சென்னை தி.நகர், முருகேசன் தெருவில் குடியிருக்கும் இசைஞானி இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “நான், 1976-ம் ஆண்டு முதல் இசை இயக்குநராக இருந்துவருகிறேன். இதுவரை இந்திய மொழிகளில் வந்த 1,300 திரைப்படங்கள், 7,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில் என்னுடைய (இளையராஜா) ரெக்கார்டிங் தியேட்டர் செயல்பட்டு வருகிறது.

1977-ம் ஆண்டு முதல் அந்த இடத்தில் ரெக்கார்டிங் தியேட்டர் செயல்பட்டுவருகிறது. இந்த இடத்தை எனக்கு எல்.வி.பிரசாத் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். அந்த ஸ்டூடியோவில் விலை உயர்ந்த இசைக் கருவிகள், மியூசிக் நோட்ஸ்கள் இருந்தன. அதற்கு விலை மதிப்பே கிடையாது. எல்.வி.பிரசாத் மறைவுக்குப் பிறகு, அவரின் குடும்பத்தினருக்கும் எனக்கும் ரெக்கார்டிங் தியேட்டர் இடம் தொடர்பாகப் பிரச்னை எழுந்தது. ரெக்கார்டிங் தியேட்டருக்கான மின் இணைப்புகளைத் துண்டிப்பது, தண்ணீர் இணைப்பு துண்டிப்பது போன்ற வேலைகளில் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் ஈடுபட்டது.
Also Read: கை கோத்த இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான்… `யாரையும் விட்டுடக்கூடாது!’
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்தேன். இட உரிமை தொடர்பாக இருதரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கெனவே, 17-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. `சிட்டி சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை விதிக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தேன்.

தற்போது, கோவிட் 19 காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் இதைப் பயன்படுத்திய பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி சாய் பிரசாத், ரெக்கார்டிங் தியேட்டரை கள்ள சாவி போட்டு திறந்து உள்ளிருந்த விலையுயர்ந்த இசைக் கருவிகளை சேதப்படுத்தியும், இசைக் கருவிகளைத் திருடிக் கொண்டு போய் விற்றிருக்கிறார். ஸ்டூடியோவில் இருந்த இசைக்குறிப்புகளை சேதப்படுத்தியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.