நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

சமூகநீதி என்பது சாதி – மத ரீதியான ஏற்றத்தாழ்வையும் பாகுபாடுகளையும் அகற்றி, சக மனிதர்களைச் சமமாகக் கருதுவது மட்டுமல்ல; பாலினரீதியாக ஆண் – பெண் என்கிற ஏற்றத்தாழ்வையும் மாற்றி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என அனைத்து வகையிலும் சமமான நிலையை அடைவதாகும்.

திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களை ஒட்டி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலம் நெடுகிலும் பாலின சமத்துவத்தை உருவாக்கும் வகையில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழு எனப் பெண்கள் தங்களின் உரிமையைப் போற்றி வாழ்வதற்கானப் பல திட்டங்களை, இந்தியாவுக்கே முன்னோடியாக வழங்கினார். முத்தான இந்தத் திட்டங்களில் முத்தாய்ப்பானது, குடும்பச் சொத்தில் பெண்களுக்கான சம உரிமை வழங்கும் சட்டமாகும்.

செங்கல்பட்டில் 1929-ம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம், குடும்பச் சொத்தில் பெண்களுக்குப் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்தியது. தொடக்கக் காலம் முதற்கொண்டே, பெண்ணினத்தின் விடுதலை – மறுமலர்ச்சி – உரிமை ஆகியவற்றைப் போற்றிய தந்தை பெரியாரின் பெருங்கனவை, ஏறத்தாழ 60 ஆண்டுகள் கழித்து, 1989-ல் மூன்றாம் முறையாக முதல்வரான தலைவர் கலைஞர் அவர்கள் நனவாக்கினார். குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் சட்டத்தைத் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு நிறைவேற்றி, இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தது.

வர்ணாசிரமம் – மனுஸ்மிருதி போன்றவற்றைக் காரணம் காட்டி பெண்களுக்கான சொத்துரிமை காலம் காலமாக மறுக்கப்பட்டு வந்த சமுதாயத்தில், ஆணுக்கு இணையாகப் பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற குரலைச் சீர்திருத்தச் சிந்தனையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்தே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதற்கான சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

நமது அரசியல் சாசனத்தை உருவாக்கிய மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள், சுதந்திர இந்தியாவில் சளைக்காமல் போராடினார். நாடாளுமன்றத்தில் இந்து வாரிசு உரிமைச் சட்டத்தை உள்ளடக்கிய இந்து நடைமுறைச் சட்டத் தொகுதியை (Hindu Code Bills) நிறைவேற்றுவதற்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், தொலைநோக்குடையவை – உறுதியானவை – உரிமைக் குரலாக ஒலித்தவை. எனினும், பழமைவாதம் மாறாத – மதவாத அரசியல் சக்திகள் அதனைத் தடுத்தே வந்தன.

மனைவி – மகள் – அடிமைகள் இவர்களுக்குச் சொத்துரிமை கிடையாது என்கிற பழைய விதிகளை மீறக்கூடாது எனக் குறுக்கே நின்றன. அதனால், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தனது அமைச்சர் பதவியையே துறந்தார் என்பது சமூகநீதிப் போராட்டத்தின் வரலாறு.

பல தடைகளைக் கடந்து 1956-ம் ஆண்டில் இந்து வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது முழுமையானதாக நிறைவேற்றப்படவில்லை. குடும்பச் சொத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்குவதில் பல சிக்கல்கள் நீடித்தன. ஓர் ஆணின் தனிச் சொத்தில் பெண்களுக்கு உரிமைகள் கிடைத்தாலும், பரம்பரைக் குடும்பச் சொத்தில் பெண்களுக்கான பங்கு கிடைப்பதற்குத் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.

இந்நிலையில்தான், 1989-ல் பரம்பரைக் குடும்பச் சொத்தில் மகன்களுக்கு இருக்கும் உரிமை போலவே, மகள்களுக்கும் உண்டு என்பதைச் சட்டமாக்கி, பெண்களுக்குச் சம உரிமை வழங்கினார் தலைவர் கலைஞர் அவர்கள். பங்காளி என்றால் அது ஆண்களுக்கு மட்டுமே உரிய சொல்லாக இருந்து வந்த நிலையில், குடும்பச் சொத்து எனும் பங்கை ஆள்வதில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்கிற சட்டத்தின் மூலம் அவர்களையும் ‘பங்காளி’ ஆக்கி, ஆண்டாண்டு காலப் பழியைத் துடைத்தெறிந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

பெண்களுக்கான குடும்பச் சொத்துரிமை குறித்த விவாதங்கள் இந்திய அளவில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றங்களில் அவை தொடர்பான வழக்குகளும் தொடரப்பட்டன. தீர்ப்புகள் பல கோணங்களில் வெளிப்பட்டு வந்த சூழலில்தான், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நசீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு 11-08-2020-ல் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

அதில், “இந்து கூட்டுக்குடும்பச் சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு. அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல்லும். சொத்து பாகப்பிரிவினையில் இந்து வாரிசு உரிமைச் சட்டம் 2005 திருத்தத்துக்கு முன்பு தந்தை இறந்திருந்தாலும் அந்தக் குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதைப் போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு” என நீதிபதிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தந்தை பெரியாரும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரும் நடத்திய உரிமைப் போராட்டத்தை, அவர்களின் சிந்தனைகளைச் செயல்படுத்தும் வகையில், 31 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய சட்டத்திற்கு உறுதியான அங்கீகாரத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நாட்டு மக்கள் நம்பி வழங்கிய பெரும்பான்மை பலம் இருப்பதால், மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் பற்றிக் கவலைப்படாமல், அவசரக் கோலத்தில், உழைக்கும் மக்களுக்கும் உழுவோர்க்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிரான பல சட்டங்களை, கொரோனா பேரிடர் காலத்தில் பெருகிவரும் பதற்றத்தையும் பாதிப்பையும் பற்றிப் பொருட்படுத்தாமல், அவசர அவசரமாக நிறைவேற்றி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, பெண்களின் உரிமையைக் காக்கும் இந்தக் குடும்பச் சொத்துரிமை தடையின்றி நிறைவேறிட உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அதேநேரத்தில், இந்திய நாடாளுமன்றம் – சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் நிறைவேறாத நிலை இன்னும் நீடித்துக் கொண்டிருப்பது, இந்திய சமுதாயத்திற்கே பின்னடைவாகும் . முக்கியமான அந்தக் குறிக்கோளை நிறைவேற்றிட, மத்திய பா.ஜ.க. அரசு தனது பெரும்பான்மை பலத்தை மிகவும் ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவுக்கே முன்னோடியாகத் தமிழ்நாடு நிறைவேற்றிய பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை நாடு முழுவதும் சரியான வகையில் நடைமுறைப்படுத்திடவும், தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வலியுறுத்தி வந்த, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றிடவும், மத்திய அரசுக்குத் தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க அரசு உரிய முறையில் அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும், ஏனைய அரசியல் கட்சிகளும் பெண்களுக்கான இந்த இடஒதுக்கீட்டினைக் கையிலெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பெண்களின் உரிமைகளைக் காத்திட மத்திய – மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் துணை நிற்கும் என்பதையும், இத்தருணத்தில் உறுதிமொழியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.