சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த மாதம் 25-ம் தேதி முதல் காணவில்லை. சிறுமியை பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து 28-ம் தேதி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீஸார் சிறுமியை தேடிவந்தனர். இந்த நிலையில் சிறுமி இளைஞர் ஒருவருடம் பெங்களூருவில் இருக்கும் ரகசிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதனால் போலீஸார் பெங்களூரு சென்று இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், “புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலை பகுதியைச் சேர்ந்த தேவஅருள் (21). இவர், கூரியர் நிறுவனத்தில் டீம் லீடராக வேலைப்பார்த்து வருகிறார். சிறுமிக்கும் தேவஅருளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியுடன் தேவஅருள் நட்பாக பழகியுள்ளார். பின்னர் சிறுமியை தேவஅருள் காதலிப்பதாகக் கூறியுள்ளார். அதற்கு சிறுமியும் சம்மதித்துள்ளார்.
இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டினருக்கும் தெரியவந்தது. அதனால் எதிர்ப்புகள் கிளம்பின. அதனால் சிறுமியிடம் பெங்களூரு சென்று இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என தேவஅருள் கூறியுள்ளார். அதை நம்பிய சிறுமி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறுமியின் வருகைக்காக காத்திருந்த தேவஅருள், அவரை அழைத்துக் கொண்டு பெரியமேடுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து வேலூருக்கு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த லாரி டிரைவரிடம் 2.000 ரூபாய் கொடுத்து வேலூருக்கு சிறுமியும் தேவஅருளும் சென்றுள்ளனர். வேலூரில் தேவஅருளின் நண்பர் வீட்டில் சில நாள்கள் தங்கியிருந்துள்ளனர்.

வேலூரிலிருந்து இருவரும் பெங்களூருச் செல்ல முடிவு செய்துள்ளனர். வேலூரிலிருந்து பெங்களுரு சென்ற லாரி டிரைவரிடம் லிப்ட் கேட்டுள்ளனர். லாரி டிரைவரும் 3,500 ரூபாய் வாங்கிக் கொண்டு இருவரையும் பெங்களூருவில் இறக்கி விட்டுள்ளார். பெங்களூருவில் தங்களுக்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர். செல்போன் சிக்னல் அடிப்படையில் இருவரும் பெங்களூருவில் இருப்பதை உறுதிபடுத்தினோம்.
இதையடுத்து இ-பாஸ் வாங்கிக் கொண்டு சென்னையிலிருந்து பெங்களூருக்குச் சென்றோம். அங்கிருந்த தேவஅருள், சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்தோம். சிறுமியிடம் விசாரித்தபோது அவர், எல்லா விவரத்தையும் எங்களிடம் கூறினார். அதனால் தேவஅருள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சலிங் அளித்துள்ளோம்” என்றனர்

Also Read: சென்னை: `பைக் பஞ்சர்; துண்டு சீட்டில் செல்போன் நம்பர்’- ஏமாற்றியவரைக் காட்டிக் கொடுத்த குழந்தை
ஊரடங்கு காலக்கட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதைத் தடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையிலான அனைத்து மகளிர் போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஊரடங்கில் பொதுமக்களின் நலன்கருதி 9150250665 என்ற புதிய செல்போன் நம்பர் ஒன்றையும் இந்தப்பிரிவினர் அறிவித்துள்ளனர். இந்தச் செல்போன் நம்பரில் துணை கமிஷனர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் தங்களின் புகார்களை தெரிவிக்க முடியும். பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகள் தயங்காமல் புகார்களை அளிக்கலாம். அவர்களின் விவரங்கள் ரகசியமாக இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.