தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு சர்ச்சை கிளம்பியது. கேள்வி நேரம் கிடையாது என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. கூட்டத்தொடர் ஆரம்பித்த பிறகு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் மசோதாக்களால் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ‘விவசாயிகள் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா’, ’விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளித்தல் மசோதா’, ‘விவசாய சேவை மசோதா’ ஆகிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியுள்ளன.

இந்த சட்டங்களுக்கு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலி தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அமைச்சரவையிலிருந்து வெளியேறியிருக்கிறது. நீண்டகாலமாக பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியாக இருந்துவரும் இந்தக் கட்சியைச் சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் துறை அமைச்சரான ஹர்சிம்ரத் சிங் கௌர் தமது பதவியை செப்டம்பர் 17-ம் தேதி ராஜினாமா செய்தார். கூட்டணிக் கட்சியின் இந்த எதிர்ப்பு ஆளும் பா.ஜ.க-வை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

வேளாண் பணி

தமிழகத்தைச் சேர்ந்த 38 எம்.பி-க்கள் இந்த வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க எம்.பி-யான ரவீந்திரநாத் குமார், அந்த மசோதாக்களை ஆதரித்து வாக்களித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, மத்திய பா.ஜ.க அரசின் விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு ஆதரவளித்து, விவசாயிகளின் நலன் குறித்து கொஞ்சம்கூட இரக்கமின்றி நடந்துகொண்டிருக்கிறது. இனியொரு முறை மேடைகளில் நின்று ‘நான் ஒரு விவசாயி’ என்று மட்டும் சொல்லாதீர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். மசோதாக்களை ஆதரித்து வாக்களித்ததற்காக ரவீந்திரநாத் குமாரை, ‘விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார்’ என்று விவசாய சங்கங்கள் விமர்சிக்கின்றன.

‘வேளாண் சட்டங்கள்‘ தொடர்பான விவகாரத்தில் பொய்ப் பிரசாரம் செய்வதாக எதிர்க் கட்சிகள் மீது பாய்ந்திருக்கிறார் பிரதமர் மோடி. அதே நேரத்தில் கூட்டணிக் கட்சியின் எதிர்ப்பு குறித்து அவர் எதுவும் பேசவில்லை. ”இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு சுதந்திரம் அளிப்பதுடன் அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றன” என்று பிரதமர் பேசியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகத்திடம் பேசினோம். “மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டங்களை எதிர்த்து, பா.ஜ.க-வின் கூட்டணி அமைச்சரே பதவி விலகியிருக்கிறார் என்றால், இது எவ்வளவு மோசமான சட்டம் என்பது தெரிகிறது. விவசாயிகளான எங்களைப் பொறுத்தவரையில், இந்தச் சட்டங்களை ஒருபோதும் ஏற்கமாட்டோம். இவற்றை ஒருபோதும் அமல்படுத்தவும் விடமாட்டோம். இதற்கு எதிராக விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம்.

சண்முகம்

இந்திய விவசாயத்தை முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, இந்திய விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் குழிதோண்டிப் புதைப்பதற்குத்தான் இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் என்பது பாடுபட்டு விவசாயிகள் உற்பத்திசெய்யும் உணவுப்பொருள்களை, சாதாரண மக்களால் வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.

இதுவரை, உணவுப்பொருள்களைப் பதுக்கிவைக்க முடியாத நிலை இருந்தது. இந்தப் புதிய சட்டமானது, எவ்வளவு உணவுப்பொருள்களை வேண்டுமானாலும் பதுக்கிவைக்கலாம், எத்தனை காலத்துக் வேண்டுமானாலும் பதுக்கிவைக்கலாம் என்பதை அனுமதிக்கிறது. அதைப் பயன்படுத்தி, செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, எவ்வளவு வேண்டுமானாலும் விலையை உயர்த்தி விற்பார்கள். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஏழை எளிய மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துவிடும்.

இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால், ஒப்பந்த சாகுபடி என்ற பெயரில் இந்திய விவசாய நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது. வேளாண் விளைபொருள்களின் விலையை கார்ப்பரேட் நிறுவனத்தினர் முன்கூட்டியே தீர்மானிப்பார்கள். இது நல்லதுதானே என்று நினைக்கத் தோன்றும். ஆனால், விலையை நிர்ணயிக்கும் நிறுவனங்கள், விளைபொருள்களின் தரம் குறித்து ஏகப்பட்ட நிபந்தனைகளை விதிப்பார்கள். அந்த நிபந்தனைகளின்படி விளைபொருள்கள் இல்லை என்று சொல்லி, தீர்மானிக்கப்பட்ட விலையைத் தர மறுக்கும் நிலைதான் உருவாகும்.

மோடி

மேலும், இந்திய மக்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்வது என்பதற்குப் பதிலாக, ஏற்றுமதிக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வது என்ற நிலை ஏற்படும். உலகச் சந்தையில் எந்தப் பொருளுக்கு அதிகமான டிமாண்ட் இருக்கிறதோ,அந்தப் பொருளை உற்பத்தி செய்யுங்கள் என்ற அழுத்தத்தை இந்திய விவசாயிகளுக்குக் கொடுப்பார்கள். இப்படியாக, இந்திய விவசாயம் முழுவதும் கார்ப்பரேட் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்லப்படும். நிலம் மட்டும் விவசாயிகளின் பெயர்களில் இருக்கும். மற்ற அனைத்தையும் மற்றவர்கள் தீர்மானிப்பார்கள். இதன் மூலம், இந்திய விவசாயிகளை மத்திய அரசு கைகழுவிவிடுகிறது.

‘ஒரே நாடு ஒரே சந்தை’ என்கிற முறையில் இந்தியாவில் எந்த மூலையில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அந்தப் பொருளுக்கு எந்த இடத்தில் அதிகமான விலை கிடைக்கிறதோ, அங்கு போய் அந்தப் பொருளை விற்கலாம் என்று மத்திய ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்திய விவசாயிகளில் 86 சதவிகிதம் பேர் சிறு குறு விவசாயிகள்.

இவர்களில் பெரும்பாலோர் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பதற்கு, அவர்கள் வசிக்கும் தாலுகாவைத்தாண்டி வரமாட்டார்கள். எனவே, இதனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அது வியாபாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும்தான் சாதகமாக இருக்கும். ‘ஒரே நாடு ஒரே சந்தை’ என்பது ஒரு வெற்று முழக்கம்.

வேளாண் பணி

நம் விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு ஒரே ஒரு எம்.பி-யைத் தவிர தமிழகத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த எம்.பி-க்களும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரவீந்திரநாத் குமார் எம்.பி மட்டும்தான் இந்த மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக வாக்களித்து விவசாயிகளுக்கு துரோகம் செய்திருக்கிறார். குறிப்பாக, தமிழக விவசாயிகளுக்கு அவர் செய்த மிகப்பெரிய துரோகமாகவே இதைப் பார்க்கிறோம்” என்று கொந்தளித்தார் பெ.சண்முகம்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான பேராசிரியர் ராஜலெட்சுமியிடம் பேசினோம். “இந்தக் கொரோனா பெருந்தொற்று நேரத்தில், இந்தியாவின் பொருளாதாரம் மைனஸ் 23 சதவிகிதம் என்று வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், விவசாயம் மட்டும் மூன்று சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அந்தளவுக்கு நம் நாட்டில் விவசாயம் வளர்ந்திருக்கிறது. விவசாயத்தைக் காக்க வேண்டியது அரசின் கடமை என்கிற வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதுதான் விவசாயம் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதற்குக் காரணம். வேளாண் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவருகிறது. அதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும்கூட, அதில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.

ராஜலட்சுமி

இந்த நிலையில்தான், மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைத் தாங்களே நேரடியாக விற்பனை செய்துகொள்ளலாம். கான்ட்ராக்ட் செய்துகொண்டு விவசாயம் செய்யலாம். ஏற்றுமதியும் விவசாயிகள் செய்யலாம். இப்படியாக, விவசாயிகளின் முன்னேற்றத்துக்காகப் பல கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் முன்பு உணவுப்பொருள்கள் உற்பத்தியில் பற்றாக்குறை இருந்தது. ஆனால், இன்றைக்கு உற்பத்திஅதிகரித்துள்ளது. அளவுக்கு அதிகமாக உணவுப்பொருள்கள் குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அடுத்த ஐந்தாறு ஆண்டுகளுக்குத் தேவையான உணவுப்பொருள்கள் நம்மிடம் இருப்பு உள்ளது. உற்பத்தி அதிகமாக இருந்தபோதிலும், விவசாயிகளுக்கு உரிய வருமானம் இல்லை. உற்பத்திக்கு விவசாயி செய்த செலவைவிட, குறைவான விலையே முந்தைய ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்டது. இனிமேல் அந்த நிலைமை மாறும்.

கோதுமை, கரும்பு உள்பட குறிப்பிட்ட சில விளைபொருள்களுக்கு மட்டும் நல்ல விலை கிடைக்கும். ஆனால், அரிசிக்கு நல்ல விலை கிடைக்காது என்ற நிலை இருந்தது. அதற்குக் காரணம், இடைத்தரகர்கள். இனி, விவசாயிகளே நேரடியாக வர்த்தகம் செய்யலாம். அப்போது, அதிகமாக விலை கிடைக்கும். மேலும், வேளாண் விளைபொருள்களை இவர்களிடம்தான் கொடுக்க வேண்டும், இவ்வளவுக்கு மேல் இருப்பு வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று இருந்த நிலை, இந்தப் புதிய சட்டங்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளது.

தெருவோர காய்கறி வியாபாரிகள்

இனிமேல், இந்திய விவசாயம் முன்பைவிட நல்ல நிலைக்கு முன்னேறும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு அதிகமாக விலை கிடைத்து, அவர்களின் வாழ்க்கை நிலையும் மேம்படும். சிறு குறு தொழில்களைப் போல விவசாயமும் வளருவதற்கு நல்ல வாய்ப்பு உருவாகும்” என்றார் பேராசிரியர் ராஜலட்சுமி.

Also Read: அன்னா ஹசாரேவின் போராட்டப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்-ஸும் பா.ஜ.க-வும் இருந்தனவா?

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவைவிட இரண்டு மடங்கு விலை கொடுப்போம் என்று 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை பா.ஜ.க அரசு நிறைவேற்றவில்லை என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது குறித்து ராஜலட்சுமியிடம் கேட்டபோது, “இந்த வேளாண் சட்டங்கள் அந்த வாக்குறுதியைச் சாத்தியப்படுத்தும்” என்றார்.

டெல்லியில் அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்

இந்தச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. செப்டம்பர் 24 , 25, 26 ஆகிய தேதிகளில் ரயில் மறியல் போராட்டத்தை அந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.