இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானதை அடுத்து மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது. இதனால், மக்கள் பலரும் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் மக்கள் சிக்கிக் கொண்டதால் மாதம்தோறும் செலுத்திவந்த வங்கிக் கடன்களையும் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனையடுத்து, ரிசர்வ் வங்கியானது மாதத் தவணைகளை செலுத்த வேண்டிய காலத்தை தள்ளிவைப்பதாக அறிவித்தது. தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்புகளால் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இந்த காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியானது மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டிய தவணைகளுக்கான வட்டியும் வசூலிக்கப்படும் என்று அறிவித்தது. இதனால், மக்கள் பலரும் இந்த அறிவிப்பின் மீது தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அஷோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் விசாரித்தனர். விசாரணையின்போது நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். நீதிபதிகள் இதுதொடர்பாக பேசும்போது, “இந்த பிரச்னையில் மத்திய அரசானது சுயமாக தெளிவான முடிவு எடுப்பதற்கு பதிலாக ரிசர்வ் வங்கியின் பின்னால் சென்று ஒளிந்து கொள்கிறது” என்று விமர்சித்தனர்.

Also Read: 2019-20 நிதியாண்டில் ₹ 2000 நோட்டையே அச்சிடாத ரிசர்வ் வங்கி… அறிக்கையில் தகவல்!

நீதிபதிகள் தொடர்ந்து பேசுகையில், “ஒட்டுமொத்த நாடும் நெருக்கடியான சூழலில் சிக்கி தவிக்கும்போது அதிகாரிகள் வணிக நோக்கில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது. இது அதற்கான நேரம் அல்ல. மத்திய அரசு அலட்சியமாக செயல்படக்கூடாது. இத்தகைய நிலை, நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியதால்தான் ஏற்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்திருக்க முடியும். இரண்டு விஷயங்கள் குறித்த முடிவை மத்திய அரசு எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஒன்று, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம்; மற்றொன்று, வட்டிக்கு வட்டி என்பது கவனத்தில் கொள்ளப்படுமா என்பது” என்று தெரிவித்துள்ளனர். இவை தொடர்பாக மத்திய அரசு செப்டம்பர் 1-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

ரிசர்வ் வங்கி

மத்திய அரசின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, “மத்திய அரசானது ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இதுதொடர்பான முடிவுகளை எடுக்க ஆலோசித்து வருகிறது. ஒரு தீர்வு என்பது அனைத்துக்கும் பொருந்தக்கூடியதாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார். அரசின் அறிவிப்புகள் தொடர்பான குழப்பங்கள் ஒருபக்கம் இருந்தாலும், மக்களிடம் வங்கிகள் தவணைகளை செலுத்த வற்புறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் விளக்கத்தை பொறுத்தே இந்த பிரச்னைகள் தொடர்பான முடிவுகள் கிடைக்கும் எனத் தெரிகிறது. தற்போது, இந்த பிரச்னை தொடர்பான விவாதங்கள் மக்கள் மத்தியிலும் அதிகளவில் எழுந்துள்ளன.

Also Read: கடன் தவணைக்கான சலுகை இருந்தும் வாடிக்கையாளர்களை வதைக்கும் வங்கிகள்… என்ன பிரச்னை?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.