இந்திய சினிமாவில் ஒரு பெண், இயக்குநராக உருவாகி மிளிர்வதற்கு ஒருஆணின் உழைப்பை விடவும் பலமடங்கு அதிகம் உழைக்க வேண்டி இருக்கிறது. இயக்கம் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் 99% பேர் ஆண்களாகவே இருப்பது தற்செயலான ஒன்று அல்ல. ஆனால் இப்படியான நிராகரிப்புகள் சினிமாவில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் உண்டுதான் என்றாலும் சினிமா ஜனரஞ்சகமான கலையாக இருப்பதாலும் மக்கள் தொடர்பு அதிகமுள்ள துறை என்பதாலும் இவ்விசயம் பளிச்செனத் தெரிகிறது.

image

சினிமாவில் பெண்கள் என்றால் அவர்கள் நடிகைகளாகவும், குரல் கலைஞர்களாகவும் மட்டுமே இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் இதனை பல இடங்களில் தகர்த்து தங்களை இயக்குநர்களாக, ஒளிப்பதிவாளர்களாக, டெக்னீசியன்ஸ்களாக நிலைநிறுத்திக் கொண்ட பெண்கள் பலர் இங்குண்டு. அப்படியே ஒரு பெண் தடைகளை உடைத்து இயக்குநராக முன்னேறினாலும் கூட ‘பெண்களுக்கு கிரியேட்டிவிட்டி இல்லை., கமர்ஸியல் சினிமாக்களை அவர்களால் கொடுக்க முடியாது’ போன்ற தட்டையான வாதங்கள் முன்வைக்கப்படும். இந்த வாதத்திற்கும் முற்றுப் புள்ளி வைப்பதுபோல களமிறங்கி அதிரடி பாய்ச்சல் காட்டிய சில சமகால பெண் இயக்குநர்கள் குறித்து பார்க்கலாம்.

ஹலிதா ஷமீம். இவரது சொந்த ஊர் தாராபுரம். பள்ளிப்படிப்பை கொடைக்கானலில் முடித்த இவர் கல்லூரிப் படிப்பை சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் முடித்தார். இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி, மிஸ்கின் ஆகியோரிடம் உதவி இயக்குநராக வேலை செய்த இவர் இயக்கிய ‘பூவரசம் பீப்பி’ திரைப்படம் 2014’ல் வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல பெயரை இப்படம் பெற்றாலும் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை இப்படம் அடையவில்லை. பிறகு ஐந்து ஆண்டு இடைவெளியில் ஹலிதா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சில்லு கருப்பட்டி’.

image

நான்கு வெவ்வேறு வயது மற்றும் வாழ்வியல் முறையைக் கொண்ட மனிதர்கள், அவர்களை அன்பால் இணைக்கும் ஒற்றை நூல். இதுதான் சில்லுக் கருப்பட்டி. இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றியைக் கொடுத்தது. ஒரு பேட்டியில் “ஏன் இவ்விரண்டு படங்களுக்கும் இடையில் இவ்வளவு பெரிய இடைவெளி” என கேட்டதற்கு, “படம் வெளியாவதை வைத்து நான் ஓய்வில் இருந்ததாக நினைக்க வேண்டாம். நான் தொடர்ந்து படங்களை இயக்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறேன். “பூவரசம் பீப்பீக்கு அடுத்து மின்மினி என்கிற படத்துடைய முதல் பாதியை எடுத்தேன். சில்லு கருப்பட்டி படம் எடுப்பதற்கு எனக்கு இரண்டு வருடங்கள் ஆனது. இந்தப் படத்தை வெளியே கொண்டு வருகிற இடைவேளையில் ‘ஏலே’ன்னு இன்னொரு படத்துடைய ஷுட்டிங்கையும் முடித்தேன்.” என்றார். மேலும் “எனக்கு சிறுவயது முதலே இயக்குநராகும் ஆசை இருந்தது. அதனால் வீட்டில் எந்தத் தடையும் சொல்லவில்லை. உதவி இயக்குநராக சேரத்தான் கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருந்தது. ஒரு பெண்ணை டீமில் சேர்க்க கொஞ்சம் யோசித்தார்கள். ஆனால் இப்போது அந்த நிலை தமிழ் சினிமாவில் கொஞ்சம் மாறி இருக்கிறது” என்றார். இவரது சில்லுக் கருப்பட்டி திரைப்படம் டொரண்டோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா, சென்னை சர்வதேச திரைப்படவிழா உள்பட பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. மேலும் இயக்குநர் ஹலிதாவிற்கு புதிய தலைமுறை சக்தி விருது வழங்கி கவுரவித்தது.

image

மதுமிதா இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “KD என்கிற கருப்புதுரை” வயதான முதியவர்களை கொலை செய்யும் தலைக் கூத்தல் முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கலகலப்பான ட்ராமா இப்படம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்திற்குமுன் வல்லமை தாராயோ, கொலகொலயா முந்திரிக்கா, மூனே மூனு வார்த்தை போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார் மதுமிதா., என்றாலும் கேடி என்கிற கருப்புதுரைதான் மதுமிதாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு அடையாளத்தைக் கொடுத்தது.

image

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட மதுமிதா இந்தோனேஷியாவில் வளர்ந்தார், பிறகு கல்லூரிப் படிப்பை சிங்கப்பூரில் முடித்த இவர் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். சிங்கப்பூரில் வசித்த காலத்தில் சில குறும்படங்களை இயக்கி கவனம் பெற்றார். பிபிசி நிறுவனம் மதுமிதாவிற்கு சிங்கப்பூர் மாணவர் விருது கொடுத்து கவுரவித்தது. கரீபியகடல் கொள்ளையர்கள் குறித்த ஆவணப்படமொன்றையும் இயக்கியிருக்கிறார் மதுமிதா. உலகம் சுற்றும் பறவையாக இருந்தாலும் தமிழ் சினிமாதான் தனது களம் என முடிவெடுத்த அவர் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக பணி செய்தார். சாயாசிங், பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் இவர் இயக்கிய முதல் திரைப்படமான வல்லமை தாராயோ தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றது. பல பெண் இயக்குநர்களை நோக்கி வீசப்படும் அதே விமர்சனம் மதுமிதா மீதும் எழுந்தது ‘இவருக்கு சினிமாவே எடுக்கத்தெரியாது’ என்றனர் பலர். இது குறித்து கேட்ட போது ‘‘விமர்சனங்கள் நம்மை பாதிக்காது என்று பொய் சொல்லவெல்லாம் முடியாது. ஆனால், அந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி வர வேண்டும். அந்த வேகம் எனக்குள் எப்போதும் உண்டு. இதை திமிர் என்று சொன்னாலும் சரி, ஆணவம் என்று சொன்னாலும் சரி, கொழுப்பு என்று சொன்னாலும் சரி… எனக்கு டைரக்சன் தெரியாமல் தமிழக அரசு விருது கொடுத்து விட மாட்டார்களே?” என்றார்.  எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் மதுமிதா இயக்கிய திரைப்படம் மூணே மூனு வார்த்தை. இப்படம் 2015ல் வெளியானது. தயாரிப்பாளர்  எஸ்.பி.பி.சரண் கேட்டுக் கொண்டதால் இப்படத்தை ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி அசத்தினார் மதுமிதா. மதுமிதாவின் திரைப்படங்கள் சில 21 நாடுகளில் திரையிடப்பட்டிருக்கிறது.

image

சுதா கொங்கரா., இவரது இயக்கத்தில் உருவாகி வெளியாகக் காத்திருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. சூர்யா தயாரித்து நடித்திருக்கும் இத்திரைப்படம் OTT தளத்தில் வெளியாக காத்திருக்கிறது. குறைந்த கட்டணத்தில் விமானப் பயண சேவை கொடுத்த ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்,தெலுங்கு,இந்தி,ஆங்கிலம் என மொழிகளின் எல்லை உடைத்து பல சினிமாக்களை சுதா இயக்கினார். ஸ்ரீகாந்த், விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து சுதா இயக்கிய திரைப்படம் துரோகி. இப்படம் 2010ஆம் ஆண்டு வெளியானது. சுதா கே பிரசாத் என்ற பெயரில் இப்படத்தை சுதா இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை ஆனால் ஆறு ஆண்டுகள் கழித்து தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்து வெளியான திரைப்படமான இறுதிச் சுற்று அதிரடி வெற்றியைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றி அடைந்தது. பெண் இயக்குநர்கள் கமர்சியல் படங்களை எடுக்க முடியாது என பேசியவர்களின் பிம்பம் சுக்குநூறாக நொறுங்கியது. இயக்குநர் மணிரத்னத்திடம் ஏழு ஆண்டுகள் உதவியாளராக இருந்த சுதா கொங்கரா இந்திப்படமான சாலா காதூர்ஸ் மூலம் திரையுலகத்திற்குள் நுழைந்தவர். சில இந்திய ஆங்கிலப் படங்களுக்கு திரைக்கதையும் எழுதி இருக்கிறார். தொடர் உழைப்பால் படிப்படியாக முன்னேறிய சுதா கொங்கராவின் சூரரைப் போற்று திரைப்படத்தை தற்போது இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

image

முதியவர்களை கொலை செய்யும் தலைக்கூத்தல் முறையை கதைக் கருவாக வைத்து கடந்த ஆண்டு ‘பாரம்’ என்ற சினிமா வெளியானது. தேசிய விருது பெற்ற இத்திரைப்படம் தலைக்கூத்தல் கொடுமையினை வட தமிழக மொழி வாசனையுடன் ஆழமாக பதிவு செய்தது. இப்படத்தை இயக்கியவர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி. பாரம் திரைப்பட இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி மாற்று சினிமா தளத்தை கையாள்வதில் ஆர்வமும் திறமையும் கொண்டவர். இவர் இயக்கத்தில் இந்தி மற்றும் மராத்தி மொழியில் வெளியான கங்கோபாய், பெர்சி ஆகிய படங்கள் முக்கியமானவை.

2007ஆம் ஆண்டு ஆர்யா, பூஜா நடிப்பில் ஓரம்போ திரைப்படம் வெளியானது இப்படத்தை இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் இயக்கினர். இவ்விருவரும் கணவன் மனைவிஆவர். உலகளவில் இரட்டை இயக்குனர்கள், இரட்டை வசனகர்த்தாக்கள், இரட்டை ஸ்டண்ட் மாஸ்டர்கள் என பலர் உண்டு ஆனால் ஆசிய அளவில் கணவன் மனைவியாக இணைந்து சினிமாக்களை இயக்கியவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி மட்டுமே.

image

உண்மையில் இது ஒரு ஆச்சர்யம், சாதாரணமாக குடும்பங்களில் கணவன் மனைவி அடிக்கடி தங்களது சுயமுடிவுகளில் பிடிவாதம் பிடித்து சண்டையிட்டுக் கொள்வதை பார்த்திருப்போம். அப்படி இருக்கும் போது ஒரு சினிமாவை கணவன் மனைவியாக இணைந்து இயக்குவதே சாதனைதான். அதிலும் இவ்விருவரும் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி வருவது இன்னுமே ஆச்சயம். ஓரம்போ திரைப்படத்திற்கு பிறகு 2010ஆம் ஆண்டு இவர்கள் இணைந்து இயக்கிய திரைப்படம் வா ‘குவாட்டர் கட்டிங்’. ஓரம்போ பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி சுமாரான வெற்றியை அடைந்தது. வா குவாட்டர் கட்டிங் வெளியாவதற்கு முன்பே விமர்சனங்களை சந்தித்தது. வெளியான பிறகும் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்றது. அதன் பிறகு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இப்படம் அதற்கு முன் இருந்த பல சினிமா டெம்ப்ளேட்களை அடித்து நொறுக்கியது. விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோர் இணைந்து நடித்த இத்திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைக் கொடுத்தது. இப்படத்தின் திரைக்கதை அமைப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இயல்பாகவே பெண்களுக்கு சிறந்த படைப்பாற்றலும், பல பணிகளை ஒரே நேரத்தில் கையாளக் கூடிய திறனும் உண்டு என்பது காயத்ரி புஷ்கரின் தீர்க்கமான நம்பிக்கை.

image

இப்படி சமகாலத்தில் இந்திய மற்றும் தமிழ் சினிமாவில் சாதித்த பெண் இயக்குநர்கள் குறித்து எவ்வளவோ பேசலாம் ஆனால் தித்திப்பாய் ஒரு தகவல். இந்திய சினிமா 80 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண் இயக்குநரை நமக்கு உருவாக்கிக் கொடுத்தது. அவர் பெயர் டி.பி.ராஜலக்ஷ்மி.

image

கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் திரைத்துறையில் முதல் பெண் இயக்குநராக அறிமுகமானவர் இவர். 1938ஆம் ஆண்டு டி.பி.ராஜலக்ஷ்மி இயக்கி நடித்த மிஸ்கமலா பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இவரே தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநர்., இயக்குநர் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி, முதல் பெண் தயாரிப்பாளர், முதல் பெண் கதாசிரியர் இப்படி பல முதன் முதல்களுக்கு சொந்தக்காரர் டி.பி.ராஜலட்சுமி. இவரே இந்திய சினிமாவில் பெண்களுக்கான முதல் ஒளிப்பந்தத்தை ஏந்தி நடந்தவர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.