி.எஸ் பேட்சில் பயிற்சி பெற்று பீகார் கேடரில் காவல்துறை அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். தொடர்ந்து பீகாரின் பல்வேறு பகுதிகளில் எஸ்.பி-யாக பணியாற்றி வந்தவர், பின்னர் ஐ.ஜி-யாக பணி உயர்வு பெற்றார். முசாஃபர்நகர் பகுதியில் இவர் ஐ.ஜி-யாக பணியமர்த்தப்பட்டார்.

டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே

Also Read: `இந்தி தெரியாது போடா’, `தமிழ் எங்கள் வேலன்; இந்தி நம்ம தோழன்’ – டி-ஷர்ட் அரசியல் பின்னணி!

2009 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க சார்பாக பக்ஸார் தொகுதியில் சீட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டத்தையடுத்து விருப்ப ஓய்வு வேண்டுமென 2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் விண்ணப்பித்தார் குப்தேஷ்வர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்றதும் தனது விருப்ப ஓய்வு விண்ணப்பத்தைத் திரும்பப்பெற விரும்புவதாகப் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரிடம் வேண்டுகோள் வைத்தார். அதையடுத்து 9 மாதங்கள் கழித்து மீண்டும் அவருக்குப் பீகார் காவல்துறையில் பதவி வழங்கப்பட்டது.

அந்த சமயத்தில் இது மிகப் பெரும் சர்ச்சையானது `விருப்ப ஓய்வை மாநில அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்த பிறகு அதைத் திரும்பப் பெறுவது அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஆனால், குப்தேஷ்வர் விஷயத்தில் எப்படி இது நடந்தது’ எனச் சிலர் சர்ச்சையைக் கிளப்பினர்.

குப்தேஷ்வர் பாண்டே – நிதீஷ் குமார்

2012-ம் ஆண்டு நில அபகரிப்புத் தொடர்பான விவகாரத்தில் 12 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக முசாஃபர்நகர் காவல் நிலையத்தியல் வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கு பின்னர் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. 2104-ம் ஆண்டு இந்த வழக்கில் குப்தேஷ்வரிடம் விசாரணை நடத்தியது சி.பி.ஐ. சிறுமி காணாமல் போன சமயத்தில் முசாஃபர்நகரின் ஐ.ஜி-யாக பணியாற்றி வந்தார் குப்தேஷ்வர். அவருக்கும் இந்தச் சிறுமி கடத்தல் வழக்கில் தொடர்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சி.பி.ஐ குப்தேஷ்வரிடம் விசாரணை செய்தது.

அதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் மதுவுக்குத் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான பிரசாரத்துக்காகப் பீகார் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் குப்தேஷ்வர் பாண்டே. மதுத் தடைக்கு ஆதரவான இந்த பிரசாரம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற காரணத்தால் குப்தேஷ்வர் பீகார் மக்களிடையே பிரபலமடைந்தார்.

குப்தேஷ்வர் பாண்டே

கடந்த 2019 ஜனவரியில் டி.ஜி.பி-யாகப் பதவி உயர்வு பெற்றார் குப்தேஷ்வர். அந்த சமயத்தில் முசாஃபர்நகரில் கடத்தப்பட்ட சிறுமியின் தந்தை ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில்…

DGP Gupteshwar pandey

Also Read: சுஷாந்த் விவகாரம்: தீபிகா படுகோன் டார்கெட்… பின்னணி அரசியல் என்ன?

2019 முதல் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி வரை பீகார் மாநில காவல்துறையின் டி.ஜி.பி-யாகப் பணியாற்றி வந்த குப்தேஷ்வர் கடந்த சில மாதங்களாக சுஷாந்த் வழக்கில் ஈடுபாடு கொண்டு பல கருத்துகளை முன் வைத்தார். இதன்மூலம் சுஷாந்த் சிங் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஓய்வு பெறவிருந்த குப்தேஷ்வர் இந்த ஆண்டே விருப்ப ஓய்வு பெற்றிருப்பதால் அவர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்ற செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

குப்தேஷ்வர் விருப்ப ஓய்வு குறித்து பீகார் மாநில எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், “அவர் `காக்கி’ யிலிருந்து `காவி’ க்கு மாற நினைக்கிறார் அதனால்தான் இந்த ஓய்வு. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பக்ஸார் அல்லது ஷாபூர் (Shahpur) தொகுதியில் அவர் நிச்சயம் போட்டியிடுவார்” என்கிறார்கள்.

குப்தேஷ்வர் பாண்டே

Also Read: தோனி-அமித் ஷா சந்திப்பு… ஜெய் ஷா தலையீடு… – தோனி ஓய்வில் அரசியல் இருக்கிறதா?

சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் சொல்வதைப் போல குப்தேஷ்வர் பா.ஜ.க-வில் இணைவாரா, இணைந்தால் பீகார் தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படுமா, சீட் வழங்கப்படும் பட்சத்தில் அவரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வெற்றி பெற்றால் குப்தேஷ்வருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.