இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நீண்ட நாள்களாகவே எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த மே மாதத் தொடக்கத்தில் லடாக்கிலுள்ள இந்தியப் பகுதிகளான பாங்காங் ஏரியை ஓட்டிய பகுதியில் ஒரு சாலைப் பணியையும், கல்வான் பகுதியில் ஒரு சாலைப் பணியையும் தொடங்கியிருந்தது இந்தியா. இந்த சாலைப் பணியை எதிர்த்த சீனா, எல்லையில் ராணுவப் படைகளை மே 5, 6-ம் தேதிகளில் குவித்தது. அதைத் தொடர்ந்து இந்திய-சீனா எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவியது.

இந்தியா – சீனா மோதல்

மே மாத தொடக்கத்தில் இரு நாட்டு வீரர்களுக்கிடையேயும் கைகலப்பு ஏற்பட, ஜூன் மாதத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் வரை சென்றது. ஜூன் 15, 16-ம் தேதிகளில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் வீர மரணமடைந்துவிட்டனர் என்றும், பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை காரணமாகப் படுகாயமடைந்திருந்த 17 இந்திய வீரர்களும் உயிரிழந்துவிட்டனர் என்றும் இந்திய ராணுவம் செய்தி வெளியிட்டது. சீன ராணுவம் தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது. எனினும், அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இதனால் இரு நாடுகளுக்கிடையே அசாதாரணமான சூழல் நிலவியது. அதன் பின்னர் அமைச்சர்கள் மட்டத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் பலகட்ட பேச்சுவாரத்தைகள் தொடர்ந்து நடந்து வந்தது. இந்தியா சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இருநாடுகள் இடையே உள்ள பிரச்னையை சுமூகமாக தீர்த்து கொள்ள பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தது.

காஷ்மீர் லடாக் பகுதியில் சீனா மீண்டும் ஊடுருவல்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். எனினும் இந்தியா சீனா ஆகிய இருநாடுகளும் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இதனிடையே இந்தியா சீனா ஆகிய இருநாடுகளுடனும் தொடர்ந்து நட்புடன் பழகி வரும் ரஷ்யா, இந்த பதற்றத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

Also Read: India-China Faceoff: `மே மாதத்திலிருந்தே மிக மோசமான நிலைமைதான்..!’ – எல்லையில் என்ன நடக்கிறது?

இந்த நிலையில் தான் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் தொடங்கியது. கடந்த 4-ம் தேதி மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன ராணுவ அமைச்சரிடம், எல்லையில் சீன படைகளின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, படைகளை பின்வாங்கி பதற்றத்தை குறைக்க இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டு கொண்டார். ஆனால், அதன் பின்னரும் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. இந்திய பகுதியில், வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, இந்திய ராணுவம் மீது பழிசுமத்துவதாக இந்தியா ராணுவம் தெரிவித்தது.

இந்தியா-சீனா

இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “மே மாதத்திலிருந்தே எல்லையில் நீடித்துவரும் மிக மோசமான நிலைமையை நான் கவனித்துவருகிறேன். வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு முன்னர் விட்டுச் செல்லப்பட்ட பிரச்னைகள் தொடர்ந்துகொண்டிருப்பதால்தான் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

இந்தநிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாஸ்கோ சென்றார். ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ரிக்’ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் நடத்தினார். இதில் இந்தியா சீனா இடையே நிலவும் சிக்கல் குறித்து பேசப்பட்டது.

இந்தியா, ரஷ்யா, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள்

இந்த கூட்டத்துக்கு பின்னர் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது, அதில், எல்லையில் நிலவும் பிரச்னையை தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் மரபுகளின் அடிப்படியில் எல்லைப் பிரச்னையை தீர்க்க 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் தற்போது நிலவும் பதற்றமான சூழல் இரு நாட்டுக்கும் உகந்தது இல்லை என இரு நாடுகள் புரிந்து கொண்டுள்ளதாகவும் பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.