தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதற்காக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்குத் தொடர்ந்தனர். தற்போது அந்த நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் கொண்டுவரப்பட்ட பிரபலமான உரிமை மீறல் பிரச்னைகள் பற்றி சட்டமன்றக் கூட்டத்தொடர் செய்தி சேகரிப்பில் பல ஆண்டுகால அனுபவம் பெற்ற பத்திரிகையாளர் துரை. கருணாவிடம் கேட்டோம்.

image

(பத்திரிகையாளர் துரை கருணா)

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் மீது ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினர் மீது எதிர்க்கட்சியினரும் எண்பதுகளின் காலகட்டத்தில் பல உரிமை மீறல் பிரச்னைகளைக் கொண்டுவந்துள்ளனர். ஆனால் விசாரணைக்கு வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டவை ஒருசில மட்டுமே உண்டு.

image

உரிமை மீறல் பிரச்னை என்றால்…

சட்டப்பேரவையின் விதிகள் மற்றும் மரபுகளுக்கு மாறாக பேரவையை அல்லது அவையின் உறுப்பினர்களை அவமதித்து அவையில் அல்லது பொதுவெளியில் பேசினால், அவர்கள்மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் உரிமை மீறல் பிரச்னையை எழுப்பலாம்.

அவையின் உரிமை மீறல் என்று மேலோட்டமாகக் கருதினால் பேரவைத் தலைவரே தன்னிச்சையாக அதை எடுத்து விசாரித்து தண்டனை வழங்கலாம். அதிகபட்ச தண்டனை என்பது சிறைத்தண்டனை அல்லது பேரவையில் அமைக்கப்படும் கூண்டில் நிறுத்தப்படுவார்கள். குறைந்தபட்ச தண்டனை என்பது எச்சரிப்பதாக இருக்கும்.

உரிமை மீறல் தொடர்பாக எழுத்து மூலமாக விளக்கம் கேட்பார்கள். எழுத்து மூலமாக அளித்த விளக்கம் ஏற்கப்படவில்லை என்றால், நேரில் வந்து விளக்கம் தரவேண்டும். நேரிலும் எழுத்து மூலமாகவும் அளித்த விளக்கத்தைத் காரணம் காட்டி அவர்கள் எச்சரித்து விடப்படுவார்கள். சட்டப்பேரவையை மதிக்கவேண்டும் என்பதற்காகத்தான் உரிமை மீறல் என்பது இருந்துவருகிறது.

image

குழந்தைவேலுவின் பொய்ப் புகார்

தமிழக சட்டமன்றத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் ராஜாராம் சபாநாயகராக இருந்தபோது, அன்றைய அமைச்சர் குழந்தைவேலு, எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். இன்றைய தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் சுமார் 100 ஏக்கர் நிலம் கருணாநிதிக்கு இருப்பதாக சட்டப்பேரவையில் குறிப்பிட்டதால், அவர்மீது கருணாநிதி உரிமைமீறல் பிரச்னையைக் கொண்டுவந்தார். அதை விசாரித்து தீர்ப்பளித்த சபாநாயகர், அமைச்சர் குழந்தைவேலு கொடுத்த ஆவணம் போலியானது என்றார். அதற்காக அமைச்சர் பேரவையில் வருத்தம் தெரிவித்தார்.

பத்து எம்எல்ஏக்கள்

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் பிஎச்.பாண்டியன் சபாநாயகராக இருந்தபோது, மொழிப்பிரச்னை தொடர்பான சட்டநகலை எரித்ததற்காக பேராசிரியர் அன்பழகன் உள்பட பத்து திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்பட்டது. அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். பேரவை விதிகளுக்கு மாறாக, பேரவையில் எடுத்த உறுதிமொழிக்கு மாறாக செயல்பட்டதாக உரிமை மீறல் பிரச்னையை தன்னிச்சையாக எடுத்து விசாரித்தார்கள்.

image

(ஆனந்தவிகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம்)

வணிக ஒற்றுமை ஆசிரியர் கைது

பிஎச்.பாண்டியன் சபாநாயகராக இருந்தபோது, ‘வணிக ஒற்றுமை’ என்ற வார இதழின் ஆசிரியர் பால்ராஜ், அரசு தொடர்பாகவும் குறிப்பாக சட்டப்பேரவை தொடர்பாகவும் விமர்சித்து கட்டுரை எழுதியிருந்தார். அதற்காக அவர்மீது உரிமை மீறல் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு இரண்டு வாரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனந்த விகடன் கார்ட்டூன்

1987. எம்ஜிஆர் ஆட்சிக்காலம். அமைச்சர்களையும், சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தவறாக சித்தரித்து அட்டைப்படத்தில் கார்ட்டூன் வெளியிட்டதன் மூலம் சட்டப்பேரவையின் உரிமையை மீறியதாக ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியனை கைது செய்து, அவருக்கு மூன்று மாத காலம் கடுங்காவல் தண்டனை விதிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை சபை முன்னவராக இருந்த நிதியமைச்சர் நெடுஞ்செழியன் முன்மொழிந்தார்.

image

(சேடப்பட்டி முத்தையா)

தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலேயே உரிமை மீறல் பிரச்னைக்காக பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுவது அதுவே முதல் முறை. கார்ட்டூன் தொடர்பாக ஆசிரியர் பாலசுப்ரமணியத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். பின்னர் விளக்கக் கடிதம் குறித்து சட்டப் பேரவையில் சபாநாயகர் குறிப்பிட்டு, ஆனந்த விகடன் ஆசிரியர், அவை உரிமை மீறல் குற்றத்தைச் செய்துள்ளார் என்று தீர்ப்பளித்தார்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பாலசுப்ரமணியம் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு நீதிமன்றத்தின் மூலம் விடுதலை செய்யப்பட்டார். நீதிமன்றம் சட்டமன்றத்திற்கு ரூ. 1000 அபராதம் விதித்தது. பின்னர் அந்த காசோலையை இரு ஐநூறு ரூபாயாக மாற்றி ஆசிரியர் பாலசுப்ரமணியம் பிரேம் செய்து வைத்திருந்தார் என்று சொல்வார்கள்.

image

முரசொலி, தினகரன்

ஜெயலலிதா ஆட்சிக்காலம். சேடப்பட்டி முத்தையா சபாநாயகராக இருந்தார். அப்போது ஓர் உரிமைமீறல் பிரச்னை. முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம், தினகரன் ஆசிரியர் முத்துபாண்டியன் ஆகியோர் கூண்டில் நிறுத்தப்பட்டார்கள். அரசையும் பேரவையையும் விமர்சித்து கட்டுரை மற்றும் செய்தி எழுதியதற்காக அவர்கள்மீது குற்றச்சாட்டு. இதுதொடர்பாக அவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா ஆவேசப்பட்டார், ஆத்திரப்பட்டார் என்று பேரவையில் அவர் நடந்துகொண்ட விதம் குறித்து எழுதியதற்காக தி ஹிந்து பத்திரிகைமீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்பட்டது. அதன் ஆசிரியர்கள் பெங்களூரு வரை தேடப்பட்டார்கள். செய்தியாளர் ராதா வெங்கடேசன் முன்ஜாமீன் பெற்றார். அப்படியொரு பிரச்னையும் நடந்தது.

image

(பிடிஆர் பழனிவேல்ராஜன்)

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி

அதே காலகட்டத்தில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வெளியிடப்பட்ட கட்டுரைக்காக சுனில்மீது உரிமைமீறல் பிரச்னை கொண்டுவரப்பட்டது. டெல்லி வரை அவரை தமிழக காவல்துறையினர் தேடிச்சென்றனர். காலப்போக்கில் அது நீர்த்துப்போய்விட்டது. அதே சுனில், பின்னாளில் ஜெயா டிவியில் ஆங்கில செய்தியாசிரியராகப் பணியாற்றினார்.

தாமரைக்கனி

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பேரவையில் பண்ருட்டி ராமச்சந்திரனை அடித்ததாக தாமரைக்கனி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்பட்டது. பின்னர் அவர் எச்சரிக்கப்பட்டார்.

திமுக ஆட்சிக்காலம். பிடிஆர் பழனிவேல்ராஜன் சபாநாயகராக இருந்தார். அப்போது தாமரைக்கனி, திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை மூக்கில் குத்தி ரத்தம் வந்துவிட்டது. அமைச்சரையே தாக்கியதாக தாமரைக்கனி மீது உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டது. அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

image

விஜயகாந்த்

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட சில தேமுதிக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் கொண்டுவரப்பட்டு பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.

எஸ்ஆர்பி

எஸ்ஆர்.பாலசுப்ரமணியம் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது அவர்மீதும் உரிமைமீறல் பிரச்னை கொண்டுவரப்பட்டது. விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இப்படி நிறைய உரிமை மீறல் பிரச்னைகள் கொண்டுவரப்பட்டன.

image

வானொலிமீதும்

ஜெயலலிதா ஆட்சிக்காலம். சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரனை அதிமுக உறுப்பினர் வி.பி.ரமேஷ் அடித்துவிட்டார். இதுபற்றிய செய்தி அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது. ஆளுங்கட்சி உறுப்பினர் காங்கிரஸ் உறுப்பினரை அடித்தார் என்ற செய்தி வெளியானது. இதுதொடர்பாக ஆல் இந்திய ரேடியோ நிர்வாகத்திற்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. மத்திய அரசு நிறுவனங்கள் மீதும் உரிமை மீறல் எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் விளக்கம் அளித்தார்கள். தமிழக சட்டமன்ற வரலாற்றில் இப்படி பல்வேறு காலகட்டங்களில் உரிமை மீறல் பிரச்னைகள் வந்துள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.