ஐபிஎல்-ன் வயது குறைந்த கேப்டன்கள்… அடுத்தத் தலைமுறை இந்திய அணியின் தூண்கள் என நம்பப்படுபவர்கள் இருவர் மோதிக்கொள்ளும் ஆட்டமென்பதால் டெல்லி – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அதனை சூப்பர் ஓவர் வரை இழுத்துச் சென்று ‘வெயிட்டிங்கிற்கு நாங்க வொர்த்து’ என நிரூபித்தார்கள் இரு கேப்டன்களும்.

இரு அணிகளிலும் ஒரு பேட்ஸ்மேன், இரு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஆல்ரவுண்டர் என்ற விகிதத்தில் இருந்தார்கள் வெளிநாட்டு வீரர்கள். கரீபியன் லீகில் கலக்கிய லாமிச்சேன், முஜீப் என இரு ஸ்பின்னர்களுக்கும் அணியில் இடமில்லை. டாஸ் வென்ற ராகுல் பெளலிங் செய்யத் தீர்மானித்தார்.

DCvKXIP

பிரித்வி ஷாவைப் பொருத்தவரை எந்தக் கவலையுமில்லாமல் ஆடும் பக்கத்து வீட்டுப் பையனைப் போலத்தான் பிட்சுக்கு வந்தார். ஆனாலும், காட்ரலின் முதல் ஓவரில் ரொம்பவே திணறினார். அவரின் பதற்றம் அடுத்த ஓவரிலேயே தவானைப் பதம் பார்த்தது. ஷமியின் பவுன்சரை தொட்டுவிட்டு தவான் ஓட முயல, ‘உங்க இஷ்டத்துக்கு எல்லாம் வரமுடியாதுங்க’ என பேக்கடித்தார் ஷா. தவான் டக் அவுட். அவரை பெவிலியன் அனுப்பியதற்காகவாவது ஷா நின்று ஆடியிருக்கலாம். ஆனால் ஷமியின் அடுத்த ஓவரில் அவரும் நடையைக் கட்டினார். ஒன்டவுனில் களமிறங்கிய ஹெட்மெயர் ‘அடிச்சா அடிச்சுக்கிட்டே இருப்பேன், இல்லைன்னா இல்ல’ ரகம் என்பதால் அதே ஓவரில் அவரும் நடையைக் கட்டினார். ஒரே ஓவரில் ஷமிக்கு இரண்டு விக்கெட்கள். அவர் டி20-யில் பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டுக்கு மேல் வீழ்த்துவது இதுவே முதல்முறை.

அணியை வழிநடத்தும் பொறுப்பு இப்போது கேப்டன் ஷ்ரேயாஸ் கையிலும் கீப்பர் பன்ட் கையிலும். பொறுமையாகவே ஆடினார்கள் இருவரும். பவர்ப்ளே முடிவில் வெறும் 23 ரன்கள்தான். அடுத்த ஆறு ஓவர்களில் 41 ரன்கள். இருவரும் இளம் ஸ்பின்னர் பிஷ்னோய் பந்துவீச்சில் அடக்கிவாசித்தாலும் அதற்கும் சேர்த்து மற்றொரு ஸ்பின்னரான கிருஷ்ணப்பா கெளதமை வெளுத்தார்கள். எல்லாரும் எதிர்பார்த்த அந்தத் தருணமும் வந்தது. வழக்கம்போல அதே ஸ்லாக் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று வழக்கம்போலவே அவுட்டானார் பன்ட். அவர் இதேமாதிரி எத்தனை தடவை அவுட்டாகி இருக்கிறார் என கணக்கெடுத்தால் தமிழகத்தில் தேசியக் கட்சிகள் வாங்கும் ஓட்டுகளைவிட அதிகமாக இருக்கும். அவர் பின்னாலேயே நடையைக் கட்டினார் ஷ்ரேயாஸ் ஐயரும்.

DCvKXIP

அதன்பின் மளமளவென விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருக்க, மறுமுனையில் சிங்கிள் சிங்கமாய் தம் கட்டினார் ஸ்டோய்னிஸ். முதல் 7 பந்துகளில் அவர் எடுத்தது நான்கு ரன்கள். அடுத்த 14 பந்துகளில் 49 ரன்கள். அதிலும் ஜோர்டான் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள். 130-ஐ தாண்டவே முக்கிக்கொண்டிருந்த டெல்லி சட்டென 160-க்கு நெருக்கமாய் வந்து நின்றது.

158 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பஞ்சாப், டெல்லியைக் காட்டிலும் வேகமாய் முதல் நான்கு ஓவர்களில் ரன்களைச் சேர்த்தது. ஐந்தாவது ஓவரில் மோகித் ஷர்மாவின் செமத்தியான ஸ்விங்கில் போல்டானார் ராகுல். அடுத்த ஓவர் அஷ்வின். ‘என்னைய வச்சு வியாபாரமா பண்றீங்க வியாபாரம்?’ என ஏகக் கடுப்பில் இருந்திருப்பார் போல. ஒரே ஓவரில் கருண் நாயர், பூரன் என இரு முக்கிய விக்கெட்களைக் கழற்றினார். அந்த ஓவரின் கடைசி பாலில் பந்தைத் தடுக்க அஷ்வின் டைவ் அடிக்க, அது அவரது தோளைப் பதம் பார்த்தது. உடனே ஜெர்ஸியிலேயே கையைக் கட்டி அவரை அழைத்துச் சென்றார்கள்.

மேக்ஸ்வெல் எல்லாம் ‘எனக்குக் கோபம் வந்தா காட்டடி அடிப்பேன் தெரியும்ல’ ரகம். ஆனால் பிரச்னை என்னவென்றால் அவருக்கு கோபம் ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறைதான் வரும். ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்ஃப்ராஸ் கானும் 12 ரன்னில் வெளியேறினார். பத்து ஓவர்கள் முடிவில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தள்ளாடியது பஞ்சாப். ஒருபுறம் ஐபிஎல்-ல் நல்ல அனுபவம் இருக்கும் மயாங்க் அகர்வால். இன்னொரு முனையில் பேட்டிங்கும் செய்யக்கூடிய கிருஷ்ணப்பா கெளதம். இருவரும் அடுத்த 5 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்தார்கள். அடுத்த ஓவரில் ரபாடா கெளதமை அவுட்டாக்க, இப்போது சுமை மொத்தமாய் மயாங்க் தலையில்.

DCvKXIP

டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இறுதி ஓவர் நெருங்க நெருங்கத்தான் அனுபவம் கைகொடுக்கும். மயாங்க் நிதானமாக பந்தை செலக்ட் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார். 18-வது ஓவரில் மட்டும் 17 ரன்கள் அடித்து அரைசதம் கடந்தார். கடந்த 31 ஆட்டங்களில் அவர் அடிக்கும் மூன்றாவது அரைசதம் இது. அதற்கடுத்த ஓவரில் 12 ரன்கள். இப்போது வெற்றிக்குத் தேவை ஆறு பந்துகளில் 13 ரன்கள். கடைசி ஓவரின் முதல் இரு பந்துகளில் 8 ரன்கள். இப்போது நான்கு பந்துகளில் ஐந்து ரன்கள் தேவை.

Also Read: தோனி தந்திரங்கள்… ரோஹித்தைக் குழப்பிய கேப்டன் தோனியின் 5 முடிவுகள்?! #MIvsCSK #Dhoni

லேட்டஸ்ட் வைரலான தனுஷின் ‘ரகிட ரகிட’ பாடல் அவருக்கு பொருந்துகிறதோ இல்லையோ பஞ்சாபிற்கு பக்காவாக பொருந்தும். ”என்னைத் தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே… அட அவனும் இங்க நான்தானே” – பஞ்சாபின் பன்ச் லைனும் இதுதான். கடைசி மூன்று பந்துகளில் தேவை ஒரே ஒரு ரன் தான். பிரேம்ஜி நின்றிருந்தால்கூட ஆஃப் சைடில் சட்டென விலகி வைட் கேட்டிருப்பார். ம்ஹூம்… கடைசி இரண்டு பந்துகளுமே விக்கெட். மேட்ச் டை. சூப்பர் ஓவர்.

DCvKXIP

விதிப்படி முதலில் பஞ்சாப்தான் பேட்டிங். ‘ரகிட ரகிட’ மீண்டும் ஒலித்தது. அவ்வளவு நேரம் களத்தில் நின்ற மயாங்க்கை பேட்டிங்கிற்கு அனுப்பியிருக்கலாம். ராகுலும் பூரனும் களமிறங்கினார்கள். ”பங்காளி… சூப்பர் ஓவர்ல எத்தனை விக்கெட் விழுந்தா அந்த டீம் ஆல் அவுட்டான கணக்கு?” என நண்பன் அனுப்பிய மெசேஜுக்கு ‘2’ என டைப் செய்வதற்குள் இருவருமே அவுட்டாகி பெவிலியன் வந்தார்கள். வெறும் 3 ரன்கள் தான் தேவை டெல்லிக்கு. ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த சூப்பர் ஓவர் ஸ்கோர் இது. ஷமியின் பந்தை தட்டிவிட்டு வெற்றியைத் தட்டினார்கள் டெல்லி பேட்ஸ்மேன்கள்.

ஸ்டோய்னிஸ் ஆட்டநாயகன். பிரசன்டேஷனின்போது கையில் கட்டு இல்லாமல்தான் வந்தார் அஷ்வின். அவரது உடற்தகுதி டெல்லி அணியின் வெற்றிக்கு மிக முக்கியம். மறுமுனையில் வழக்கம்போல மிடில் ஆர்டர் சொதப்பலால் திணறுகிறது பஞ்சாப். கருண் நாயர், பூரன், மேக்ஸ்வெல், சர்ஃப்ராஸ், மந்தீப் இவர்கள் ஒழுங்காக ஆடினால்தான் ப்ளே ஆஃப் சுற்றை தொட்டாவது பார்க்கமுடியும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.