பிரபலங்கள் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சமீப நாள்களாக கோமா என்ற வார்த்தையை செய்திகளில் அதிகம் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது. ஆழ்ந்த கோமாவில் இருக்கிறார், சுய நினைவில்லாமல் இருந்தார், இப்போது நினைவு திரும்பிவிட்டது என்றெல்லாம் பிரபலங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை அறிக்கைகளில் தெரிவிக்கப்படுகின்றன. கோமா என்றால் என்ன எனும் தெளிவு இன்னும் பலருக்கு இல்லை. திரைப்படங்களின் தவறான சித்திரிப்புகளும் கற்பனைக் காட்சிகளும்கூட அதற்கு காரணங்கள். இந்தநிலையில் கோமா பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கோமா என்றால் என்ன?

கோமா என்பதை எழுப்ப முடியாத ஆழ்ந்த உறக்கநிலை எனலாம். உடலில் எந்த ஓர் ஆழமான தூண்டுதலும் எந்த ஒரு செயல்பாடும் இல்லையெனில், அப்படி இருப்பவரை கோமாவில் இருக்கிறார் என்கிறோம். அதாவது, இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம், மூளையின் சில செயல்பாடுகள் போன்ற உயிரோட்டத்துக்குத் தேவையான விஷயங்கள் மட்டும் இருந்துகொண்டு எந்த ஒரு புறச்சூழல் உணர்வும் இல்லாமல் இருப்பதுதான் கோமா.

கோமாவுக்குச் செல்வதற்கு முன்பாகச் சில கட்டங்கள் உள்ளன. அவை கன்ஃபியூஷன் (Confusion), லெத்தார்ஜி (Lethargy), ஸ்டூப்பர் (Stupor), பின் கோமா… கன்ஃபியூஷன் என்றால் அவர்களுக்கு நினைவிருக்கும், ஆனால், குழப்பான நிலையில் இருப்பது போன்று காணப்படுவார்கள். லெத்தார்ஜி என்றால் லேசான உறக்கத்தில் இருப்பது போன்ற நிலை. அவர்களை மீட்டெழுப்ப முடியும். ஸ்டூப்பர் என்றால் ஆழ்ந்த மயக்கத்திலுள்ள நிலை. ஆழ்ந்த தூண்டுதலின் பேரில் மீட்டெழுப்ப முடியும். அதற்குப் பிறகுதான் கோமா நிலைக்குச் செல்வார்கள்.

Coma state

ஒருவர் கோமாவுக்கு படிப்படியாகத்தான் போக வேண்டும் என்று இல்லை. பிரச்னை தீவிரமானதாக இருந்தால், நேரடியாகவே கோமாவுக்குச் செல்வர். அதேபோல கோமாவில் இருந்து மீண்டு வரும்போதும் படிப்படியாகவும் வெளியே வரலாம். கோமாவுக்கும் மூளைச்சாவுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மூளைச்சாவின்போது மூளையிலுள்ள அடிப்படையான அனிச்சை செயல்கள் வேலை செய்யாது. சுவாசமிருக்காது என்பதால் அவர்களை வென்டிலேட்டரில் வைத்திருப்பார்கள். ஆனால், இதயத்துடிப்பு இருக்கும்.

கோமாவில் உடலில் சிறு அசைவுகள் இருக்கலாம், முற்றிலுமாகவும் நிரந்தரமாகவும் பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூற முடியாது. கோமாவை அடைந்தவர் மீண்டு வரவே மாட்டார் என்று தெரிந்தால், அவரை மூளைச்சாவு அடைந்தவர் என்று மருத்துவர்கள் அறிவிக்கின்றனர். அப்படி அறிவிக்கவே பல்வேறு பரிசோதனைகள் உள்ளன.

இந்தப் பரிசோதனைகளை மருத்துவமனையின் கண்காணிப்பாளர், சிறப்பு மருத்துவர், மூளை நரம்பியல் மருத்துவர் அல்லது அறுவைசிகிச்சை மருத்துவர் இணைந்து செய்துதான், `மூளைச்சாவு அடைந்துவிட்டார்’ என அறிவிக்க வேண்டும் என்ற சட்ட விதிகள் உள்ளன. மூளை நரம்பியல் மருத்துவர் இல்லாதபட்சத்தில் ஒரு மருத்துவர் மற்றும் மயக்கவியல் மருத்துவர் இணைந்தும் அறிவிக்கலாம் என்று பின்னால் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

கோமா ஏற்பட காரணங்கள்:

கோமா ஏற்பட்டால் பெருமூளை என்று புறப்பகுதியும் நடுப்பகுதியும் சேர்ந்தோ, ஒன்று மட்டுமோ பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை பக்கவாதம், (மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு அல்லது ரத்தக்கசிவு), மண்டையில் அடிபட்டு, மூளை பாதிக்கப்படுதல், மூளைக்காய்ச்சல் மருந்துகளை அதிகமாக உட்கொள்ளுதல், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் மற்றும் அதிகரித்தல், ரத்தத்தில் ரசாயன மாற்றங்கள் எனப் பல காரணங்கள் உள்ளன.

கோமா வந்தால் என்ன நடக்கும்?

கோமாவில் இருப்பவருக்கு எந்த நினைவும் இருக்காது. பெரும்பாலும் எந்த அசைவும் இருக்காது. அவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்வதுதான் முக்கியம். அவர்களுக்கு குழாய் மூலம் உணவளிப்பது, படுத்தே இருப்பதால் நீர் கோத்து உடலில் புண் வராமல் பார்த்துக்கொள்வது, எச்சில் புரையேறி நுரையீரலில் கிருமித் தொற்று ஏற்படுவது மற்றும் கண்கள் காய்ந்துபோவது போன்றவற்றைக் கவனித்து தக்க தவிர்ப்பு நடவடிக்கைகளை எடுப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

Dr.Dhileepan Selvarajan

கோமா என்பது சில நாள்களிலிருந்து சில வருடங்கள் வரைகூட இருக்கலாம். அதிகபட்சமாக உலகில் இதுவரை 42 ஆண்டுகள் கோமாவில் இருவர் இருந்துள்ளனர். அதில் ஒருவர் அமெரிக்காவின் மியாமியைச் சேர்ந்தவர். மற்றொருவர் இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த செவிலியர் அருணா ஷன்பா. அவர் ஒருவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் கோமாவுக்குச் சென்றவர், கோமாவிலேயே 42 ஆண்டுகளை மருத்துவமனையிலேயே கழித்தார்.

பிற்காலத்தில், அவர் கருணைக்கொலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இருந்தாலும், அதை நீதிமன்றம் மறுத்துவிட்டது. பின் 2013-ம் ஆண்டு அவர் இறந்தார். இதுபோன்ற நேரங்களில் கருணைக் கொலை செய்யலாமா என்ற கேள்வி எழுகிறது. இது ஒரு சிக்கலான விஷயம்தான். ஏனெனில், சிலர் பல ஆண்டுகள் கோமாவில் இருந்த பின் நினைவு வந்த சம்பவங்களும் நடந்துள்ளன. மேலும், சில உடல் அசைவுகள் இருப்பதால், அவர் தொடர்ந்து `தாவர நிலை’க்குச் சென்று விட்டாரா என்று முடிவு செய்வதில் பிரச்னை உள்ளது.

Patient in hospital

கோமாவுக்குச் செல்லும் காரணங்களையும் மூளை பாதிப்பின் அளவையும் வைத்துக்கொண்டு ஓரளவுக்கு கோமாவில் இருந்து வெளிவரும் சாத்தியத்தைக் கூறலாம். அதே வேளையில் அதை உறுதியாகவும் கூறிவிட முடியாது. மூளையின் செயல்பாடுகள் அவ்வளவு எளிதாக யூகிக்கக்கூடியவை அல்ல. குழப்பங்கள் நிறைந்தவை. இன்னும் கோமாவைப் பற்றிய பல விஷயங்கள் கண்டறியப்படாமலே இருக்கின்றன. அவற்றைக் கண்டறிந்துவிட்டால் கோமாவையே குணப்படுத்திவிட முடியும். கோமாவும் இயற்கையின் விசித்திரங்களில் ஒன்று.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.