” ‘புதிய பாதை’ உங்களுக்கு பெரிய பாதையை உருவாக்கித்தந்தது. என் பார்வையில் ரஜினி, விஜயகாந்த்போல வந்திருக்கவேண்டியவர் நீங்கள். எங்கே தவறவிட்டீர்கள். அல்லது நீங்களே அந்தப் பாதை வேண்டாம் என முடிவெடுத்தீர்களா?”

– ராகேஷ், சீர்காழி

பார்த்திபன்

”நான் எங்கே தவறவிட்டேன். நேற்று நடந்த டொரான்ட்டோ ஃபிலிம் ஃபெஸ்ட்டிவல்லகூட மூன்று விருது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்தபடம். எதை நாம குறிவைக்கிறோம்னுறது இருக்கு. எவ்ளோ கோடி கொடுத்தாலும் இந்த மாதிரி விருதுகள் வாங்கிடமுடியாது. ‘புதிய பாதை’ வந்தப்போ அடுத்த சூப்பர்ஸ்டார்னு சொன்னாங்க, புரட்சி நாயகன்னு டைட்டில்லாம் கொடுத்தாங்க. அந்த டைட்டில்லாம் வேணாங்க, பயமா இருக்குன்னு சொன்னேன். என்னோட விருப்பம்லாம் மம்முட்டி சார், மோகன்லால் சார் மாதிரி ரொம்ப யதார்த்தமான நடிப்போட யதார்த்தமான படங்கள் பண்ணணும்கிறதுதான். ஒரு ஸ்டார் வேல்யூ வந்ததும் பயம் வந்தது. இது நிலைக்குமான்னு தோணுச்சு.

அப்ப என்கிட்ட படம் பண்ண வரவங்க எல்லோருமே எல்லா ஒரு ஆக்‌ஷன் ஹீரோவா, அடிதடி விஷயங்களோடதான் வருவாங்க. எல்லாத்துலயும் கத்தி இருக்கும், துப்பாக்கி இருக்கும், அருவாள் இருக்கும். அப்பதான் நான் நாம போக வேண்டிய ரூட் இது இல்லைன்னு நினைச்சேன். உடனடியா மாத்தணும்னு வேற மாதிரி படங்கள் செலக்ட் பண்ணேன். மலையாள டைரக்டர்கூடலாம் படம் பண்ணலாம்னு ட்ரை பண்ணேன். அப்புறம் என்னோட பொருளாதார நிலை என்னை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கியிருக்கு. அதுக்குக் காரணம் நான் எடுத்த சொந்தப்படங்கள். அப்புறம் பர்சனல் லைஃப்ல ஏற்படுற பிரச்னைகள், அதை எதிர்கொள்ள முடியாம, தாங்கமுடியாம படுற அவஸ்தைகள். இதெல்லாமே தாமதங்கள். சபரிமலையில பெரியபாதைன்னு ஒண்ணு உண்டு. அது இல்லாமல் 7 கி.மீட்டர்ல போயும் சாமி கும்பிடலாம். இதுவரைக்கும் மூச்சு பிடிச்சிக்கிட்டு, தாங்கிகிட்டு இன்னமும் ஓடிட்டிருக்கேன். என்னுடைய பெயர் நிலைக்கும்படியா விருதுகள் வாங்கியருக்கேன். இதெல்லாம் கோடிகள் கொடுத்தாலும் கிடைக்குமான்னு தெரியல. உங்க கேள்வியே ஒரு விருது மாதிரிதான் நான் நினைக்கிறேன். உங்களோட அன்புக்கு நன்றி!”

”சோஷியல் மீடியாவில் விஜய் – அஜித், ரஹ்மான் – இளையராஜா என டெய்லி நடக்கும் சண்டைகளை எப்படிப்பார்க்குறீங்க?”

– விக்ரம், கும்பகோணம்

ஏ.ஆர்.ரஹ்மான் – இளையராஜா

“சோஷியல் மீடியா ஒரு அழகான தீபம் போன்றது. ‘நிழல் நிஜமாகின்றது’ன்ற படத்தில் கண்ணதாசன் ஒரு பாடல் எழுதியிருப்பார். “தீபத்தின் ஒளியில் திருக்குறள் படித்தால் அது தீபத்தின் பெருமையன்றோ… அந்த தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ…” – இந்தப் பாடல் மாதிரிதான் சோஷியல் மீடியா மூலமா நல்ல விஷயங்களைப் பகிரலாம். அல்லது மற்றவர்கள் பகிர்ற விஷயங்கள் பிடிக்கலைன்னா ஒதுங்கிக்கலாம். ஆனால், மிகமிக அதிகமான கெட்ட வார்த்தைகள், அருவருப்பான வார்த்தைகள்லலாம் திட்டுறது சரியில்ல. என்னுடைய கருத்துகள் எல்லாமே சரியா இருக்கணும்னு அவசியம் இல்லை.

‘இந்தி தெரியாது போடா’ன்னு போடும்போது அதை இந்தில எழுதினாதானே அவங்களுக்குப்புரியும்னு சொன்னேன். குண்டக்க மண்டக்க மாதிரி இதை நான் வேற ஒரு பார்வையில பார்க்குறேன். அதுக்குப் பின்னாடி எந்த அர்த்தமும் கிடையாது. உடனே அதுக்கு இவர் சங்கியாயிட்டார், சிங்கி ஆயிட்டார்ன்னு போடுறாங்க. விவாதிக்கிறது ரொம்ப அழகான விஷயம். என்னவெணா விவாதிக்கலாம். ஆனால் முகம் தெரியாதுன்றதுக்காக என்னவேணாலாம் பேசலாம்னு பேசக்கடாது. ரஹ்மான் சார், இளையராஜா சார் இவங்களோட ஒப்பிடும்போது நாம ஒண்ணுமே பண்ணி கிழிக்கல. அதுதான் உண்மை. என்னவேணாலும் பேசுறது ரொம்ப தப்பு. அதனால், என் அன்பு நண்பர்களுக்கு நான் திரும்பவும் சொல்றது இதுதான். எதிர்மறையான கருத்துகளைக்கூட அதுல பதிவு பண்ணுங்க. ஆனால் வார்த்தைகள்ல கவனமா இருங்க.”

” ‘இரவின் நிழல்’ படம் ஒன் ஷாட் ஃபிலிம்னு நீங்கள் சொல்லும்போதே ஆச்சர்யமா இருக்கு. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்னு சொல்லிட்டீங்க… வேற யார்லாம் படத்துல இருக்காங்க சார்?”

– லதா, மும்பை

பார்த்திபன்

” ‘இரவின் நிழல்’ பற்றி சொல்லும்போதே சந்தோஷமும், எதிர்பார்ப்பும், ஆச்சர்யமும் எனக்கும் தொக்கி நிக்கிது. எப்படி இதைப் பண்ணமுடியும்னு கேட்பாங்க. ரவிவர்மன் ஒளிப்பதிவு பண்ற அளவுக்கு அவ்ளோ பெரிய பட்ஜெட் படம் இது இல்ல. ‘பிரமாண்டமான படத்தை எடுக்கப்போறோம். ஆனால், பெரிய சம்பளம் கொடுக்கமுடியாது’ன்னு நான் ரவிவர்மன் அவர்கள்கிட்ட சொன்னப்போ, ‘பணத்தை விடுங்க சார்… படம் எப்படிப்பண்ணலாம்’னு அவர் ஓகே சொன்ன கதை. கிரண்னு ஒரு பியூட்டிஃபுள் ஆர்ட் டைரக்டர் கிடைச்சிருக்கார். இந்தப் படத்துக்கு உணர்தல் ரொம்ப ரொம்ப முக்கியம். தினந்தோறும் போய் லொக்கேஷன் பார்க்குறோம், செட்டைப் பார்க்குறோம்னு அவரோட ஈடுபாடு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது.

கிட்டத்தட்ட 300 பேர், 400 பேர் இந்தப் படத்துல வேலை செய்யப்போறாங்க. ஒரு அழகான பெயின்ட்டிங்கா இல்லாமல் பெயினை உணர்ற மாதிரி ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்வாருன்ற நம்பிக்கை எனக்கிருக்கு. இந்தப் படத்தை சிறப்பா பண்ணிடணும்னு ஆசையா இருக்கு. 30, 40 கலைஞர்கள் இருக்காங்க. சில பேர் ஸ்டார்ஸா இருப்பாங்க. சிலர் நல்லா நடிக்கத்தெரிஞ்ச நடிகர்களா இருப்பாங்க. எப்ப இந்த ஸ்கிரிப்ட் மேக்கிங் ஸ்டைலுக்கு வரும்னு தெரியல. விரைவில் நீங்க விரும்புற மாதிரி படம் வந்து சேரும். அதுக்குப் பின்னாடி மிகச்சிறந்த கலைஞர்கள் இருப்பாங்க. அவங்க இந்தப் படத்தை சிறந்த படைப்பா மாத்துவாங்கன்ற நம்பிக்கை எனக்கிருக்கு.”

”அதிமுகவை நடத்துறது எப்படின்னு ரொம்ப கஷ்டப்படுறாங்களே… EPS, OPS-னு ரெண்டு பேருக்கும் ஒரு ஐடியா சொல்லுங்களேன் வித்தகன் சார்?”

– ராகுல் சிவகுரு, முகப்பேர்

பார்த்திபன்

”ஓ ராகுல்ன்றதால இந்த மாதிரி கேள்வி கேக்குறீங்களா… காந்தியே இந்தத் தேசத்தை ஆண்டாக்கூட சில சில விஷயங்கள் மாத்த முடியாதோன்னு அச்சம் இருக்கு. 5 வருஷத்துக்கு ஒருமுறை ஆட்சிகள் மாறிக்கிட்டேதான் இருக்கு. ஆனால் மக்களோட நிலை அப்படியேத்தான் இருக்கு. இபிஎஸ் முதலைமைச்சர், ஒபிஎஸ் துணை முதலைச்சர்னு ஆட்சிக்கு வந்தப்பிறகு இந்த ஆட்சி நிலைக்காதுன்னு ஆருடம் சொன்னவங்க, ஏழுடம் சொன்னவங்க, எட்டுடம் சொன்னவங்க நிறையப்பேர். ஆனா, அதை மீறி இந்த கொரோனா டைம்லகூட அதை சிறப்பாதான் கையாண்டுட்டு இருக்காங்க. நான் எந்தக் கட்சி சார்புலயும் இல்ல. ஆட்சி நடத்துறதுக்குப் பின்னாடி ஐஏஸ், ஐபிஎஸ்ன்னு அதிகாரிகளோட பெரும்பங்கு இருக்கு. மிகப்பெரிய திட்டமிடல் இருக்கு.

அப்புறம் இந்தக் கேள்வியே சூர்யா மாதிரி நம்மளையும் மாட்டிவிட பிளான் போட்ட மாதிரி இருக்கு. சூர்யாவோட ஸ்டேட்மென்ட்ல அழுத்தம் திருத்தமா ஒரு விஷயம் சொல்றார். ‘நாம ஊருக்குள்ள போறதுக்குப் பயந்துகிட்டுதான் காணொலி மூலமாவே தீர்ப்பு சொல்றோம். ஆனா, பசங்களை மட்டும் பரிட்சை எழுதப்போங்கண்ணு சொல்றது எந்த வகையில் நியாயம்’னு ரொம்ப ஸ்ட்ராங்கா கேட்டிருக்கார். இது யார் மனசையும் புண்படுத்துற மாதிரியில்ல. இந்த விஷயத்தில் கட்சித் தலைமைகள்கூட ஸ்ட்ராங்கா பேசல. ஆனால், சூர்யாவோட அறிக்கை ரியாலிட்டியைப் பற்றி ஸ்ட்ராங்கா பேசுது. நிடுநிலையா இருக்குறதுனால சூர்யாவால பேசமுடியுது. உடனே, நீதிமன்றத்தை தவறாப் பேசிட்டார்னு நீதிமன்ற அவமதிப்பு வழக்குன்னு சிலர் சொன்னாங்க.

ஆனா, சந்துரு சார் உள்பட ஆறு நீதிபகள் சூர்யாவுக்கு சப்போர்ட் பண்ணாங்க. ஆனா, அதுலகூட சினிமாகாரங்க பேச்சை ஸ்ட்ராங்கா எடுத்துக்க வேண்டியதில்லைன்னு சொல்லியிருந்தாங்க. அதுல எனக்கு உடன்பாடு இல்லை. சினிமாக்காரங்களை மட்டும் ஏன் ஒதுக்கணும்? அண்ணா மாதிரி சினிமாக்கார்கள் பலபேர்தான் இங்க நிறைய விஷயங்கள் பண்ணியிருக்காங்க. எலெக்‌ஷன் வரப்போகுது. எலெக்‌ஷன்ல நம்மளோட திருப்தியை, அதிருப்தியை வெளிப்படுத்துவோம்.”

”அம்மா, மனைவி, மகள்… மூன்று பெண்களுக்கும் உள்ள ஒற்றுமை, வித்தியாசம் சொல்லுங்க?”

– நகுலன், திருச்சி

மகளுடன் பார்த்திபன்

”மழை, கடல், நதி எல்லாத்தையும் வேற வேற பேர்ல சொல்றோமே தவிர எல்லாமே நீர். இந்த நதிபோய் கடல்ல சேர்ந்து, அது நீராவியாகி மறுபடியும் மழையாகும். அதுமாதிரி இந்த மகள் மனைவியாகி, தாயாகிறாள். ஒரே விலையுயர்ந்த தங்கத்தில் செய்யப்பட்ட வெவ்வேறு ஆபரணங்கள். ஒண்ணு தாலியா இருக்கலாம், கம்மலா இருக்கலாம், இல்லைன்னா வளையலா இருக்கலாம். வளையல்னு சொல்றது மகள். அப்படியே மகள் கைபிடிச்சி நடக்கும்போது கிடைக்கிற சந்தோஷமே தனி. அப்படி ஆபரணங்கள் வேறயா இருந்தாகூட தங்கத்தோட வேல்யு ஒண்ணுதான். என்னுடைய மகளை நான் அம்மாவா பார்க்குறேன். மகள்களைப் பற்றி பேசினாலே என் கண் கலங்கும். அம்மாக்கு வயசாக, வயசாக மகள் மாதிரி பார்க்கவேண்டியிருக்கு. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்ற மாதிரி அம்மா நம்மளை எப்பவும் விட்டுக்கொடுக்கமாட்டாங்க.

சமீபத்துல ராம் கோபால் வர்மாவோட இன்டர்வியூ ஒண்ணு பார்த்தேன். அவர் மனைவிகிட்ட இருந்து பிரிஞ்சி வந்துட்டார். அப்ப தகப்பனைப்பற்றி தப்பா நிறைய சொல்லப்பட்டிருக்கும். ஏழு வருஷங்கள் கழிச்சி அவரோட மகளைப் பார்க்குறார். அப்ப ‘நீ எவ்வளவு கெட்டவனா என்னை நினைக்குறயோ, நான் அதைவிட கெட்டவன்’னு சொன்னேன்னு சொல்றார். கொஞ்சம் கொஞ்சமா என் மகளை என் ஃப்ரெண்டா மாத்திக்கிட்டேன்னு சொல்றார். இதுல மனைவி மட்டும்தான் வேற ஒரு Different body. அவங்க நமக்கு சமமானவங்க. கோபம், தாபம், காதல்னு எல்லாத்துக்கும் சமமான உரிமைகள் அவங்களுக்கும் உண்டு. எனக்கும் என்னுடைய மனைவிக்கும் சண்டை வரலாம். கோபத்தை வெளிப்படுத்தலாம். ஆனா, அம்மா நீ எப்படி என்கிட்ட கோபப்படலாம்னு சொல்லுவேன். என் மகள் என்ன தப்பு பண்ணாலும் நான் செல்லமாத்தான் இருப்பேன். கோபப்படமாட்டேன்.”

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

Also Read: குண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்… பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா? #AskParthiban

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.