பெரியாரின் 142-வது பிறந்ததினப் பகிர்வுகள், தமிழக முன்னேற்றத்துக்கும் பெண்களின் முன்னேற்றத்துக்கும் அவர் ஆற்றிய அரும் பணிகளையும், எழுப்பிய அஸ்திவாரங்களையும் நினைவுகூர வைக்கின்றன. குறிப்பாக, ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பெண் விடுதலைக்காக பெரியார் முன்னெடுத்த முயற்சிகள் பல.

பெண்களுக்குக் கல்வியறிவு, பெண்ணடிமைச் சிந்தனைகளுக்கு எதிரான குரல், குழந்தைத் திருமணங்களிலிருந்து சிறுமிகளை மீட்டது, தேவதாசி முறை ஒழிப்பு, உடன்கட்டை மறுப்பு, கைம்பெண் மறுமணம் என அந்தக் காலகட்டத்திலேயே பெரியார் பற்றவைத்த நெருப்பின் வெளிச்சத்தில்தான், நம் முன் தலைமுறைப் பெண்கள் முன்னேற்ற திசையில் நடக்கத் தொடங்கினர். நாமும், அந்த ஆதிப்புள்ளி நீளும் திசையிலேயே நடந்துகொண்டிருக்கிறோம்.

பெரியார் பெண்களின் முன்னேற்றத்துக்குச் செய்துள்ள பங்களிப்பை பற்றி, தமிழகத்தின் இரண்டு பெண் அரசியல் ஆளுமைகள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

வானதி சீனிவாசன், பா.ஜ.க துணைத் தலைவர்

வானதி சீனிவாசன்

“பெண் விடுதலையைப் பற்றியும் பெண் சுதந்திரத்தைப் பற்றியும் பல சமூகப் பெரியவர்கள் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கின்றனர். நான் அரசியலுக்கு வந்ததற்கு மிக முக்கியக் காரணம் பாரதியாரும் சுவாமி விவேகானந்தரும்தான். வேறொரு தளத்தில் பெண் விடுதலையைப் பேசக்கூடிய தலைவராக, சமுதாய சீர்திருத்தவாதியாகப் பெரியார் இருந்திருக்கிறார். அவருடைய சமூக சீர்திருத்தக் கருத்துகளை பொறுத்தமட்டில் அது தீண்டாமையாகட்டும், பெண் கல்வி, பெண் விடுதலையாகட்டும்… அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தே இல்லை. அதில் பெரியாரின் பங்களிப்பு தமிழகத்தில் மிகப்பெரிய பங்களிப்பு.

ஆனால், அவருடைய கடவுள் எதிர்ப்புக் கொள்கையில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது. தமிழ்மொழி பற்றி அவர் பேசிய விஷயங்களில் மாற்றுக் கருத்து இருக்கிறது. சமுதாய மாற்றம் எப்படி நிகழ வேண்டும் என்று அவர் சொன்ன வழிமுறைகளில் மாற்றுக் கருத்து இருக்கிறது. என்றாலும், அவர் முன்மொழிந்த மற்ற சமுதாய சீர்திருத்தக் கருத்துகளில் நாங்கள் உடன்படுகிறோம். பெரியாரின் பெண் விடுதலை குறித்துப் பேசும்போது, இன்னொரு விஷயத்தையும் பேச வேண்டும். பெரியார் மட்டும்தான் பெண் விடுதலை பற்றிப் பேசினார் என்பது போன்ற பிம்பம் தமிழகத்தில் கட்டமைக்கப்படுகிறது. பெரியார் மட்டுமல்லாது, பெண் விடுதலைக்காகப் பேசிய தலைவர்கள் பலர் இருக்கிறார்கள்.

ராஜாராம் மோகன்ராய், நாடு முழுவதும் பெண்களைத் தீக்கிரையாக்கிய சதிக்கு எதிராகப் போராடிய மிகப்பெரிய ஆளுமை. அதேபோல, பாரதியார் பேசாத பெண் விடுதலை இல்லை. இன்றைக்கு அவரை நினைக்காத பெண் ஆளுமைகள் இல்லை. `ஒரு பறவையின் சிறகு எப்படி இருபுறமும் சமமாக இருக்குமோ அதேபோல ஆணும் பெண்ணும் சமமாக இருந்தால்தான் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும்’ என்றார் சுவாமி விவேகானந்தர். இப்படி பெண் விடுதலை, பெண் சுதந்திரம், பெண்களின் அடிமைத்தனத்துக்கு எதிரான முயற்சிகள் காலங்காலமாகப் பல்வேறு சமுதாயப் பெரியவர்களாலும், அரசியல் தலைவர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அந்த விதத்தில் பெரியாரும் ஒரு முன்னோடியாகப் பெண்கள் முன்னேற்றத்துக்கு அவருடைய பங்களிப்பை செய்துள்ளார்!”

பாலபாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இந்தியப் பொதுவுடமை கட்சி

பாலபாரதி

“பெரியாரின் சித்தாந்தம், வர்ணாசிரம சித்தாந்தம் இரண்டும்தான் இன்றைக்கு நேருக்கு நேராக சமர் புரிகின்றன. இந்தியாவிலும், தமிழகத்திலும் பெண்கள் உரிமைக்காகப் பெரியார் தனது இறுதிநாள்வரை போராடினார். அவர் வலியுறுத்திய பெண் உரிமைதான் இன்றைக்கு இந்தியாவில் பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் கிடைப்பதற்கான அடித்தளமாக இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட, பல பெண்கள் அதிகார நிலையை அடைய பெரியாரின் போராட்டம் ஒரு காரணமாக இருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் ஆன்மிகம், நாத்திகம் இருக்கும். அது வேறு விஷயம். ஆனால் நம் வீடுகளில் இன்று பெண் குழந்தைகள் கல்வி கற்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள் என இப்படி பெண் இனம் அடைந்துள்ள ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் காரணம் பெரியார். அவர் முன்னெடுத்தது அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக முன்னேற்றப் போராட்டம்” என்றவர், இன்று முகநூலில் தான் பதிவுசெய்திருந்த பெரியார் பிறந்தநாள் பதிவை நம்மிடம் பகிர்ந்தார்.

“உங்கள் வீட்டில் உங்கள் மகள் கல்வி கற்கிறாரா…

உங்கள் மனைவி வேலைக்குப் போகிறாரா…

18 வயதுக்கு மேல்தான் சகோதரிக்குத் திருமணம் செய்து வைத்தீர்களா…

தந்தையார் இறந்த பிறகு தாயின் உழைப்பிலேதான் வளர்ந்தீர்களா…

என்ன ஆச்சர்யம்? உங்கள் நாட்டில் பெண் நிதி அமைச்சரும் உள்ளாரா?

அப்படியானால் பெரியார் எப்படி சிலையாக இருப்பார்?

அவர் என்றென்றும் உயிரோடுதான் இருப்பார்!”

பாலபாரதி முகநூல் பதிவு

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.