இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி எனும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு அது.! கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு 11.30 மணிக்கு பெய்த பேய் மழை, கடுமையான நிலச்சரிவை உருவாக்கியது. இதில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 30 வீடுகள் மண்ணில் புதைந்து போனது. சம்பவத்தில் 11 பேர் அதிஷ்வசமாக உயிர்பிழைத்தாலும், குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என 70 பேர் மண்ணில் புதைந்து இறந்துபோயினர். ஆகஸ்ட் 7-ம் தேதி மதியம் முதல் ஒரு மாதத்தைக் கடந்து மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது.

பெட்டிமுடி

Also Read: மூணாறு: `சிதைந்துபோன உடல்கள்; டி.என்.ஏ பரிசோதனை’ – சர்ச்சையாகும் பூங்கா திறப்பு

கடுமையான மழை, குளிர் காற்று என ஆரம்பத்தில் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும், மீட்புக் குழுவினரின் தொடர் முயற்சியாலும், அதிநவீன மீட்புக் கருவிகள் உதவியாலும், இதுவரை 66 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் அருகே ஓடக்கூடிய நீரோடையில் உடல்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீரோடை செல்லும் வழித்தடத்தில் தேடுதல் பணி நடைபெற்றுவருகிறது. பூதக்குழி, ராஜமலை, கல்லாற்றங்கரை, மாங்குளம், பாண்டியாகுடி, சிக்கனம்பட்டி ஆகிய பகுதிகளில் மீட்புக் குழுவினர் உடல்களை தேடிவருகின்றனர். பெட்டிமுடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டருக்கு அப்பால், காஸ் சிலிண்டர் உட்பட வீட்டு உபயோகப் பொருள்கள் நீரோடையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பெட்டிமுடி

Also Read: மூணாறு: நீரோடையில் தேடும் பணி; குறுக்கிட்ட புலி! – அதிர்ச்சியில் மீட்புக்குழுவினர்

இதற்கிடையில், பெட்டிமுடி நிலச்சரிவு சம்பவம் குறித்து விசாரணை செய்ய, மூணாறு சிறப்பு தாசில்தார் பினுஜோசப் தலைமையில், 13 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தது இடுக்கி மாவட்ட நிர்வாகம். அக்குழு தங்களது விசாரணையை முடித்து இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசனிடம் சமீபத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

பெட்டிமுடி

“நிலச்சரிவு நடந்த 10 மணி நேரத்திற்கு பின்னரே, அப்படி ஒரு சம்பவம் நடந்தது குறித்து வெளியே தெரிந்தது. இறந்தவர்கள் உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில், அவர்கள், அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் தான் இறந்திருக்க வேண்டும் என தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த உடனே மீட்புப் பணிகள் நடந்திருந்தால், பலரது உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும். வீடுகளில் இருந்த நகை மற்றும் பணம் குறித்து சரியாக கணக்கெடுக்க முடியவில்லை. சுமார் 80 பவுன் அளவிற்கு நகைகள் இருந்திருக்கலாம். இதுவரை 2 பவுன் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரோடையில் மீட்புக் குழுவினர்.

Also Read: மூணாறு நிலச்சரிவு: `நீரோடையில் 12 உடல்கள்…’ – கைவிடப்படுகிறதா தேடுதல் பணி?

கண்டுபிடிக்கப்படாத 4 பேரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என தேவிகுளம் எம்.எல்.ஏ ராஜேந்திரன் கூறியிருந்தார். இடுக்கி மாவட்ட நிர்வாகமும் தொடர் மீட்புப் பணிகளைச் செய்துவருகிறது. இதற்கிடையில், சம்பவம் நடந்து ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், காணாமல் போன, தங்களது உறவினர்களின் முகத்தை ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும் என ஏக்கத்தில், காத்திருக்கின்றனர் பெட்டிமுடி மக்கள்.!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.