கேகேஆர் – சிறு வரலாறு!

மும்பை, சென்னை அணிகளுக்கு அடுத்து ஐபிஎல்-ன் டாப் பர்ஃபாமெர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பிரண்டன் மெக்கல்லத்தின் சென்சுரியோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல்-ன் முதல் போட்டியைத் துவக்கியபோது கிரிக்கெட் உலகமே அரண்டது. ஐபிஎல்-ன் பிரமாண்டத்தைக் கூட்டியது கொல்கத்தா. ஆனால், அடுத்தடுத்தப்போட்டிகளில் செளரவ் கங்குலி தலைமையிலான அணி தோல்விகளைச் சந்திக்க ஆறாவது இடத்தில் தொடரை முடித்தார்கள். அடுத்த ஆண்டு 8-ம் இடத்துக்குப்போனார்கள். இப்படி டேபிளின் அடிப்பகுதியிலேயே பின்தங்கியிருந்த அணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பிப்போய் சாம்பியன்ஷிப் கோப்பையை 2012-ல் வாங்கித்தந்தார் கெளதம் கம்பீர்.

ஆனால், அடுத்த ஆண்டே சரிவு, மீண்டும் எழுச்சி. 2014 – இரண்டாவது முறையாக கொல்கத்தாவை மீண்டும் சாம்பியன் ஆக்கினார் கம்பீர். கங்குலி, கம்பீர் எனக் கோபக்கார கேப்டன்கள் இருந்த அணிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தினேஷ் கார்த்திக் தலைமைத்தாங்கிவருகிறார். ரிக்கி பான்ட்டிங், ஜேக் காலிஸ் , ஷோயப் அக்தர், ஷேன் பாண்ட், பிரட் லீ, மேத்யுஸ், பிராட் ஹாக் , சுனில் நரைன், ஆண்ட்ரி ரசல் எனப் பல வெளிநாட்டு நட்சத்திரங்கள் கொல்கத்தா அணிக்காக ஆடியிருக்கிறார்கள், தற்போதும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். 2014-ல் கடைசியாக சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றவர்கள் அதன்பிறகு தொடர்ந்து 3 டு 5 இடங்களுக்குள்ளேயே ஐபிஎல்லை முடிக்கிறார்கள். மீண்டும் முதலிடம் பிடிக்கமுடியாமல் அவர்களைத் தடுப்பது எது?

Also Read: 2020-யில் ஈ சாலா கப் நம்தாகுமா?! – கோலிக்கும், பெங்களூருக்கும் என்னதான் பிரச்னை? #LEAGUEலீக்ஸ் – 1

பிரச்னை ஒன்று – பிரிவினைகள்

கடந்த ஆண்டு ஆண்ட்ரு ரஸலின் அதிரடியால் பல போட்டிகளை வென்றும் கொல்கத்தா அணி ப்ளே ஆஃபுக்குள் நுழைய முடியாததற்கு காரணம் அணிக்குள் நிலவிய பிரிவினைகள். தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்ஷிப்பை கேள்விக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் கடந்த ஆண்டு நடந்தன. தினேஷ் கார்த்திக்கும், ஆண்ட்ரு ரசலும் வெளிப்படையாகவே ஒருவரை ஒருவர் விமர்சித்துப்பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நல்ல ஃபார்மில் இருந்தும் பேட்டிங் ஆர்டரில் தன்னைத்தொடர்ந்து பின்வரிசையிலேயே இறக்கியதுதான் கார்த்திக் மீது ரஸலுக்கான கோபம். அந்தக் கோபத்தில் நிச்சயம் நியாயம் இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 14 போட்டிகளில் விளையாடி 510 ரன்கள் அடித்திருந்தார் ரஸல். ஸ்ட்ரைக் ரேட் 200-க்கும் மேல். அதேபோல் பெளலிங்கிலும் 11 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால், கார்த்திக், பேட்டிங் ஆர்டரில் ரஸலைத்தொடர்ந்து 5, 6, 7 என கீழே இறக்கிக்கொண்டேபோனது அணிக்குள் பல அதிர்வலைகளை உண்டாக்கியது.

Dinesh Karthik

இன்னொருபக்கம் கேப்டன்ஷிப் கேப்பைத் தட்டிப்பறிக்க ராபின் உத்தப்பா சில உள்ளடிகள் வேலை பார்க்க அதுவும் அணிக்கு சிக்கலை உண்டாக்கியது. ஆனால், தினேஷ் கார்த்திக்தான் கேப்டன் என்பதில் அணி நிர்வாகம் தெளிவாக இருக்க, 2020 கேப்டன்ஸியும் கார்த்திக்கிடமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ராபின் உத்தப்பா அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். இந்த ஆண்டு தினேஷ் கார்த்திக் தனது கேப்டன்ஷிப் திறமையை மட்டுமல்ல, விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக மிகப்பெரிய கம்பேக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவருக்கு இந்திய அணியின் கதவுகளும் திறக்கும்.

பிரச்னை இரண்டு – எல்லாமே இம்போர்ட்டட்!

கொல்கத்தாவின் முக்கிய பிரச்னைகளில் ஒன்று அந்த அணி முழுக்க முழுக்க வெளிநாட்டு வீரர்களை நம்பியிருப்பதுதான். கடந்த ஆண்டு ரஸல், நரேன், லின் என வெளிநாட்டுகளை ஸ்டார்களை நம்பியிருந்தார்கள். இந்த ஆண்டும் அதுதொடர்கிறது. லின் இந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இல்லை. ஆனால், அவருக்கு பதில் இந்த ஆண்டு இயான் மோர்கன் வந்திருக்கிறார். மற்றொரு இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேன்ட்டன் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இருக்கிறார் எனப் பல வெளிநாட்டு மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களே தவிர உள்ளூர் ஸ்டார்கள் அணிக்குள் இல்லை என்பது கொல்கத்தாவின் பெரும் பின்னடைவு.

KKR

பிரச்னை மூன்று – ஸ்பின்னர்கள் எங்கப்பா?!

கடந்த ஆண்டு குல்தீப் யாதவ் எனும் இந்தியாவின் டாப் ஸ்பின்னரை வைத்திருந்துமே சிக்கலில் தவித்தது கொல்கத்தா. விக்கெட்டுகள் எடுக்கமுடியாமல் திணறினார் குல்தீப். கடந்த ஆண்டு அணிக்குள் இருந்த லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவை சென்னைக்கு அனுப்பிவிட்டு, தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியை எடுத்திருக்கிறது கொல்கத்தா. லெக் ஸ்பின்னரான வருண் 2019 ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் 8.4 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர். ஆனால் பஞ்சாப் அணிக்கு அவர் பெரிய பங்களிப்பை அளிக்கவில்லை. இன்னொரு தமிழக வீரரான மணிமாறன் சித்தார்த்தும் கொல்கத்தா அணியில் இருக்கிறார். இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் இவர். ஆனால், 22 வயதேயான இவருக்கு பெரிய போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை. அரபு பிட்ச்களில் ஸ்பின்தான் எடுபடப்போகிறது எனும்போது தரமான ஸ்பின்னர்கள் கொல்கத்தாவில் இல்லை என்பது முக்கியப் பிரச்னை.

2020 சவால்கள்!

வெளிநாட்டு வீரர்களின் லைன் அப்!

இயான் மோர்கன், டாம் பேன்ட்டன், சுனில் நரேன், ஆண்ட்ரு ரஸல், லாக்கி ஃபர்குசன், பேட் கமின்ஸ் என மிகப்பெரிய ஸ்டார்களைக் கொண்ட அணியாக இருக்கிறது கொல்கத்தா. ஆனால், ப்ளேயிங் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்கள்தான் இருக்கமுடியும் என்பதால் யார் உள்ளே, யார் வெளியே என்பதைப் பொருத்துதான் வெற்றிகள் இருக்கும். இந்தத் தேர்வில்தான் தினேஷ் கார்த்திக்கின் திறமைகள் வெளிப்படும். ஆண்ட்ரு ரஸல் 1 டவுன் பேட்ஸ்மேனாக இறங்குவார் என இப்போதே பேட்டி கொடுத்துவிட்டார் பயிற்சியாளர்களில் ஒருவரான டேவிட் ஹஸ்ஸி. ஆனால், ரஸல் சமீபத்தில் நடந்துமுடிந்த சிபிஎல் போட்டிகளில் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை என்பதோடு, பல போட்டிகளில் பெளலிங்கும் போடவில்லை. சுனில் நரேனுக்கு சிறிய அறுவை சிகிச்சை நடந்ததால் சிபிஎல்-ன் கடைசிக்கட்டப் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அவர் கொல்கத்தா அணிக்குள் மீண்டும் ஃபிட்டாகி விளையாடினால் மட்டும் ஸ்பின் பிரச்னையை கொல்கத்தா சமாளிக்கும். கடந்த ஆண்டு ஏலத்தில் 15.5 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸின் தேர்வு அரபு பிட்ச்களுக்கு செட் ஆகுமா என்பது சந்தேகம்தான்.

KKR

பேட்டிங் ஆர்டர்!

கடந்த ஆண்டு கிறிஸ் லின் ஓப்பனிங் ஆடினார். இந்த ஆண்டு லின்னுக்கு பதிலாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் டாம் பேன்ட்டன் ஓப்பனிங் ஆடுவார் என எதிர்பார்க்கலாம். பேன்ட்டன், நித்திஷ் ரனா/ஷுப்மான் கில், ரஸல், மோர்கன், தினேஷ் கார்த்திக், சுனில் நரேன் என்பதுதான் ஆர்டராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ரஸல், மோர்கன், தினேஷ், நரேன் என மிடில் ஆர்டர் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. ஆனால், இவர்கள் அனைவரும் பர்ஃபார்ம் செய்யவேண்டும். இதில் தினேஷ் கார்த்திக்கைத் தவிர மற்ற நான்கு பேரும் இந்த லாக்டெளனிலும் பெரிய போட்டிகளில் விளையாடியவர்கள் என்பது கொல்கத்தாவுக்கு பலம்.

பெளலிங் பஞ்சாயத்து!

பெளலிங்தான் கொல்கத்தாவுக்கு பெரிய சவாலாக இருக்கும். நரேன், குல்தீப், வருண் சக்ரவர்த்தியைக் கொண்டுதான் ஸ்பின் ஏரியாவை சமாளிக்கவேண்டும். வேகப்பந்து வீச்சாளர்களைப் பொருத்தவரை உள்ளூர் வீரர்களான பிரசித் கிருஷ்ணா , கமலேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மவி மற்றும் சந்திப் வாரியர் என நான்கு பெளலர்களை பட்டைத்தீட்டிக்கொண்டிருக்கிறது கொல்கத்தா. வெளிநாட்டு கோட்டா பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கே போய்விடும் என்பதால் பேட் கம்மின்ஸ் பல போட்டிகளில் விளையாடுவது சந்தேகம். அதனால் உள்ளூர் வீரர்களைக்கொண்டுதான் வேகப்பந்து ஏரியாவை கொல்கத்தா சமாளிக்கவேண்டும்.

Dinesh Karthik

முழுக்க முழுக்க வெளிநாட்டு வீரர்களின் பலத்தை மட்டுமே நம்பி இந்த முறையும் களமிறங்குகிறது கொல்கத்தா. ரஸல், நரேன், பான்ட்டன், மோர்கன் என இவர்கள் நால்வரையும் தினேஷ் கார்த்திக் எப்படிப் பயன்படுத்தப்போகிறார் என்பதில்தான் கொல்கத்தாவின் பயணம் இருக்கும். இதற்கிடையே இந்த ஆண்டும் கரீபியன் லீகில் தன்னுடைய டிரினிடாட் நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன்ஷிப்பை வென்றிருப்பதில் ஷாருக்கான் செம ஹேப்பி. அந்த வெற்றி சூட்சுமத்தை பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் ஐபிஎல் தொடருக்கும் கொண்டுவந்தால் கொல்கத்தா ரசிகர்களும் மகிழ்வார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.