அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி அளிப்பதில் நடிகர் சூர்யாவுக்கு வழிகாட்டியாகவும் பெருந்துணையாகவும் இருந்து வருபவர் பேராசிரியர் கல்யாணி. திண்டிவனம் பகுதியில் தாய்த் தமிழ் பள்ளி நடத்தி, அங்கு வசிக்கும் இருளர் மாணவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுத்தி வரும் அவர், நடிகர் சூர்யாவின் பிறந்த நாளில் சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

image

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளில் அவருடைய அறிமுகம் கிடைத்த நாளை நினைத்துப் பார்த்திருக்கிறேன். எனக்கு பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் மூலம் அவரது அறிமுகம் கிடைத்தது. அது 2007. ஒவ்வொரு ஆண்டும் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள். அவர்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும், அந்த விழாவை ஒருங்கிணைக்கும் அழகும் தனித்துவமானதாக இருக்கும்.

வறுமையில் வாடுவோர், பழங்குடி இருளர் மாணவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், ஆதரவற்றவர்கள் என சமூகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கே உதவிகளைச் செய்வார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி மூவரும் ஆர்வத்துடன், ஏழைக்கு எழுத்தறிவிக்கும்  பணியில் ஈடுபடுகிறார்கள். அபூர்வமான மனிதர்கள்.  

image

அகரம் அறக்கட்டளையில் விதை என்ற கல்வி உதவித்திட்டத்தைத் தொடங்கினார் சூர்யா. அதுவொரு புதுமையான திட்டம். பிளஸ் டூ  படிப்புக்குப் பிறகு கல்லூரியில் அல்லது வேறு படிப்புகளில் சேரவே முடியாத வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே உதவும் திட்டம். அந்த மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவில் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.

எனக்கு மகிழ்ச்சியான பணியாக இருந்தது. அரசுக் கல்லூரியில் 26 ஆண்டுகள் பணிபுரிந்தவன் என்ற முறையில், கல்வியில் வாய்ப்புக் கிடைக்காத ஒடுக்கப்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டு உதவி செய்வதில் ஆர்வமாக ஈடுபட்டேன். அதில் எனக்கு ஆர்வமும் பல ஆண்டு அனுபவம் இருந்தது. இப்படி ஆண்டுக்கு இருநூறு, முன்னூறு மாணவர்கள் என்ற நிலையில் இலவசக் கல்வி வழங்கினோம்.

இன்று ஆண்டுக்கு 2 ஆயிரம் மாணவர்கள் இலவசமாக கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். எந்த வசதியுமற்ற ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதுடன் என் பணி நிறைவடைகிறது. ஆனால் அகரம் அறக்கட்டளை படிப்பு முடிந்து வேலை கிடைக்கும்வரை அவர்களைப் பின்தொடர்ந்து உதவுகிறது. அகரத்திற்கு ஒரு மாணவர் வந்துவிட்டார் என்றால், அவரது வாழ்க்கை உயரும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

image

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். நரிக்குறவர், இருளர், ஈழத் தமிழர்களின் குழந்தைகள் எனக் கூடுதல் முக்கியத்துவம் அளித்து இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இவருக்குக் கொடுங்க, இவருக்குக் கொடுக்காதீங்க என்று எந்த மாணவருக்காகவும் எங்களிடம் சூர்யா பரிந்துரை செய்ததில்லை. தேர்வுக்குழுவின் சுதந்திரத்தில் தலையிடமாட்டார். 

கல்வியில் ஒரு புரட்சியை சூர்யா செய்து வருகிறார். அகரம் மூலம் இருளர் மாணவர் ஒருவர் பொறியியல் படித்து பெரிய நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விரைவில் வேலைக்காக வெளிநாடு செல்லப்போகிறார். அவர் ஒரு ஏழைத் தொழிலாளியின் மகன்.

இருளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தையும் சூர்யா தயாரித்து வருகிறார். அது லாக்கப் மரணம் தொடர்பானது. அதில் இருளர் மக்களே நடித்துள்ளார்கள். அவர்கள் வாழும் பகுதிகளிலேயே படப்பிடிப்பையும் நடத்தியுள்ளார்கள். சூர்யாவின் சமூகப் பிரச்சினைகள் சார்ந்த கருத்துகளும் வரவேற்கத்தக்கவையாக உள்ளன. புதிய கல்விக்கொள்கை பற்றி சூர்யாவின் கருத்து தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

image

எங்கள் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு இதுவரை 30 லட்சம் ரூபாய் உதவி செய்திருக்கிறார்.  ஆசிரியர்களுக்கு ஊதியம் தருவதற்காக மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அளித்துவருகிறார். அவருடைய உதவியால்தான் என்னால் இலவசக் கல்வியை வழங்கமுடிகிறது. எங்களது பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், இருளர் மக்களின் சார்பாக சூர்யாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

சுந்தரபுத்தன்

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.