பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காய்கறிகளை வாங்கச் செல்லும்போது எங்கள் ஊர் மாரியம்மன் கோயிலைக் கடந்து செல்ல நேரிட்டது. வெறிச்சோடி கிடக்கும் மாரியம்மன் கோயிலைக் காணுகையில் மனதுக்குள் ஏதோ பாரம் குடிகொண்டது.

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பிறந்ததும் எங்கள் சேலத்துக்கு தனி அழகு வந்துவிடும்.

இந்நேரம் கோயில் வாசலில் பந்தல் போட்டிருப்பார்கள். இரவு நேரத்தைப் பகலாக்க சாலை முழுவதும் மின் விளக்குகள் கட்டப்பட்டிருக்கும். எங்கள் குழு பெரியதா உங்கள் குழு பெரியதா என்று போட்டிப் போட்டுக்கொண்டு அம்மாப்பேட்டை முழுக்க விழாக் குழுக்கள் தங்கள் பேனர்களைக் கட்டியிருப்பார்கள்.

கேழ்வரகு கூழ்

ஆடியின் முதல் செவ்வாய் சாமிக்கு பூ போடுவார்கள்… இரண்டாம் செவ்வாய் கோயிலில் கம்பம் நடுவார்கள்… மூன்றாம் செவ்வாய் மாவு விளக்கு வைத்து வீட்டில் படைப்பார்கள்.

எங்களுக்கு இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் இருந்தே குதூகலம்தான். கம்பத்துக்கு நீர் ஊற்ற கோயிலுக்குப் போவோம். சில்வர் குடத்தையோ, செம்புக் குடத்தையோ இடுப்பில் சுமந்து கொண்டு மஞ்சளை அதில் கொட்டிக்கொண்டு போகும் வழியில் வேப்பிலை கொத்தை ஒடித்து குடத்தில் போட்டுக்கொண்டு செல்வோம். கோயிலுக்கு வெளியே உள்ள தண்ணீர் குழாயில் நீர் பிடித்துச் சென்று கம்பத்துக்கு ஊற்றுவோம். மூன்று முறை தண்ணீர் பிடித்துக்கொண்டு நடப்பதற்குள் முக்கால் வாசி நானும் நனைந்துவிடுவேன். கம்பத்தின் மேல் ஊற்றும்போது மீதியும் நனைந்து விட மஞ்சள் வேப்பிலை மணத்தோடு அம்மன் முன் நிற்கும்போது மனதில் அப்படி ஓர் அமைதியை உணர முடியும்.

கோயிலைச் சுற்றி கூழ், உளுத்தங்கஞ்சி கொடுப்பார்கள். என்னுடையதை அருந்திவிட்டு தங்கைகளிடம் இருந்தும் பிடிங்கி கூழ் குடிப்பேன்.

மூன்றாம் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பாட்டி வீட்டில் ஒன்றாக இருப்போம். அம்மா திருமணம் ஆன புதிதில் ஆடிக்கு அழைத்த வழக்கம் இன்று வரை அந்த 6 நாள்கள் பாட்டி வீட்டில்தான்.

பெரியம்மா, மாமா, அத்தை என மொத்த குடும்பமும் சேர்ந்து விடுவோம். கிட்டத்தட்ட இருபது பேர் அந்த நாள்களில் ஒன்றாகச் சாப்பிட்டு உறங்குவோம்.

ஆடித் திருவிழா

அப்பா, பெரியப்பாக்கள் உறங்க மட்டும் வீட்டுக்குச் சென்று விட்டு விடிந்ததும் மீண்டும் வந்துவிடுவார்கள்.

அந்த நாள்களில் அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே… மற்ற நாள்களில் இல்லாத புத்துணர்ச்சி… மகிழ்ச்சி ததும்ப காணப்படுவார்.

எங்களுக்கும் கொண்டாட்டம்தான். பள்ளி செல்லும் நாள்களில் உள்ளூர் பண்டிகை என்று அந்த ஒரு வாரமும் விடுமுறை அளித்து விடுவார்கள். கல்லூரி படிக்கும்போது இரண்டு நாள்கள்தான் விடுமுறை. மீதி நாள்களில் நானே விடுப்பு எடுத்துக்கொள்வேன். எங்களுக்கும் அந்த வாரம் புத்துணர்ச்சி வாரமே.

20 பேருக்கு சமையல் செய்ய வேண்டும் என்றாலும் எல்லாரும் சேர்ந்து செய்வதில் சீக்கிரம் வேலை முடிந்துவிடும். சமையலும் ருசிக்கும்.

Also Read: நாரதர் உலா: ஊரடங்கால் பொலிவிழந்த ஆடி!

எப்படியும் ஏதாவது ஒரு சண்டையும் வந்துவிடும்.

“என் மருமகனுக்கு நீ ஏன் சின்ன பீஸ் மீன் வெச்ச” என்பார் முதல் பெரியம்மா.

“நீங்க கூடதான் நேத்து என் மருமகனுக்கு ஆறிப்போன வடை வெச்சீங்க” என்பார் அத்தை.

சண்டை வந்தாலும் ஒரு மணி நேரம்தான். அடுத்த வேலை உணவு சமைக்கும்போது எதுவும் நடக்காததுபோல் ஒற்றுமை விளம்பிகள் ஆகிவிடுவார்கள்.

வேக வேகமாகத் தயாராகி வண்டி வேடிக்கை பார்க்க கிளம்பிவிடுவார்கள். எங்கிருந்துதான் அத்தனை ஜனத்தொகை அன்று கூடுமோ… தெருவில் நிற்க இடம் இருக்காது. அத்தனை கடைகள். கண் கவரும் வண்டிகள். இரவு வெகு நேரம் வரை கூட்டம் குறையாது.

திருவிழா

அது முடிந்ததும் இரவில் பட்டி மன்றம், ஆர்கெஸ்ட்ரா, மேஜிக் ஷோக்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று நடக்கும். இரவு 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடக்கும்.

நள்ளிரவில் பட்டி மன்றம் பார்த்துவிட்டு 12 மணிக்கு வீட்டுக்குத் திரும்புவோம். நடந்து செல்லும் தூரம்தான் கோயிலுக்கும் பாட்டி வீட்டுக்கும். எங்களுக்கு துணையாக டியூப்லைட் வெளிச்சமும், ரோந்தில் இருக்கும் போலீஸ்காரர்களும், அம்மாவும் அத்தையும் ஆண் துணைக்கு அண்ணனும் வருவதால் பயம் துளியும் இன்றி வீட்டைச் சேர்வோம்.

போனதும் பசி எடுக்கும். 1 மணிக்கு மீதி இருக்கும் ரச சாதத்தையும், பொறித்த அப்பளங்களையும் சண்டையிட்டு உண்போம்.

உண்டு முடித்துவிட்டு உறங்கலாம் என்று சென்றால். பதினைந்து பேருக்கு தலையணை, போர்வை கிடைக்காது. எப்படியோ கிடைப்பதை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்துவிட… “கொசு கடிக்குது… காலுக்கு மட்டுமாவது துணி இருந்தா குடுங்களேன்” எனத் தங்கை கேட்க… அத்தை பழைய சேலைகளை எடுத்துக் கொடுப்பார்.

திருவிழா வீதி

எதில் தலை வைத்திருக்கிறோம், எதைப் போர்வையாகப் போட்டு இருக்கிறோம் என்றெல்லாம் தெரியாமல், பக்கத்தில் பெரியம்மா, அக்கா, தங்கைகள் இருக்கிறார்கள் என்ற சந்தோசத்தில் தூங்கலாம் என்று கண் மூடினால்… குழந்தை அழும் சத்தம் கேட்கும். போன வருடம் சின்ன அக்கா குழந்தை, முந்தைய வருடம் பெரிய அக்கா குழந்தை, அதற்கு முன் வருடம் அத்தை குழந்தை… எப்படியும் ஒரு கைக்குழந்தை அழுதுகொண்டிருக்க.. கண் உறங்கும் சமயத்தில் கிட்டத்தட்ட விடிந்ததே போகும்.

எங்களை இரவில் தூங்கவிடாமல் செய்த குழந்தை காலையில் சீக்கிரமே எழுந்து எங்கள் தலைக்கு அருகே படுத்துக்கொண்டு எழுப்பி விட முடியைப் பிடித்து இழுத்துக்கொண்டிருக்கும்.. அரைகுறை தூக்கத்தோடு எழுந்து அமர்ந்தாலும் பக்கத்தில் அக்கா, தங்கைகள் இருப்பதை காணும் பொழுதும்… மிக்ஸியில் சட்னி ஆட்டும் சத்தம் கேட்கும் பொழுதும்… மதிய உணவிற்கு பூண்டு உரிக்கும் வாசம் கமழும் பொழுதும்… எங்களுக்கு வைத்த ஆறிப் போன தேநீரை சுவைக்கும் பொழுதும்… தூங்காத கண்களிலும் உற்சாகமும் துள்ளலும் எழும்.

திருவிழா

காட்சிகள் யாவும் கண் முன்னே வந்து வந்து சென்றன. இந்த வருடம் இவையேதும் இன்றி வீட்டிலேயே தான் இருக்கப் போகிறோம் என்று நினைக்கையில் இதயம் கனத்தது.

அடுத்த வருடமாவது தற்போது நிலவும் சூழல் மாற வேண்டும். உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் மனம் வேண்டிக்கொண்டது.

காய்கறிகளை வாங்கிக்கொண்டு களையிழந்த வீதி வழியே வீடு வந்து சேர்ந்தேன்.

செ. ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.