புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே போசம்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் மற்றும் உடையப்பன் தரப்பினருக்கிடையே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் இருந்துள்ளது. தேர்தல் முடிவுக்குப் பின்பு இரு தரப்பினரும் எலியும் பூனையுமாகவே இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் பரமசிவத்தின் ஆதரவாளர் திருநாவுக்கரசு என்பவர் உடையப்பன் குறித்து அவதூறாக வாட்ஸ்அப்பில் தகவல் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. உடையப்பன் தரப்பிலும் பதிலுக்கு அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்டத் தகராற்றில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.

இருதரப்பு மோதல்

இதில், பரமசிவம் தரப்பில் சிலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காயம்பட்ட அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக, சம்பவ இடத்துக்கு வந்த கே.புதுப்பட்டி போலீஸார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி விசாரணை நடத்தினர். இந்தநிலையில், போசம்பட்டி கடைத்தெருவில் இதே பிரச்னையை முன்வைத்து இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. கட்டை, கற்கள், அரிவாள் போன்ற ஆயுதங்களால் ஒருவரை, ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

இந்தமுறை போலீஸாரின் சமாதான முயற்சி தோல்வியடைந்ததால், எஸ்.ஐ சரவணன், தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். பிரச்னையக் கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில்தான், போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்திலேயே அந்த இடத்தைவிட்டு இருதரப்பினரும் கலைந்து சென்றுள்ளனர். மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த தலா 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருதரப்பு மோதல்,20பேர் காயம்,பதற்றம்

சம்பவம் குறித்துத் தகவலறிந்த மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, போசம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கே.புதுப்பட்டி போலீஸார் இரண்டு தரப்பிலும் சேர்த்து 25 பேரைக் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.