இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து எம்.பியாகத் தேர்தெடுக்கப்பட்டிருப்பவருமான சி.வி. விக்னேஸ்வரன் கடந்த சில நாள்களாக சிங்கள அரசியல் தலைவர்களால் கடுமையான மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகிறார். தனது நாடாளுமன்ற அறிமுக உரையில், இலங்கை நாடானது தமிழர் பூமி எனவும், இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் எனவும் தமிழ் மொழி இந்த நாட்டின் பிரதான மொழி எனவும் பேசியதே சிங்களத் தலைவர்களின் இத்தகைய கோபத்துக்குக் காரணம். இதில், கொடுமையான விஷயம் என்னவென்றால் விக்னேஸ்வரனின் கருத்துக்கு ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன எம்.பிக்களை விட முதலில் கடுமையான எதிர்வினையாற்றியது தமிழர்களின் ஆதரவினால் இன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள்தான்.

சஜித் பிரேமதாசா

“விக்னேஸ்வரனின் இந்தக் கருத்துகள் இலங்கை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் பதிவாகக் கூடாது’’ என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்தார். அடுத்ததாக,“சிங்கள மக்களைக் குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை விக்னேஸ்வரன் சந்திக்க நேரிடும்” என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்தார். இதைவிட ஒருபடி மேலே போய் இலங்கையின் தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச,“விக்னேஸ்வரன் எம்.பி, தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையெனில் நாடாளுமன்றத்தில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி அடிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்தது மிகவும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

முன்னாள் நீதிபதிக்கே இந்தநிலை என்றால் சாதாரண மக்கள் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டி வருமோ என இப்போதே அங்குள்ள ஜனநாயக சக்திகள் அச்சம் தெரிவிக்கின்றனர். வழக்கமாக சிங்களர்கள் அதிகமாக வாழும் தென்னிலங்கையில் மட்டும்தான் சிங்கள அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறும். ஆனால், இந்தமுறை தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கிலும் கணிசமான சிங்கள ஆதரவுக் கட்சிகள் பெற்றிருப்பதே இத்தகைய மிரட்டல்களுக்குக் காரணம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

விக்னேஸ்வரன் மீதான, இந்தத் தாக்குதல் அவரின் நாடாளுமன்ற உரைக்குப் பின்பாக உருவானது அல்ல. தேர்தல் பிரசாரக் காலங்களிலேயே, அவரின் வீட்டில், சி.ஐ.டி.விசாரணை நடத்தப்பட்டது.

விக்னேஸ்வரன்

அதுகுறித்து அப்போது பேசிய விக்னேஸ்வரன்,“இந்த நாட்டின் மூத்தகுடிகள் தமிழர்கள்தான் என்பதையும் அந்த வரலாற்றைப் பிழையாக சிங்கள மக்களுக்குச் சொல்லி வருகிறார்கள் என கடந்தாண்டு செப்டம்பரில் எழுதப்பட்ட என்னுடைய கேள்வி பதில் ஒன்றில் கூறினேன். அதைப் பற்றி விசாரிக்கத்தான் வந்தார்கள். `அந்தக் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?’ என விசாரித்தார்கள். `உறுதியாகவே இருக்கிறேன்’ என்று பதில் அளித்து, அதுகுறித்த ஆவணத்தின் பிரதியை நானே அவர்களிடம் கையளித்துள்ளேன். சிங்கள சகோதரர் மனங்களில் இதுபற்றிய ஆராய்வுகள் அவசியம் என்றிருந்தேன். நான் வீசிய கல் குளத்து நீரில் குளறுபடி நிலையை ஏற்படுத்தியுள்ளது; பார்ப்போம்” என பதிலளித்திருந்தார்.

அவர் நாடாளுமன்றத்தின் உயரத்தில் நின்றுகொண்டு தற்போது கல்லை வீசியிருப்பதால், அது நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. அதேவேளை விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக தமிழ்த் தலைவர்கள் மட்டுமல்லாது சிங்களத் தலைவர்களும் களத்தில் குதித்துள்ளனர். “நாடாளுமன்றத்தின் ஹன்சார்ட்டில் இருந்து விக்னேஸ்வரனின் உரையை நீக்க வேண்டும்” என சபாநாயகருக்கு சிங்கள எம்.பிக்கள் கோரிக்கை வைத்ததற்கு, இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சரும், விக்னேஸ்வரனின் சம்மந்தியுமான வசுதேவ நாணயக்கார எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்துப் பேசும்போது, “நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் மக்களின் பூர்வீகம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. அதனை தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதனை நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. சபாநாயகரும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் நாடாளுமன்ற ஹன்சாட் அறிக்கையில் பதிவாகி இருக்கிறது. அதனை அதிலிருந்து நீங்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களது நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கும் உரிமை இருக்கிறது. அதனடிப்படையிலே சபாநாயகர் அவர் தெரிவித்த கருத்துக்களை மறுக்கவில்லை. அத்துடன் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு அனைவரும் இணங்கவேண்டும் என்றில்லை” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வசுதேவ நாணயக்கார

விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உரை தொடர்பான புகைச்சல் அடங்குவதற்குள்ளாக, “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டதாலேயே அவர்கள் ஆயுதமேந்திப் போரிடத் தூண்டப்பட்டனர். அதற்கு இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே காரணம்” என சிங்கள ஊடகம் ஒன்றுக்கு விக்னேஸ்வரன் அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் அடுத்த சர்ச்சையாகியிருக்கிறது.

விக்னேஸ்வரனின் இந்தக் கருத்து இலங்கை அரசை கடுமையாகக் கொதிப்படைய வைத்துள்ளது. இதுகுறித்து. அமைச்சர் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டனர்.

Also Read: Money… Money… Money; வசூல் முதல் கொலை வரை..! – ஆன்லைனில் டீல் செய்த இலங்கை தாதா

அதில், ”தமிழீழ விடுதலைப்புலிகள் சிங்கள மக்களை மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் மக்களையும் படுகொலை செய்தவர்கள். சிரேஷ்ட தமிழ் அரசியல் தலைவர்களையும் அவர்கள் சுட்டுப் படுகொலை செய்தவர்கள். நாட்டின் வளங்களை நாசப்படுத்தியவர்கள். நாட்டுக்கு வருவாயை ஈட்டித்தரும் பொருளாதார மையங்களை அழித்தவர்கள். இப்படிப்பட்ட புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?

புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்றபடியால்தான் பல நாடுகள் அந்த அமைப்பைத் தடை செய்தன. தமிழீழக் கனவுடன் – தனிநாட்டுக் கனவுடன் இந்த நாட்டை நாசமாக்கிய புலிகள் இறுதியில் முள்ளிவாய்க்காலில் கூண்டோடு அழிந்தார்கள்.

கண்ணீரில் மிதந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் மண் பயங்கரவாதிகள் அழிந்த மண். அந்த மண்ணில் சத்தியப் பிரமாணம் செய்த விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமாரும் தமது செயலை இப்போது நியாயப்படுத்துகிறார்கள். அதேவேளை, கடந்த நல்லாட்சியில் முள்ளிவாய்க்கால் சென்று பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து விளக்கேற்றிய சம்பந்தனும் பொதுத்தேர்தல் மேடைகளில் புலிகளின் பயங்கரவாதப் போராட்டத்தை நியாயப்படுத்தி உரையாற்றியிருந்தார்.

இம்மூவரும் 9-வது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் மூவரும் திருந்துவதாக இல்லை. அதியுயர் சபையிலும் புலிகளின் பாணியில் செயற்படுகிறார்கள். இவர்கள் மூவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைப்பதுதான் ஒரே வழி” என்று கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துப் பேசும் ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன், “இன்று சிங்கள தேசத்தில் எழுந்திருக்கும் எதிர்ப்புகள் என்பது தனியான விக்னேஸ்வரனுக்கு எதிரானவை அல்ல. அது ஒட்டுமொத்த ஈழ தேசத்துக்கும், அதன் மக்களுக்கும் எதிரான வன்மங்கள். ஈழத்தின் பூர்வீகம் மற்றும் தொன்மை குறித்து ஈழத்துக்கு வெளியே பேசப்பட்ட அளவுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசப்படவில்லை. அப்படி பேசுவதுகூட சிங்களவர்களை நோகடிக்கும் என்றே எம் தலைவர்கள் கருதினார்கள். ஆனால், அதுவே எங்களின் தொன்மையை குழிதோண்டி ஒழிக்கவும், நம் பூர்வீகத்தை இல்லாது செய்யவும் சிங்கள இனவாதிகளுக்கு துணிச்சலையும் வாய்ப்பையும் கொடுத்தது. ஈழம் என்ற சொல் இலங்கை அரசால்கூட அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. பாடப் புத்தகங்களிலும் இலங்கை தேசிய கீத தமிழ் மொழிபெயர்ப்பிலும்கூட உண்டு. அந்த சொல்லைக் கேட்டால்கூட இன்றைக்கு சிங்கள தேசம் பீதி கொள்கிறது.

தீபச்செல்வன்

இந்த சூழலில்தான் ஈழத்தின் தொன்மை பற்றியும் தமிழின் பழமை பற்றியும் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் பேசினார். இது வரலாற்றுக்கும் நமது தொன்மைக்கும் அடையாளத்துக்குமான போராட்டம். இதில் பிரிவினை ஏதுமில்லை. நம் பூர்வீகம் குறித்து பேசுவதை பிரிவினை என கருதுகிற முட்டாள்தனம்தான், இலங்கைத் தீவை இரு நாடுகளாக்கக்கூடியவை” என்றார்.

Also Read: “தமிழகத் தொழிலதிபர்கள் எங்கள் பகுதிகளில் முதலீடுகள் செய்ய வேண்டும்” – விக்னேஸ்வரன் கோரிக்கை

இலங்கை வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாழ்வாதாரம் சார்ந்து பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது, விக்னேஸ்வரனின் இது போன்ற பேச்சுக்கள் தேவைதானா?

ஊடகவியலாளர் நிலாந்தனிடம் பேசினோம். “விக்னேஸ்வரன் தனது கன்னி உரையில் தமிழ்மொழி சார்ந்தும் இனம் சார்ந்தும் சில கருத்துக்களைத் தெரிவித்தார். அதில் தவறேதும் இல்லை. அது அவரின் முதல் உரை, ஆதலால் வரலாற்று ரீதியாக அதுவும் பேராசியர் பத்மநாபன் மேற்கொண்ட ஆய்வுகளின் வழியாகவே ஒரு கருத்தை முன்மொழிந்தார். ஆனால், சிங்கள இனவாத அரசியல் தலைவர்கள்தான் அதைத் திசைதிருப்பி அரசியல் செய்கின்றனர். நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் இருந்து விக்னேஸ்வரனின் உரையை நீக்கவேண்டிய தேவையில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதற்குப் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை இருப்பதாகக் காட்டிக்கொள்ளவே நீக்கத் தேவையில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள்.

நிலாந்தன்

இலங்கையில் 20-வது சட்டத் திருத்த வேலைகளில் ராஜபக்சே குடும்பத்தினர் தீவிரமாக இருக்கின்றனர். அது நிகழ்ந்துவிட்டால், அதற்குப்பிறகு ராஜபக்சே குடும்பத்தினர்தான் மன்னாராட்சிபோல இலங்கையை ஆள்வார்கள். அதன்மீது குவியும் அரசியல்வாதிகளின் கவனத்தைத் திசைதிருப்பும் பல உக்திகளில் இதுவும் ஒன்று. ஆனால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டதால் அவர் நிச்சயமாக 20-வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிவிடுவார்கள்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.