கடந்த ஆறு வருடங்களாக நான் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லாண்டாவில் வசித்து வருகிறேன். பொதுவாக, நமக்கு அமெரிக்கா என்றால் ஹாலிவுட் படங்களும், ஆர்ப்பரிக்கும் நயாகரா அருவியும், மலைக் குவியல்கள் நிறைந்த கிராண்ட் கேன்யன் எனப் பல்வேறு விஷயங்கள் ஞாபகத்தில் வரும். அதேபோல் இங்கிருக்கும் உள்கட்டமைப்பு உலகத்தரம் வாய்ந்தது எனக் கேட்டிருப்போம். 400 வருடம்தான் இந்த நாட்டின் புதிய வரலாறு. மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு என்றாலும் மக்கள் தொகை மிகக் குறைவுதான். மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட இவர்களுக்குத் திட்டமிடுதலும் அதைச் செயல்படுத்துவதும் சற்று எளிதாகத்தான் இருக்கும்.

பசுமையான மரங்கள்

நான் விடுமுறை கிடைக்கும்போதெல்லாம் பல்வேறு ஊர்களுக்குப் பயணப்பட்டிருந்தேன். அதுவும் அமெரிக்காவின் கிழக்கில் இருக்கும் பல்வேறு மாகாணங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டேன். இவர்களின் உள்கட்டமைப்பை நேராகப் பார்த்திருந்ததால், அனைத்து ஊர் ஆட்சியாளர்களும் மக்களும் இயற்கையைப் பாதுகாப்பதில் ஒரே மனநிலையோடு உள்ளார்கள் எனப் புரிந்துகொள்ள முடிந்தது. எந்த ஒரு நகர கட்டமைப்புக்காகவும் இவர்களின் நிலங்களை இயற்கைக்கு எதிராகச் சமமாக்குவதில்லை. நிலங்களை அவற்றின் போக்கில் அப்படியே விட்டுவிட்டுச் சாலைகளையும் கட்டடங்களையும் நிறுவ, மழைநீரும் ஆற்றில் கலந்து அதன் பின் மதகுகளின் பின்னால் மையம் கொள்கிறது.

இங்குள்ள சாலைகள் அனைத்தும் ஏதோ நேற்று போடப்பட்ட சாலைகளைப் போலவே இருக்கும். அதனால் பயணங்கள் மிகச் சௌகரியமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்குப் பேருந்தில் செல்வதால் வரும் அசதி, இங்கு 1,000 மைல்கள் பயணித்தாலும் வராது. இங்கு போக்குவரத்து விதிகளை மீறினால் கட்டும் அபராதப் பணத்துக்கு நம் ஊரில் ஓர் இரு சக்கர வாகனமே வாங்கிவிடலாம். எந்த ஊர் போனாலும் தரமாக இருக்கும் சாலைகளைப் பார்த்து அசந்து போயிருந்தாலும், அதைவிடச் சாலைகளின் இரு பக்கங்களிலும் உள்ள மரங்களே என்னை மிகவும் கவர்ந்திருந்தன.

மரங்கள்

அதுவும் நான் வசிக்கும் அட்லாண்டாவோ கொள்ளை அழகு; வர்ணிக்க வார்த்தை போதாது. இங்கு மலைகள் மிகக் குறைவுதான். நான் வசிக்கும் இடத்திலிருந்து சிறு தொலைவில் `ஸ்டோன் மவுன்டைன்’ என்றொரு மலை உள்ளது. அதைப் பார்க்க திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர் கோயில் உள்ள மலை போல இருக்கும். அதன் மேல் போகப் பழனிமலை போலக் கம்பி வண்டி வசதி உண்டு. விருப்பப்பட்டால் நடைப்பயணமாகப் போகலாம். முதன்முறை நடந்தே மலையேறினோம். மலை மேலே போகும் வரை பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற உறுதியோடு நடந்தோம். கடினமாக இருந்தாலும் எப்படியோ ஏறிவிட்டோம். மலை மீது சில்லென்று அடித்த தென்றல் காற்று பட்டதும் சற்று இதமாக இருந்தது. அதைவிட நான் அங்கிருந்து கண்ட காட்சி இன்றுவரை என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அங்கிருந்து பார்த்தபோது, மிக நீண்ட தொலைவில் அட்லாண்டா நகரத்தின் வானுயரக் கட்டடங்கள் சில கண்ணுக்குத் தெரிந்தன. அதைத் தவிர மீதமுள்ள மொத்த ஊரும் பச்சை வண்ணப் போர்வை போர்த்தியது போலவே இருந்தது. ஏதோ அங்குள்ள மரங்கள் மொத்த ஊரையும் விழுங்கியதுபோல இருந்தன.

பச்சை மரங்களைப் பார்த்து மனம் பரவசப்பட்டாலும், சிறு மூளை மட்டும் தன்னைத் தானே ஒரு கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தது. அது எப்படி எல்லா இடமும் பச்சைப்பசேலென என அடர்த்தியான மரங்கள் நிறைந்திருக்கின்றன? அப்போது ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது. நான் அடிக்கடி நண்பர்களோடு காட்டுக்குள் சென்று மலையேற்றம் செல்வது வாடிக்கை. ஒருமுறை அப்படிச் செல்லும்போது அந்த ஊர்க்காரர் ஒருவரிடம், இங்கு எப்படிக் காடுகள் அடர்த்தியாக இருக்கின்றன எனக் கேட்க, அவர் சொன்னது, “இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது இங்குள்ள மக்களுக்கு வேலை வேண்டுமென்பதற்காக மாகாணம் முழுவதும் மரம் நட்டார்கள்” என்றார். முதலில் மரம் எப்படி வந்தது என்பதற்குப் பதில் கிடைத்துவிட்டது. ஆனால், எப்படி இதை இவ்வளவு சிறப்பாகப் பராமரிக்கிறார்கள் என்று மட்டும் அன்று விளங்கவில்லை.

பச்சைப் பசேல் மரங்கள்

இங்குள்ள பெரும்பாலான சாலைகளின் இருமருங்கிலும் நடைபாதை இருக்கும். அதையொட்டி நிழல் தரும் மரங்களும், அலங்காரச் செடிகளும் வைத்திருப்பார்கள். அந்தச் சாலைகளைப் பார்க்க ஊட்டி மலர் கண்காட்சிக்குச் சென்றது போல இருக்கும். கோடைக்காலம் ஆரம்பம் ஆனதால் அன்று நடைப்பயிற்சி சென்றிருந்தேன். அப்போது சில இடங்களில் புதியதாக டுலிப் பூச்செடிகளை நட்டுக்கொண்டிருந்தார்கள். அவற்றின் அருகில் காய்ந்த மரத்தின் சில்லுகளைக் கொட்டி வைத்திருந்தார்கள். இதை நம் ஊரில் மரப் பட்டறைகளில் பார்த்திருப்போம். சில்லுகளை அங்கு எதற்குக் கொட்டி வைத்துள்ளார்கள் என முதலில் புரியவில்லை.

சிறிது தூரம் போன பின் ஓரிடத்தில் ஏற்கெனவே பூச்செடிகளை நட்டு முடித்திருந்தார்கள். அவற்றை அருகில் சென்று பார்த்தேன். நம் ஊரில் வழக்கமாகச் செடியை நட்டுவிட்டு மண்ணை மலை போலக் குவிப்பார்கள் அதைச் சுற்றித் தண்ணீர் ஊற்றுவார்கள். பார்க்கக் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியைப் போல இருக்கும். இவர்களோ செடியை நட்ட பின் தரையைச் சமப்படுத்தி அதன் மீது மரச்சில்லைப் போட்டுத் தண்ணீரைத் தெளித்திருந்தார்கள். இந்த முறையில்தான் எல்லாச் செடிகளையும் நடுவார்கள் என உறுதிப்படுத்த அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் உள்ள காய்ந்த சருகுகளைச் சற்றுத் தள்ளி விட்டுப் பார்த்தேன். அட, ஆமாம், அங்கும் அதே போல மரச் சில்லுகளைச் சிதற விட்டிருந்தார்கள்.

Note: மரத்தின் அடிப்பகுதியை இலை தழைகளைக் கொண்டோ அல்லது வேறு உயிரி பொருட்களைக் கொண்டோ மூடி வைப்பதற்க்குத்தான் மூடாக்கு எனப்பெயர்.

மூடாக்கு

குளிர், கோடையாக மாறும்போதுதான் இலை இல்லாத அந்த செடிகளுக்குக் கீழே உள்ள அறிவியல் ஆச்சர்யத்தைக் காண முடிந்தது. இதை எங்கோ படித்தோமே என யோசிக்க, ஆம், ஒரு முறை நம்மாழ்வார் எழுதிய `உழவுக்கும் உண்டு வரலாறு’ புத்தகம் படித்தபோது, அவர் ஜப்பான் நாட்டின் இயற்கை விஞ்ஞானி மசனோபு புக்குவோக்காவின் வேளாண்மை முறையை விளக்கி இருந்தார். மசனோபு புக்குவோக்கா, நெல்லை அறுவடை செய்த பின் வைக்கோல்களை நிலத்தில் அப்படியே பரப்பிவிடுவாராம். அது மகசூலை அதிகமாக்கும், இதை அவர் இந்தியாவிலிருந்துதான் கற்றிருந்ததாகவும் கூறி இருந்தார்.

அதன்பின் வேறு என்ன நன்மைகள் இருக்கின்றன என்று சற்று ஆராய்ந்து அறிந்ததில்…

– மரச்சில்லுகள் (மூடாக்கு) கொட்டப்பட்ட இடத்தில் செடிகளுக்கு ஊற்றப்பட்ட தண்ணீர் அவ்வளவு சீக்கிரம் ஆவியாவதில்லை. மாதத்துக்குச் சிலமுறை தண்ணீர் விட்டாலே போதுமானதாக இருக்கும்.

– நம் ஊரில் களை பிடுங்குவதே பெரிய வேலையாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்த களைக்கொல்லி அடிக்க, அது புழுக்களைக் கொல்ல ஒரு பெரிய உணவுச் சங்கிலியே உடைந்துபோகிறது. ஆனால், இந்த மரச்சில்லை மீறிக் களை முளைப்பது சற்று அபூர்வம்தான்.

மூடாக்கு

இங்கு மனிதன் கால்படாத வெறும் தரைப்பகுதி மிகக் குறைவாகத்தான் இருக்கும். அப்படி ஓர் இடத்தைத் தேடக் கொஞ்சம் தரையைச் சுரண்டிப் பார்த்தால் அது மிகவும் கடினமாக இருக்கும். அதையே இதற்கு முன்னால் நடப்பட்ட மரங்களின் அருகில் உள்ள இடத்தைக் கிளற, அரிசிப் பொரியை அள்ளுவது போல அவ்வளவு இலகுவாக இருந்தது. தோண்டத் தோண்ட, ஒவ்வொரு வருடமும் கொட்டிய பழைய மரத்துகள்களும் மரணித்து மாசில்லா மக்கிய உரமாக மருவியிருந்தன. அவை என் கண்ணுக்குக் கறுப்பு வைரமாகவே காட்சி அளித்தன.

சில இடங்களில் நடைபாதையில் மரச் சில்லுகளைக் கொட்டியிருப்பார்கள். அவற்றின் மீது நடக்கும்போது பூக்களின் மீது நடக்கும் ஒரு சுகத்தை உணரலாம். புதியதாகக் கொட்டப்பட்ட அந்த மரச் சில்லுக்களின் வாசமும், அழகோடு சேர்ந்த அறிவியலும் என்னைப் பேரின்பம் அடைய வைத்தன. நம் ஊரிலும் இவை வெவ்வேறு வடிவங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. இந்த முறையைப் பரவலாக்கினால் நம் நாட்டையும் பசுமையாக்கலாம்.

– அய்யப்பன் அன்பழகன் விஜயா

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.